*9*

 

நிறைமதியின் கனல் வீசும் விழிகளை பார்த்த மன்வந்த், ‘ அடேய் பாவி… ஏன்டா கொழுந்து விட்டு எரிகின்ற அக்னியில் மேலும் எண்ணை கொப்புரையை கொட்டுகிறாய்?’ என்று முகேஷை வரைமுறை இன்றி மனதினில் வார்த்தைகளால் வறுத்தெடுத்தான்.

நம் மதியின் அண்ணனோ அதற்கும் மேல் அவளின் வயிற்றெரிச்சலை அமோகமாக கிளப்பிக் கொண்டிருந்தான்.

“ஹேய்… இப்பொழுது தான் உங்கள் இருவரையும் நான் சரியாக பார்க்கிறேன்!” என விழிகளை உருட்டிவிட்டு, “அம்மா… இங்கே வேடிக்கையை பார்த்தீர்களா… எதிரியும் எதிரியும் ஒரே நிறத்தில் உடைகள் அணிந்திருப்பதை… ஹஹா… சரி காமெடி…” என்று அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

முகேஷின் ரசனைகெட்ட கேலியில் (அவளைப் பொறுத்தவரை) ஆத்திரத்தில் முகம் சிவந்தவள் விறுவிறுவென்று உணவுகூடத்திற்கு தனியாக சென்றாள்.

‘ஹும்… திவ்யமாய்… மொத்தமாய்… எனக்கெதிராக அனைத்தையும் பேசி ஊற்றி மூடி விட்டான்!’ என நொந்துப் போய் நின்றான் மனு.

சூழ்நிலையை சரியாக புரிந்துக் கொண்ட கல்பனா தான், “டேய்…” என்று மகனை அதட்டிவிட்டு விழிகளால் மதியை சுட்டிக் காட்டினார்.

அதன்பின்னரே தன் தவறை உணர்ந்தவன் சமாளிப்பாக மனுவிடம் சிரித்து வைத்து, “சரி போகலாமா?” என்றவாறு வேகமாக உணவறைக்குள் நுழைந்தான்.

“நான் வரவில்லை, கொஞ்சம் மறந்து இருந்தவளையும் முழுவதுமாக கிளப்பி விட்டுவிட்டு என்னை வேறு கூப்பிடுகிறாயா நீ!” என்று முறைத்தான் அவன்.

“அது சும்மா மாமா… விளையாட்டாக பேசினேன். அவள் ரொம்ப டென்சன் ஆகி விட்டாள்!”

“ஆமாம்… உன் தங்கையை பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது!”

“சரி சரி வாங்க… இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இரண்டு பேரும் இப்படி கண்ணாமூச்சி ஆடுவீர்கள்!” என்று அவன் கரம்பற்றி உள்ளே இழுத்து சென்றான்.

முகேஷ் பழைய சம்பவத்தை நினைத்து ஆறுதல் சொல்லி இருந்தாலும் அது புதிய பிரச்சினைக்கும் சரியாக பொருந்திப் போவதை யோசனையுடன் உணர்ந்தபடி சென்று அவர்களோடு அமர்ந்தான் மன்வந்த்.

முதலில் மதி அவளை தொடர்ந்து கல்பனா, முகேஷ் என்று அமர்ந்திருக்க கடைசியாக இருந்தவனுக்கு அவளுடைய முகத்தை கூட சரியாக பார்க்க முடியவில்லை.

‘என்ன கொடுமைக்கு நான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிறேன் என எனக்கு ஒன்றும் புரியவில்லை…’ என்று புலம்புபவனின் குரல் முகேஷை சென்று அடைந்து விட்டதோ என்னவோ அவன் இவனோடு லொடலொடவென்று வளவளக்க ஆரம்பித்து விட்டான்.

“அம்மா போதும்… நான் எழுந்துக் கொள்கிறேன்!” என கல்பனாவிடம் கூறிவிட்டு எழுந்த நிறைமதி தன் போக்கில் நேராக சென்று கை கழுவி வந்தவள், “ஒகேம்மா… நான் வீட்டிற்கு போகிறேன், குட்நைட்!” என்று கிளம்பி விட்டாள்.

“ஏய்… நீ எப்படி தனியாக போவாய்? அப்பா, அம்மா முக்கியமான உறவினர்களை அழைத்துக் கொண்டு முன்பே வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள். நான் இங்கே மண்டபத்தில் தங்கி விடுவேன், நீ முகேஷுடன் கிளம்பு!”

அம்மாவின் சொல் கேட்டு, “ஆமாம்… ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு, இதோ நான் முடித்து விடுவேன்!” என்று வேகவேகமாக உணவை அள்ளி வாய்க்குள் திணித்தான் முகேஷ்.

அதைக்கண்டு சங்கடமானவள், “ப்ச்… அண்ணா நீ மெதுவாக சாப்பிடு, நான் வெயிட் செய்கிறேன்!” என்று எதிரே இருந்த காலி வரிசையில் அமர்ந்தாள்.

மதி தன்னெதிரே அமரவும், இவ்வளவு நேரமாக காதில் இரத்தம் வருகின்ற அளவு மாமன் மகனின் பேச்சை சகித்துக் கொண்டு கேட்டிருந்தது வீண் போகவில்லை என்று தனக்கு கிடைத்த ஜாக்பாட்டில் குஷியாகி சுவாரஸ்யமாக அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான் மன்வந்த்.

கல்பனாவின் பார்வைக்கு தெரியாமல் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டவனுக்கு நடுவில் இருந்த முகேஷ் முழுவீச்சில் உணவில் கவனம் செலுத்தியது மிகவும் வசதியாகப் போயிற்று.

அண்ணன் நிதானமாக சாப்பிடட்டும் பாவம்… என்று அவசரத்தில் எதிரே அமர்ந்து விட்டவளுக்கு தாமதமாக தான் மனுவின் நினைவு மூளையில் உறைத்தது. அதன்பின் சிறுபிள்ளை போல் பதறி எழுந்து வேறு இடம் செல்வது என்பது அசிங்கமாக தோன்றும் என்றே அசையாது வீற்றிருந்தாள் அவள்.

மன்வந்தின் விழிகளை எதிர்கொள்ள பிடித்தமின்றி பாராமுகமாக முகத்தை வேறுபுறம் திருப்பி இருந்தவளின் உள்ளுணர்வு அவனின் குறுகுறுப் பார்வையை அவளுக்கு சரியாக உணர்த்த, ‘இவன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்?’ என்று கடுகடுவென உர்ரென்று அமர்ந்து இருந்தாள் நிறைமதி.

அவளின் நிலைப் புரிந்து ஒருபுறம் சிரிப்பும், மறுபுறம் வருத்தமும் என முரண்பட்ட உணர்வில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தான் நம் நாயகன்.

“கிளம்பலாமா மதி!”

ம்… என்றவாறு சகோதரனுடன் அமைதியாக நடந்தாள் அவள்.

மண்டபத்தின் வாயிலை அடைந்தவுடன் அருகில் வந்தவனிடம் திரும்பி, “சரி மாமா… குட் நைட், காலையில் பார்க்கலாம்!” என அவன் கரம்பிடித்து அழுத்திவிட்டு கிளம்பினான் முகேஷ்.

“ஓகே பார்!” என்று அவன் தோள் தட்டியவனின் விழிகள் இவனுக்கு எதிர்த்திசையில் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவளின் மீது ஒருமுறை படிந்து மீண்டதற்கு அடையாளமாக அவனிடமிருந்து மெல்லிய உஷ்ணப் பெருமூச்சொன்று ஏக்கத்துடன் வெளியேறியது.

‘சரியான அழுத்தக்காரி… பிடிவாதம் பிடித்தவள், இவளை எல்லாம்…’ என்றவனின் மனம் அதற்குமேல் சிந்திக்க முடியாமல் சோர்ந்து போக, தளர் நடையுடன் தன்னறை நோக்கி சென்றான் மன்வந்த்.

முன்தின இரவு முழுவதும் பல்வேறு மனக் கவலைகளினால் சரியான உறக்கமின்றி தவித்திருந்தவள் அப்பொழுது தான் லேசாக கண்ணயர ஆரம்பித்திருந்தாள். அந்த விடியற்காலை நான்கு மணி அளவில் ஜோதி வந்து அவளை உலுக்கி எழுப்பி விடவும் அடித்துப்பிடித்து எழுந்தவள் அன்னையை கண்டு மலங்க மலங்க விழித்தாள்.

“என்னம்மா?”

மகளின் முகத்தை கூர்ந்து பார்த்திருந்தவர், “குளித்து கிளம்பி மண்டபத்திற்கு போக வேண்டுமே பாப்பா… நான் தயாராகி விட்டேன், நீ எழுந்தால் உனக்கு வேண்டுவதை எடுத்துக் கொடுத்துவிட்டு நான் மற்ற வேலைகளை பார்க்க சரியாக இருக்கும்!” என்றார் கவலையுடன்.

“ம்… இதோ குளிக்கப் போகிறேன்!” என்றவளுக்கு அங்கே சென்றால் மீண்டும் மனுவை எதிர்க்கொள்ள வேண்டுமே என்ற பதற்றத்தில் இதயத்தை பிசைந்தது.

தன்னிடம் எதையும் கேட்கவோ, பேசவோ அவன் முயற்சிக்கவில்லை என்றாலும், அவன் மீது இவளுக்கு எத்தனை தான் கோபம் இருந்தாலும் இவள் மனதிற்கு புரியாத ஏதோ ஒன்று கத்தரியின் உள்ளிருந்து நெளியும் புழுவாக அவளை குடையோ குடையென்று குடைந்து இயல்பாய் இருக்க விடாமல் இம்சித்தது.

”மதி…” என ஜோதி அவள் தோளை தொடவும் விருட்டென்று எழுந்தவள், “இதோ போகிறேன்மா!” என்று வேகமாக குளியலறைக்கு சென்றாள்.

“ஏய்… துண்டு எல்லாம் யார் எடுத்துப் போவார்கள்?”

ஓ… என்று மீண்டும் வந்து கட்டிலில் கிடந்தவற்றை அள்ளியெடுத்து செல்லும் மகளை பயத்துடன் பார்த்தவர் நெஞ்சில் கைவைத்தபடி அமர்ந்து விட்டார்.

‘நேற்றிலிருந்து என்னவாயிற்று இந்தப் பெண்ணிற்கு… கடவுளே… இவள் நடந்துக் கொள்ளும் விதம் எதுவும் சரியில்லையே, திருமணம் வேண்டாம் என்கிறாள். தன்னுணர்வில் இல்லாமல் மனம் போன போக்கில் செயல்படுகிறாள், நேற்றிரவு தலைவலி என்று மணமேடையில் நிற்காமல் அறைக்கு சென்று படுத்து விட்டாள்… நம்மிடமிருந்து ஏதாவது மறைக்கிறாளா… என்ன பிரச்சினை என்று புரியவில்லையே…’

“அம்மா… இந்தப் புடவை தானே…” என்று வினவும் மகளை நிமிர்ந்து பார்த்தவர் மெல்ல தலையசைக்க, அதை எடுத்து தன் உடலில் சுற்ற ஆரம்பித்தாள் மதி.

மெஜந்தா நிறத்தில் கையகல தங்க சரிகை கொண்ட மென்பட்டுப் புடவை, உடலோடு ஒட்டி அம்சமாய் அவளுக்கு அழகாக பொருந்தியது.

புடவை முந்தானையை மடிப்பெடுத்து பின் செய்யும் பொழுது அவளையும் அறியாமல் மனம் மன்வந்திடம் தாவியது.

‘நேற்று என்னுடைய புடவைக்கு பொருத்தமாக அவன் எப்படி உடை அணிந்து வந்திருப்பான்… இன்று இந்த நிறத்தில் அவனிடம் எதுவும் சட்டை இருக்குமா… ஆனால் பொதுவாக ஆண்கள் இந்த நிறத்தில் எல்லாம் சட்டை அணிய மாட்டார்களே…’

“மதி… இந்த புடவைக்கு பொருத்தமாக கல் நெக்லஸ், கல் ஜிமிக்கி என்று எடுத்து வைத்திருக்கிறேன் அதை போட்டுக்கொள்!”

“ம்… சரிம்மா!”

‘என்ன பிரச்சினை என்று இவளிடம் கேட்கலாமா… வேண்டாம், சுற்றிலும் உறவினர்கள் இருக்கும் சூழ்நிலையில் தனிமையில் பேசுவது கூட ஆபத்து தான். திருமணம் முடியட்டும், இன்றிரவு எப்படியாவது இவளிடம் விஷயத்தை வாங்கி விட வேண்டும்!’

“அம்மா… இதை போட்டு விடுங்கள்!” என்று தன்னிடம் நெக்லஸை நீட்டுபவளிடம் இருந்து அதை வாங்கியவர் சங்கிலியில் கொக்கியை மாட்டி அழுத்தி விட்டார்.

“சரி நீ குமரேசன் அப்பாவுடன் மண்டபத்திற்கு கிளம்பி விடுகிறாயா… நானும், அப்பாவும் அனைவரும் கிளம்பியவுடன் வீட்டை பூட்டிவிட்டு வருகிறோம்!” என்று மகளை அவருடன் அனுப்பி வைத்துவிட்டு சன்னப் பெருமூச்சுடன் அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார் ஜோதி.

“ஹரீஷின் திருமணம் வருகிறது என மாற்றி மாற்றி அதை ஒட்டி பல திட்டங்கள் இப்பொழுது தான் போட்டது போல இருக்கிறது. அதற்குள் திருமணம் முடிந்து விட்டது பாருங்கள்!” என்று குமரேசனிடம் நண்பர் ஒருவர் கேலியாக பேசிக் கொண்டிருக்க புன்னகையுடன் அதைக் கேட்டபடி அருகில் நின்றிருந்தார் முத்துகுமார்.

திருமண வைபவம் முடிந்து மணமக்களுக்கு பரிசு அளிக்கவும் அவர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் என மேடையில் உறவினர் மற்றும் நட்புக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

“ஏன்பா முத்து… பிள்ளை ரொம்பவும் களைப்பாக தெரிகிறாளே, நேற்றே தலைவலி என்று அவள் ஓய்வு எடுத்ததாக கல்பனா கூறினாள். பேசாமல் மதியை கீழே வந்து இங்கே சேரில் அமர்ந்துக் கொள்ள சொல்!” என்று நண்பனை முடுக்கினார் குமரேசன்.

“ப்ச்… நீ சும்மா இருப்பா, அவளுக்கு முடியவில்லை என்றால் எதை பற்றியும் யோசிக்க மாட்டாள் தன்னால் கீழே இறங்கி வந்து விடுவாள்!” என்று சகோதரனுக்கு வருகின்ற மொய் பணத்தையும், அன்பளிப்பையும் பொறுப்பாய் மேடையில் நின்று வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் மகளை பார்த்தபடி கேலியுடன் கூறினார் முத்து.

அவளின் குணம் அறிந்தவரும் அதுவும் சரி தான் என ஒத்துக்கொண்டு வேறு விஷயங்களை பேசத் துவங்கினார்.

காலையில் வந்ததிலிருந்தே மதியின் மீது வைத்தப் பார்வையை அகற்ற முடியாமல் அவ்வப்பொழுது சுற்றம் உணர்ந்து சிரமப்பட்டு மீட்டெடுத்துக் கொண்டிருந்த மன்வந்த் அவளை அடையும் வழி தெரியாது கலங்கிப்போய் அமர்ந்திருந்தான்.

நடந்து முடிந்துவிட்ட நிகழ்வில் அவளின் மீதான அவனின் உரிமை பற்றியும் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

மனு, மதியின் கண்ணாமூச்சி விளையாட்டு ஒருபுறமிருக்க, எவரின் கவனத்தையும் கவராதிருந்த இந்த ஊமை நாடகம் சரியாக அலமேலுவின் கழுகு கண்களில்பட்டு கடந்த ஒருமணி நேரமாக பேரனை கண்கொத்திப் பாம்பாக கவனித்திருந்தார் அவர்.

அறையில் இருந்தவர்களை எல்லாம் சீக்கிரமாக மண்டபத்திற்கு போகலாம் என வேகமாக கிளம்பச் செய்திருந்தவன் இங்கு வந்ததிலிருந்து நிறைமதியையே வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதை கண்டு மனதிற்குள் திடுக்கிட்டார் அவர்.

இரவு நிகழ்ச்சிகளின் பொழுது மதி பாதியிலேயே மேடையிலிருந்து அறைக்கு சென்றுவிடவும் அருகில் இருந்தாலும் பேரனின் மனதையும், பார்வையையும் தெரிந்துக் கொள்ளாமல் இருந்தவருக்கு இப்பொழுது லேசாக விஷயம் பிடிப்பட்டது போல் இருந்தது.

ஆனால் அதை அவர் மனம் விரும்பவில்லை. அவரை பொறுத்தவரை நிறைமதி எப்பொழுதும் ஒரு கட்டுக்குள் அடங்காமல் வளர்ந்து நிற்பவள். பெரியவர், சிறியவர் வித்தியாசமின்றி தன் மனதில் சரியென தோன்றும் விஷயங்களுக்காக எவரிடமும் வாதத்தில் ஈடுபடு தயங்காதவள். அவளையெல்லாம் தன் வீட்டிற்கு மருமகளாக தன்னால் அழைத்துக் கொள்ள முடியாது என்று உறுதி பூண்டவர் உடனே பேரனை வேகமாக அழைத்தார்.

“மனு… திருமணம் தான் முடிந்து விட்டதே, நாம் கொஞ்சம் ஓய்வாக அறைக்கு சென்று வரலாமா?”

ம்… என அவரிடம் திரும்பியவன், “நீங்களும், தாத்தாவும் வேண்டுமென்றால் கிளம்புங்கள் பாட்டி. எப்படியும் மாலைக்குள் ஊருக்கு கிளம்ப வேண்டும், அதுவரை நான் இங்கேயே மற்றவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்!” என்றான் அமைதியாக.

‘இவன் பார்க்க மட்டும் செய்யாமல் அவளிடம் எதுவும் பேச வேறு செய்து விடுவானோ…’ என திக்கென்று அதிர்ந்தவர், “இல்லை இருக்கட்டும்பா… நீ சொல்வது சரி தான். ஓய்வு… நாம் இரவு ஊரில் போய் கூட எடுத்துக் கொள்ளலாம்!” என்று சமாளித்தவாறு அவனை அவளிடமிருந்து திசைதிருப்பும் வழி புரியாது தவிக்கத் தொடங்கினார்.

இவரும் நிறைமதியை தனது கூரிய விழிகளால் பலமுறை படம்பிடித்தும் அவளின் கடைக்கண் பார்வை கூட மன்வந்த் புறம் திரும்பாதது கண்டு சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

‘பரவாயில்லை… அந்த திமிர் பிடித்தவளிடம் இன்னமும் அதே ரோஷம் தான் குடிக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது!’ என்று அலட்சியமாய் எண்ணிக் கொண்டவருக்கு, அவள் பருவம் அடைந்தப் பொழுது சீர் கொடுக்கவென்று வாங்கி சென்ற தங்கச் சங்கிலியை அவள் ஏற்க மறுத்துவிட்டதாக அதே வேகத்தில் திரும்பி கொண்டு வந்து தன்னிடம் கொடுத்து மருமகள் பெருமையுடன் புலம்பியது நினைவு வந்தது.

“மனு… நாம் போய் அப்படி உட்காரலாமா?” என்று மேடையை பாதியளவிற்கு மறைக்கும் ஓரிடத்தை சுட்டிக் காண்பித்து கேட்டார் அலமேலு.

“ப்ச்… என்ன பாட்டி?” என்றான் அவன் அலுப்புடன்.

“இல்லைப்பா… இங்கே மேடையின் முன்னால் அமர்ந்திருப்பது போவோர், வருவோர் எல்லோரின் கவனத்தையும் கவரும்படியாக இருக்கிறது. அங்கே என்றால் கொஞ்சம் தளர்வாக கால் நீட்டி அமர்ந்துக் கொள்வேன்!”

“சரி வாங்க… அதற்கு தான் உங்களை அறைக்கு போக சொன்னேன்!” என்று எழுந்தவன் பாட்டியின் கரம்பற்றி அழைத்து சென்றான்.

‘உன்னை இந்த மாதிரி நிலைமையில் இங்கே தனியாக விட்டுச் செல்வதா… நீ எந்த நேரத்தில் என்ன செய்வாயோ என்று அங்கே அறைக்குள் கிடந்து புலம்பி தவிப்பதற்கு பதிலாக நான் உன்னை என் கண் பார்வையில் நிம்மதியாக வைத்துக் கொள்வேன்!’

அலமேலு காண்பித்த இடத்தில் வந்து அமர்ந்தவனுக்கு அங்கிருந்து நிறைமதியை சரியாக பார்க்க முடியாமல் எரிச்சல் மூண்டது.

‘இது என்ன? இங்கிருந்து பார்த்தால் அவள் முகம் சரியாகவே தெரியவில்லை!’ என தவித்தவனுக்கு பாட்டி அதற்காக தான் தன்னை இப்படி தள்ளிக்கொண்டு வந்து விட்டார் என்று சிறிதும் சந்தேகம் தோன்றவில்லை.

ஏமாற்றத்தில் சுருங்கிய பேரனின் முகம் கண்டு நிம்மதி அடைந்தவர் நிதானமாக அக்கம்பக்கத்தில் உள்ளோரை பார்வையால் அலச ஆரம்பித்தார்.

இவர்களுக்கு சிறிது தள்ளி வலது புறத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. கிட்டத்தட்ட மனுவின் வயதுடைய பையன் ஒருவனும், அவனுடைய அப்பா, அம்மா, மூத்த சகோதரி போன்று இருந்தவர்கள் குடும்பம் சகிதமாக அமர்ந்து மேடையை பார்த்து தங்களுக்குள் எதையோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

அடுத்த பத்து நிமிடங்களில், “இப்படி உட்கார் பாப்பா…” என்கிற நவநீதத்தின் குரலில் அலமேலு திரும்பி அருகினில் பார்க்க, சற்று முன் அவர் பார்த்திருந்த குடும்பத்தினரிடம் மதியை அழைத்து வந்து அமர வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

“என்ன பாட்டி?” என்று அவரிடம் கேட்டவாறே மற்றவரிடம் பொதுவாக முறுவலித்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் தயக்கத்துடன் அமர்ந்தாள் நிறைமதி.

அருகில் வரும் பொழுதே புருவ மத்தியில் சிறு முடிச்சுடன் தன்னை கூறுப் போடும் மன்வந்தின் பார்வையை மின்னல் வேகத்தில் கண்டுவிட்டு விழிகளை திருப்பிக் கொண்டு வந்தவளுக்கு அவன் பார்வை வட்டத்தில் அமர்வது சங்கடமாக இருந்தது.

காலையில் இருந்து மாற்றி மாற்றி தான் செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தவளுக்கு தற்காலிகமாக அவனின் நினைவு ஒதுங்கிப் போயிருந்தது.

“ம்… இவள் தான் என் பேத்தி நிறைமதி, நான் சொன்னேன் அல்லவா… புத்திசாலிப் பெண், இங்கே உள்ள பள்ளியில் பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!” என்று அவர்களிடம் அறிமுகப்படுத்தினார் நவநீதம்.

அவளிடம் அவர்களின் உறவுமுறையை அவர் எடுத்துக் கூறவும் மீண்டும் அவர்களிடம் மதி ஒரு பொதுவான புன்னகையை சிந்த, மனுவின் உடல் ஏதோ ஓர் யூகத்தில் விறைத்து இறுகியது.

அங்கிருந்தவன் இவளிடம், “ஹாய்…” என எதையோ பேச முயல, வெடுக்கென்று பெரும் ஓசையுடன் நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்த மன்வந்த் விறுவிறுவென்று மண்டபத்தின் தோட்டத்திற்கு செல்லும் பக்கவாட்டு வாயிலில் சென்று நின்றுக்கொண்டு தனது அலைபேசியை கையில் எடுத்து சம்பந்தமில்லாமல் அதை நோண்ட ஆரம்பித்தான்.

அவன் எழுந்த வேகத்தில் மதியின் தேகம் அவளையும் அறியாமல் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. இங்கிருந்து பார்க்கும் பொழுதே அவனின் இறுகிய முகம் பக்கவாட்டில் நன்றாக தெரிய, என்னவென்று புரியாமல் இவளின் இதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது.

அவளை சுற்றி அமர்ந்து இருந்தவர்களின் பார்வையும் ஒன்றும் புரியாமல் ஒருமுறை அவனை தொட்டு மீண்டுவிட்டு தங்களின் பழைய உரையாடலை தொடர்ந்தது.

மனுவின் நடவடிக்கையால் அங்கு நடப்பதை தற்பொழுது புரிந்துக் கொண்ட அலமேலுவிற்கும் பேரனின் கோபம் பார்த்து ஒரு கணம் மனம் பதைபதைத்து தான் போனது.

“மதி… நேற்றிரவே உன்னை பார்த்து பிடித்துப்போய் இவர்கள் மகனுக்கு என்னிடம் பெண் கேட்டார்கள். சரி முதலில் திருமணம் முடியட்டும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். இப்பொழுது ஊருக்கு கிளம்புவதால் அவளை உறவினள் என்கிற முறையிலாவது எங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்துங்களேன் என்று இந்த அத்தை கேலி செய்யவும் தான் உன்னை இவர்களிடம் அழைத்து வந்தேன்!” என்று சிரித்தார் நவநீதம்.

அதைக்கேட்டு மதியின் முகம் பேயறைந்தது போல் மாற, விழிகள் அவளையும் அறியாமல் மன்வந்திடம் நான்கு கால் பாய்ச்சலில் மின்னலென பாய்ந்தோடியது. அவன் கோபத்தின் காரணம் இப்பொழுது இவளுக்கு தெளிவாகப் புரிய, அச்சத்தில் நெஞ்சம் படபடக்க செய்வதறியாது நடுங்கிப்போய் அமர்ந்திருந்தாள் அவள்.

அவர்கள் பேசுவதை பார்த்திருந்த அலமேலு சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டவர் பேரனை சமாதானப்படுத்தவென்று எழுந்து மெதுவாக அவனருகே சென்றார்.

நிறைமதி தான் அவனையே பதற்றத்தோடு பார்த்திருந்தாளே தவிர, மன்வந்தின் பார்வை மறந்தும் அவள்புறம் திரும்பவேயில்லை.

“மனு…”

ம்… என்றவன் அவரிடம் திரும்பாமல் வெளியே வெறித்தபடி நிற்க, அவன் மனம் தனக்கு தெரிந்து விட்டதாக காண்பித்து கொள்ளக் கூடாது என்று அவனிடம் கவனமாக பேச்சுக் கொடுத்து அங்கிருந்து கிளப்ப முயன்றார் மூதாட்டி.

“ஏன்பா இப்படி வந்து தனியாக வெயிலில் நிற்கிறாய்?”

“என் வாழ்க்கையே அப்படித்தான் கொடும்வெயிலில் காய்கிறது. இப்பொழுது இதற்கு என்ன?” என்றான் அவன் விட்டேற்றியாக.

பேரனின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததற்கு அவரும் ஒரு காரணம் என்பதால் துக்கம் தொண்டையை அடைக்க கலங்கிய விழிகளோடு அவன் தோளை தொட்டவர், “உனக்கென்னடா ராஜா…” என்று அவர் மேலே பேசும் முன் கடுஞ்சீற்றதுடன் திரும்பினான் மன்வந்த்.

“போதும்… உங்களின் எந்த சமாதானமும் எனக்கு தேவையில்லை, எல்லாம் கேட்டு கேட்டு வெறுத்து விட்டது!” என அடிக்குரலில் கத்தியவன், “இன்னமும் நான் எதை எதை சகித்துக் கொண்டு என் நாட்களை கடத்த வேண்டுமோ தெரியவில்லை!” என்றான் முழுமையாக வாழ்க்கையை வெறுத்து விட்டவனாக.

‘இதென்ன பேச்சு… வாழ்க்கை முடிந்து வயோதிகத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பவன் போல்…’ என்று நெஞ்சம் பதைத்தவர் அதற்குமேல் தன் பேரனின் துயர் தாங்க முடியாது தன்னுடைய அகம்பாவம் விட்டு கீழிறங்கி வந்தார்.

“நீ மதியை விரும்புகிறாயாப்பா?” என்றார் தயக்கத்துடன்.

ஒரு முழு நிமிடம் அசையாமல் அப்படியே நின்றிருந்தவன் பின் மெதுவாக திரும்பி அவரை நேர்ப்பார்வையாக வெறித்து, “அவள் யார் தெரியுமா?” என்றான் கோபமாக.

‘இவன் என்ன சொல்ல வருகிறான்?’

கண்கள் இடுங்க தன்னை புரியாமல் பார்த்தவரை சளைக்காமல் எதிர்ப்பார்வை பார்த்துவிட்டு, “ஆறு மாதங்களுக்கு முன் நான் தாலி கட்டிய என்னுடைய மனைவியை தான் இன்று இங்கே இன்னொருவனுக்கு திருமணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்!” என்று முகம் முழுவதும் ஆத்திரத்தில் சிவந்திருக்க பேசியவனின் பேச்சை கேட்டு உச்சபட்ச அதிர்ச்சியில் அலமேலுவிற்கு மயக்கம் வருவது போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *