*1*

 

மாநகரின் முக்கிய மையப்பகுதி, இதயம் என்று கூட சொல்லலாம். அத்தகைய பகுதியில் அமைந்துள்ள அகன்று விரிந்த சாலையில் அந்த நகரின் கால்வாசி பகுதியை தனக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு கம்பீரமாக அரண்மனை போன்றதொரு தோற்றத்தில் எழுந்திருந்தது அந்த பங்களா.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களின் மூலம் நேர்மையான முறையில் வர்த்தகத்தை நடத்தி வெற்றி கண்டது தான் அக்குடும்பம். தங்கள் குடும்ப தொழிலின் வெற்றிகரமான சாம்ராஜ்யத்தில் ஆழமாக நான்காவது தலைமுறையில் வேரூன்றி நடத்தி வருபவன் ரிச்சர்ட் பெர்னான்டஸ்.

ஆம்… ரிச்சர்டின் தாத்தா காலத்தில் அவனுடைய குடும்பம் கிருஸ்தவ மதத்தின்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டு இந்துவிலிருந்து கிருஸ்துவராக மதம் மாறி இருந்தார்கள்.

ரிச்சர்ட் தாத்தாவின் வளர்ப்பு, இளம் பிராயத்திலேயே பள்ளி செல்லும் ஒன்பதாவது வயதில் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டு விமானம் மூலம் பறந்து தொலைந்து போனவர்கள் தாம் அவனுடைய பெற்றோர். இன்று வரை விமானம் என்ன ஆனது என்றும் தெரியாது, அதில் பயணித்த பெற்றோரின் நிலையும் ஒருவருக்கும் தெரியாது.

கறிவேப்பிலை கொத்தாக ஒரே மகனை ஈன்று பாராட்டி, சீராட்டி பாசம் வைத்து வளர்த்திய ரிச்சர்ட்டின் பாட்டி தன் மகனின் இழப்பை தாங்காமல் செய்தி கேட்டு அந்த இடத்திலேயே மாரடைப்பு வந்து இறந்து போனார்.

வீடு நிறைந்திருக்க ஐந்து நபர்களை கொண்ட நிறைவான குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை எதிர்பாராத சூழலில் இரண்டென சுருங்கவும் முதலில் வில்லியம்ஸும் சற்று மனமுடைந்துப் போனார்.

பின்னர் ஒன்பது வயது சிறுவனின் நிலையை கருத்தில் கொண்டு அந்த வயதான காலத்தில் அவனுக்கு அனைத்து விதத்திலும் தான் தூணாக இருந்து தோள்கொடுத்து தாங்க ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த தொழிலையும் தான் ஒருவரே கவனித்தாக வேண்டும் என்ற சூழலில் பேரனை வீட்டில் தனித்திருக்க விட்டால் பெற்றோரின் இழப்பை எண்ணி மிகவும் வேதனைக் கொள்வான் என்றெண்ணி அவனை போர்டிங் ஸ்கூல் ஒன்றில் சேர்த்து விட்ட வில்லியம்ஸ் பின்பு காலில் சக்கரம் கட்டியவராக ஓரிடத்தில் நில்லாமல் தன் தந்தையின் தொழிலை நிலைக்கச் செய்ய என்று உடல்நலனில் அக்கறை செலுத்தாமல் ஊண், உறக்கமின்றி ஓட ஆரம்பித்தார்.

அதன்விளைவு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் தொழில் மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ரிச்சர்ட்டின் தலையில் பாரமாக வந்து விழுந்தது. வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவனை உட்கார கூட விடாமல் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தார் குடும்ப மருத்துவர்.

ஓடிவந்தவனின் கைகளில் வில்லியம்ஸின் கல்லீரல் மற்றும் பித்தப்பை உறுப்புகள் சிதிலமடைந்து இருப்பதற்கான ஆதாரத்தை வைத்தவர், நாட்களோ… மாதங்களோ எண்ணிக் கொள்ளுங்கள் என்று அவன் தோளை தட்டி விட்டு சென்றார்.

உணர்வின்றி தன் தாத்தாவின் அருகில் சென்றவனின் கரம்பற்றி அவர் கண்ணீர் உகுக்க சலனமடைந்தவன் அவருடைய கரத்தை ஆதரவாக பற்றி அழுத்தினான்.

தன் பேரனை தன்னந்தனியாக விட்டுச் செல்கிறோமே என்ற உணர்வே அவரை வெகுவாக தாக்க டாக்டர் சொன்ன மாத கணக்கிற்கு வாய்ப்பில்லாமல் நாட்கணக்கிலேயே அவனை விட்டு பிரிந்து சென்றார் வில்லியம்ஸ்…

“தம்பி!”

வீட்டு லானில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து தன் கம்பெனி ஆடிட்டர் சமர்ப்பித்த முக்கிய கணக்கு வழக்குகளை தன்னுடைய லேப்டாப்பில் சரிபார்த்து கொண்டிருந்த இருபத்திமூன்று வயது இளைஞனான ரிச்சர்ட் குரல் கேட்டு நெற்றி சுருங்க நிமிர்ந்துப் பார்த்தான்.

“ஓ… பாட்டி… ஊரிலிருந்து வந்து விட்டீர்களா? போன காரியம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா…” என்று வேகமாக ஆரம்பித்தவனது வார்த்தைகள் குழப்பத்துடன் இடையில் தேங்கி நின்றது.

தன் வீட்டில் அவனுடைய சிறுவயது முதலே கடந்த பதினைந்து வருடங்களாக சமையல் வேலை புரிந்து வரும் பரிமளம் பாட்டியை விசாரிக்கும் பொழுது தான் அவர் பின்னே நின்றிருந்த சிறுமியை கண்டு கேள்வியாய் அவரை ஏறிட்டான்.

“அது வந்து… தம்பி, ஊரில் விசேஷம் எல்லாம் உங்கள் தயவால் ஒரு குறையுமில்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்தது. என் பேத்தியின் திருமண நிச்சயத்திற்கு நீங்கள் வரவில்லை என்பது மட்டும் தான் குறை. அப்புறம்… இந்த பெண் என்னுடைய தூரத்து உறவுக்காரப் பெண். இதனுடைய சின்ன வயதிலேயே அவங்க அப்பா இறந்து விட்டார், அதைவிட மோசம் போன மாதம் இதனுடைய அம்மாவும் உடம்பு முடியாமல் இறந்து விட்டாள்!” என்று உரிய ஏற்ற இறக்கத்துடன் அவர் சோகமாக கூற, ரிச்சர்ட் அதிர்ச்சியோடு அந்த சிறுமியின் முகத்தை நோக்கினான்.

எந்த ஒரு சலனமுமில்லாமல் தெளிந்த நீரோடையாக சிவந்த முகத்துடன் பரிமளத்தின் பின்னே லேசாக மறைந்தபடி தலைக்குனிந்து நின்றிருந்தாள் அவள்.

“சொல்லிக் கொள்ளும்படி தாத்தா, பாட்டி, சொந்தக்காரங்கன்னு பெரியதாக யாரும் இந்த பெண்ணுக்கு இல்லை. இரண்டுங்கெட்டான் வயதுடைய பெண்ணை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள சுற்றியுள்ளவர்களும் தயங்குகிறார்கள். இது இருக்கிற இடத்திலும் சரியான பாதுகாப்பில்லை, உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. இப்பொழுது இருக்கிற சில குடிகார நாய்கள் வயது, வரம்பு வித்தியாசம் எதுவும் இல்லாமல் பொம்பளை என எழுதியிருந்தா கூட கேவலமான எண்ணத்தோடு தான் நடந்துக்கப் பார்க்கிறார்கள். அதுதான் மனது கேட்காமல் எதற்காக இந்த பிள்ளை வெளியே தனியாக இருந்து இந்த வயதில் சீரழிய வேண்டும் பாவம் என்று நம் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். இங்கே என்றால் எனக்கு கூடமாட ஒத்தாசை செய்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் என்ன சொல்றீங்க தம்பி இங்கேயே இருக்கட்டுமா?” என்று பவ்யமாக வினவினார்.

அவனுடைய சிறுவயது நினைவுகள் கண்முன்னே நிழலாட, தன்னை விட மோசமானதொரு சூழலில் இருக்கிறாளே இந்த பெண் என்று வருந்தினான் ரிச்சர்ட்.

“அதற்கென்ன பாட்டி தாராளமாக இருக்கட்டும், ஆனால் பார்க்க சிறு பெண் போல தோன்றுகிறாளே… வயது என்ன பள்ளிக்கு செல்லவில்லையா?”

அவளையே கவனித்திருந்தவனின் பார்வையில் கணத்தில் அவளது முகத்தில் லேசான சலனம் தோன்றி மறைந்து விழிகள் விரக்தியாய் அவனிடம் உயர்ந்தும் உயராமலும் மீண்டும் தழைந்துக் கொண்டது விழுந்தது.

“பன்னிரண்டு, பதிமூன்று வயதிருக்கும். கேட்டுப் பார்த்தேன் அதற்கு படிப்பில் அவ்வளாக ஆர்வமில்லையாம், எனக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்து உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி, வேறு எதுவும் வேண்டாம் என அழுகிறது!” என்று பாட்டி பேசப் பேச உணர்ச்சியற்று தரையை வெறித்தாள் அவள்.

“இந்த காலத்தில் பள்ளி இறுதிவரையாவது படிக்க வேண்டாமா? அதுதானே ஒரு பெண்ணுக்கு சிறந்த தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் கொடுக்கும்!” என எடுத்துரைக்க முயன்றான் ரிச்சர்ட்.

தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல வாயை திறவாமல் கற்சிலையென சமைந்திருந்தாள் அவள்.

“ப்ச்… பரவாயில்லை விடுங்கள் தம்பி இருக்கட்டும். அது அவங்க அம்மாவை நினைத்து ரொம்ப மனம் உடைந்துப் போயிருக்கிறது, கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்!” என்றார்.

அதற்கு மேல் தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவன் அவள் அங்கே தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தான்.

“ரொம்ப சந்தோசம் தம்பி!” என்றவர், “என்ன சும்மா நிற்கிறாய்? எவ்வளவு பெரிய மனது பண்ணி தம்பி உன்னை இங்கே தங்க சொல்கிறார்கள். ஒரு நன்றி கூட சொல்ல மாட்டாயா நீ?” என சிறுமியிடம் திரும்பி லேசாக அதட்டினார்.

அதில் மிரண்டு விழித்தவள் ரிச்சர்ட்டை மிரட்சியுடன் நோக்கி, “ரொ… ரொம்ப… தாங்…” என சற்று தடுமாறிவிட்டு லேசாக எச்சிலை விழுங்கி, “ரொம்ப தாங்க்ஸ் சார்!” என்று வேகமாக முடித்தாள்.

உள்ளுக்குள் பரிதாபம் ஊற்றெடுக்க அதை மறைத்து, “இருக்கட்டும் பரவாயில்லை… உன் பெயரென்ன?” என்று விசாரித்தான்.

“அருந்ததி!” என்றவளின் விழிகள் பதட்டத்துடன் தரையில் எதையோ தேடி அலைமோதியது.

“சரிப்பா நான் உள்ளே போய் வேலையைப் பார்க்கிறேன்!” என்றவாறு அருந்ததியை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றார் பரிமளம்.

அவர் பின்னே தன்னுள் ஒடுங்கியபடி செல்லும் அந்த சிறுமியை கண்டு வேதனைப் பிறந்தது ரிச்சட்டிற்கு. குடும்பத்துடன் வசிக்கும் பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கே இவ்வுலகில் பாதுகாப்பில்லை எனும்பொழுது பெற்றோரை இழந்து தனிக்குருத்தாக நிற்கும் அவளுடைய பேரச்சம் அவனுக்கும் விளங்கதான் செய்தது.

இன்றோடு அருந்ததி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது ரிச்சர்ட் முன் அதிகமாக அவள் வெளியே வந்ததே இல்லை. எப்பொழுதுமே அதிகமாக சமையலறையினுள் அல்லது அவளும், பரிமளம் பாட்டியும் தங்கியிருக்கின்ற அறையிலே தான் தஞ்சமடைந்திருப்பாள். வெளியே தோட்டத்தின் புறம் கூட அவள் நின்று பார்த்ததில்லை அவன்.

‘என்ன இவள்… யார் முகத்தையும் பார்க்காமல், வெளியாட்கள் யாரிடமும் பேசிப் பழகாமல் இப்படியே உள்ளேயே அடைந்துக் கிடப்பதும் அவளுக்கு நல்லதில்லையே? நாளை எதிர்பாராத ஏதோ ஓர் சூழலில் இவள் தனித்து நின்று தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் எப்படி அதனை சமாளிப்பாள்?’ என கவலையடைந்தான்…

மாலை மீட்டிங் முடிந்து வீட்டிற்குள் நுழையும் பொழுதே தலைவலி மண்டையைப் பிளக்க துவங்க லேசாக நெற்றியை அழுத்தியபடி உள்ளே வந்தவன் காபி கேட்க வேண்டி கிட்சனுக்கு சென்றான்.

அங்கே பரிமளம் செய்துக் கொண்டிருந்த வேலையை கண்டு அதிர்ந்தவன், “என்ன பாட்டி செய்கிறீர்கள்?” என சத்தமிட்டான்.

சற்றே உயரமான ஸ்டூல் ஒன்றின் மீதேறி மேலே லாப்டில் இருக்கும் எதையோ எடுக்க போராடிக் கொண்டிருந்தவர் அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பினார்.

“இல்லைப்பா… கீழே வைத்திருந்த டப்பாவில் இருந்த புளி காலியாகி விட்டது. அதுதான் வருட சாமான்கள் வாங்கும் பொழுது வாங்கி வைத்திருந்த மீதிப் புளி மேலே பெரிய சம்படத்தில் இருக்கிறது அதை எடுக்கலாம் என்று தான் முயன்று கொண்டிருந்தேன்!” என்றார் தடுமாற்றத்துடன்.

“ரொம்ப நன்றாக எடுத்தீர்கள் நீங்கள்… கீழே விழுந்தால் என்னவாகிறது? எங்கே அந்த பெண்? அவள் சிறுப்பெண் உங்களை விட உயரமாகவும் இருக்கிறாள் இல்லை… அவளை எடுக்க சொல்ல வேண்டியது தானே, ஏன் இந்த வயதான காலத்தில் நீங்கள் ஸ்டூல் மேல் எல்லாம் ஏறிக்கொண்டு இப்படி தடுமாறுகிறீர்கள்?” என்று அதட்டினான் ரிச்சர்ட்.

“அச்சோ இல்லைப்பா… அந்த பிள்ளையிடம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக ஏறி எடுத்து கொடுத்திருக்கும். ஆனால் அது பெரிய மனுஷியாகி மூலையில் உட்கார்ந்து இருக்கிறது. நான்கு நாட்கள் ஆகிறது தீட்டு கழிக்காமல் வீட்டிற்குள் அழைக்க கூடாது!” என்றார்.

ஓ… என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியவில்லை சற்றே தடுமாறியவன் நிலைமையை சமாளிக்கும் விதமாக, “சரி நகருங்கள்… நான் எடுத்து தருகிறேன்!” என்று முன்னே வந்தான்.

“இல்லை வேண்டாம் தம்பி… இருக்கட்டும், இருக்கட்டும். நான் வாட்ச்மேனை அழைத்து எடுத்து தர சொல்கிறேன்!” என்று மரியாதை நிமித்தம் அவனை அவசரமாக தடுத்தார் பரிமளம்.

“பரவாயில்லை… இந்த ஒருமுறை நானே எடுத்து தந்து விடுகிறேன்!” என்று மேலேறி சம்படத்தை எடுத்து கீழே வைத்தான்.

“ஐயோ… இந்த வேலையெல்லாம் நீங்கள் செய்கிறீர்களே, மன்னித்து கொள்ளுங்கள் தம்பி!” என்று பதறிப் போனார் அவர்.

“ப்ச்… இருக்கட்டும், எனக்கு தலைவலிக்கிறது முதலில் சூடாக ஒரு கப் காபி கொண்டு வாருங்கள்!” என்று நாசுக்காக கத்தரித்து விட்டு மடமடவென்று தன்னறைக்கு சென்றான்…

வீட்டில் அமைந்துள்ள தன்னுடைய அலுவலக அறையின் மேஜை முன்னே சுழல் நாற்காலியில் தளர்வாக அமர்ந்திருந்து தன்னெதிரே கிடந்த பைலில் இருந்து அடுத்த வாரம் வரவிருக்கும் டென்டருக்கு தேவையான குறிப்புகளை கவனமாக எடுத்து கொண்டிருந்தவனை கதவின் மெல்லிய ஒலி கலைத்தது.

“யெஸ்…”

ரிச்சர்ட் குரல் கொடுத்தவுடன் கதவை திறந்துக் கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்த அருந்ததி வேகமாக அவனிருக்கும் இடத்தை அவசர ஸ்கேன் செய்துவிட்டு விழிகளை தாழ்த்தியபடி கையில் காபி டிரேயோடு அருகில் வந்தாள்.

விழிகளில் கனிவு பிறக்க அவள் முகத்தை நோக்கியவன், காபி என்றவாறு தன் முன்னே கை நீட்டியவளின் குரல் வெளிவந்ததா இல்லையா என்ற ஆராய்ச்சியுடன் கப்பை எடுத்தான்.

அதற்காகவே காத்திருந்தது போல் அம்பென அவள் வெளியே விரையப் பார்க்க, “நில்!” என்று அவளை ஒற்றை வார்த்தையில் நிறுத்தினான் ரிச்சர்ட்.

முகத்தில் கலவரம் பரவ அவனிடம் திரும்பியவளின் தலை தழைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *