*40(2)*

 

“நீங்கள் சொல்வது ரொம்ப சரி… குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அப்புறம் நீங்கள் பின்பற்றும் பாடத்திட்டங்கள் பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லையே… அதைப் பற்றியும் சொல்லுங்கள்!”

“ம்… நான் ஏற்கனவே கூறியது போல் அரசினர் பள்ளியில் படித்து வெளிவந்த டாக்டர்.அப்துல் கலாம், ஹச்.சி.எல் நிறுவனர் திரு.ஷிவ் நாடார், இஸ்ரோ தலைவர் டாக்டர்.சிவன் போன்றோர் அந்த அடிப்படை படிப்பறிவை வைத்து தானே தங்கள் மேல்படிப்புகளை சிறந்த முறையில் கல்லூரிகளில் முடித்து உலகில் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி சாதனைப் புரிந்தார்கள். அவ்வளவு ஏன்? இன்று நம் தேசத்தில் பல உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கும் பெரும்பாலான நபர்கள் அரசாங்கப் பள்ளியில் அவரவர் மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்கள் தானே… அவர்களால் இந்த அளவிற்கு உயர முடியும் எனும்பொழுது, அந்தந்த பருவத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சரியான பாடத்திட்டங்களை கொடுக்காமல்… ஏன் கடினமான பாடங்களையும், பயிற்சிகளையும் கொடுத்து அவர்களை கண்களுக்கு தெரியாத மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்க வேண்டும்?” என்று குரலில் சிறு கோபம் துளிர்க்க கேள்வி எழுப்பினாள் மதி.

மிரு அமைதியாக தலையசைத்து ஆமோதிக்க மேலும் தன் மனக் குமுறல்களை தொடர்ந்தாள் நாயகி.

“இன்னொன்றை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் தெளிவாக தெரியும். இப்படியான வளர்ப்பில் புத்தகப் புழுக்களாக வளர்ந்து சாதனை புரியும் பிள்ளைகள் பலர் தங்கள் தொழில் ரீதீயாக சுலபமாக வெற்றிப் பெறுவார்கள். ஆனால் சொந்த வாழ்க்கையில் எதையும் சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறுகிறவர்களாக இருப்பார்கள். நானே கண்கூடாக இது மாதிரி பாதிப்படைந்த மனிதர்களை பார்த்திருக்கிறேன். திரை கட்டிய குதிரையாக கல்வி, உயர்ந்த உத்தியோகம், வெல் செட்டில்ட் எனும் எதிர்கால இலக்கில் மட்டும் ஓடுகிறவர்களுக்கு மனிதர்களின் உணர்வுகளை சரிவர படிக்கத் தெரியாமல் வாழ்வில் தோற்றுப் போகிறார்கள். ஒன்று குடும்பத்தில் ஒட்டாமல் இயந்திர கதியில் ஓடுகிறவர்களாக இருப்பார்கள், இல்லையென்றால் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு தங்கள் துணையிடம் பிரச்சினையை வளர்த்துக் கொள்கிறவர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் திருமண வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து அதிலிருந்து ஒதுங்கி தங்கள் வாழ்க்கையை தனிமைக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் வாழ்வில் அப்படித்தான் நடந்தது. சிறு வயது முதலே மிகவும் நன்றாக படித்த பையன், அனைத்திலுமே மெரிட் தான். ஐ.ஐ.டி-யில் தங்கப்பதக்கத்துடன் வெளிவந்தவனுக்கு உடனடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க அவனுக்கும், அவனுடைய குடும்பத்திற்கும் ஒரே பெருமிதம் தான். அந்த மகிழ்ச்சியெல்லாம் அவனுக்கு திருமணம் ஏற்பாடு செய்கிற வரை தான் இருந்தது. திருமணம் உறுதியானதும் பையனும், பெண்ணும் அலைபேசியில் உறவாடும் பொழுது ஒரு புள்ளியில் இருவரின் எண்ணங்களும் ஒத்துப்போகவில்லை. இத்தனைக்கும் இருவருமே ரொம்பவும் நல்ல குணம் கொண்டவர்கள் தான், படித்தவர்கள் தான். ஆனால் எந்த இடத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து, தட்டிக்கொடுத்து செல்ல வேண்டும் என்பது தெரியாமல் தடாலடியாக திருமணத்தை நிறுத்தி விட்டனர். பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்து அடுத்த வாரம் திருமணம் எனும்பொழுது இப்படி செய்தது இரு குடும்பத்திலுமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இரண்டுப் பக்கமுமே தங்கள் பிள்ளைகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தனர். ஆனால் இருவருமே அதற்கு உடன்பட மறுத்து விட்டனர், ஒன்றுமே இல்லாத சிறிய விஷயத்தில் கூட தங்களை சமரசம் செய்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதற்கெல்லாம் என்ன காரணம்? நம் பிள்ளைகளின் வளர்ச்சியில் வெறும் படிப்பறிவை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவர்களிடம் கெடுபிடி காட்டும் நாம், அவர்களுக்குள் பகுத்தறிவை புகுத்த மறந்து விடுகிறோம்!” என மெல்லிய பெருமூச்சு விட்டவள், “இதெல்லாம் என் மனதை பாதித்ததால் தான், என் பள்ளி பாடத்திட்டங்களை எல்லாம் நான் மிகவும் கவனமாக வடிவமைத்தேன். பாடத்தோடு பாடமாக அவர்களுக்குள் பகுத்தறிவை புகுத்துவதில் நாங்கள் உறுதியோடு செயல்படுகிறோம்!” என்றாள் அழுத்தமாக.

“இதனால் எல்லாம் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துவிட முடியுமா? சிறு வயதில் படிக்கும், தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பிள்ளைகள் நாளடைவில் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு செல்லும் பொழுது மறந்து விடுவார்களே!”

“நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன், ரொம்பவும் சிறிய வயதில் கற்றுக்கொள்வது ஒருபக்கம் மறந்துவிடும் என்றாலும் இன்னொரு பக்கம் ஆழமாக பதியவும் வாய்ப்பிருக்கிறது. அதனுடைய தொடர்பை விட்டுவிடாமல் தொடர்ந்து பின்பற்றும்படி அவரவர் குடும்பத்தினர் தான் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தற்காலத்தில் நம்மில் பலர் நமது குழந்தைகளின் வளர்ச்சியில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடுவதால் தான் நாட்டில் பல்வேறு சமூக சீர்கேடுகள் நிகழ்கின்றன!”

“எஸ்… இதை யாராலும் மறுக்க முடியாது, மனிதம் என்பதே மறந்துப் போனவர்களாக ஆபத்தாக மாறி வருகின்ற இன்றைய சமூக சூழலில் பெற்றோர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளின் வளர்ப்பில் சிரத்தைக் கொண்டு இந்த மாதிரியான தெளிவுகளை அவர்களுக்கு சரியாக கற்றுக்கொடுக்க வேண்டும்!”

“ம்… அடுத்து நாங்கள் பின்பற்றும் பாடத்திட்டங்களுக்கு வருகிறேன். இங்கே நான் ஒரு விஷயம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். இன்று நம்மை விட வயதில் சிறு பிள்ளைகளாக இருப்பவர்களுக்கு இருக்கும் பொது அறிவு கூட நம்மில் பலருக்கு இருப்பதில்லை. நடந்து முடிந்த வரலாற்றை இவ்வளவு விரிவாக கஷ்டப்பட்டு படித்து எங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கேட்கிறான். உண்மை தானே… உலகில் மற்றும் நமது நாட்டில் நடந்து முடிந்த முந்தைய வரலாறு குறித்த விஷய ஞானம் நம் எதிர்கால சந்ததியனருக்கு அவசியம் தான் என்றாலும் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு அவர்களுக்கேற்றவாறு அவர்கள் மனதில் பதியும்படி சுருக்கமாக அதை கொடுக்காமல் எதற்காக பக்கம் பக்கமாக விளக்கமாக கொடுக்க வேண்டும். அதையெல்லாம் கல்லூரிகளில் தனி பாடப்பிரிவாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா… அதுபோல் தான் ஆங்கில பாடமும், பிள்ளைகளின் ஆங்கில அறிவை வளர்ப்பதற்கு ஏற்றது போல் அவர்கள் இலகுவாக பேச, எழுத பயில்வது போன்ற பாடமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து இலக்கியம் அளவிற்கு சிறு பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்கள் அதை சிரமப்பட்டு மனனம் செய்து ஒப்பித்து எழுதுகிறார்களே தவிர… இயல்பாக நம் தாய்மொழி பேச வருவது போல் அவர்களால் ஆங்கிலத்தில் நன்றாக உரையாட முடிவதில்லை. ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழி பாடங்களை நம் பாடத்திட்டங்களில் எதற்காக கொண்டு வந்தோம்? அந்த மொழியில் நாம் சரளமாக பேசுவதற்கும், எழுதுவதற்கும் தானே… உங்கள் பாடத்திட்டங்களை வைத்து அதை செயலாற்ற முடியவில்லை எனும்பொழுது அவற்றை ஏன் இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினாள்.

“கண்டிப்பாக… பிள்ளைகள் பிற மொழிகளில் பேசவும், எழுதவும் தானே முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் பல பெற்றோரும் எதிர்பார்த்து தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்க வைக்கிறார்கள். ஸோ… நீங்கள் அதற்கேற்ற மாதிரி உங்கள் பாடப் புத்தகங்களை வடிவமைக்கிறீர்கள்!”

“ஆமாம்… அதேபோல் குழந்தைகளின் மனதில் மொழிகள் இன்னமும் ஆழமாக பதிவதற்கு ஒவ்வொரு சனிக்கிழமை மதியமும் உணவு இடைவேளைக்கு பிறகு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஏதாவது ஆங்கிலம் மற்றும் இந்தி குறும்படங்களை ஒளிப்பரப்புகிறோம்!”

“ஓ… ஆனால் அதைப் பார்க்கும் அளவிற்கு பிள்ளைகளிடம் பொறுமை இருக்கிறதா?” என்றாள் மிரு வியப்புடன்.

லேசாக சிரித்தவள், “அவர்கள் விரும்பி பார்க்கும்படி குழந்தைகள் பங்கு கொள்ளும் சுவாரசியமான படங்களை தான் தேடியெடுத்து போடுவோம். இந்த சிறு வயதில் அவர்களுக்கு கொடுக்கப்படும் விஷயங்கள் மிக நன்றாக மனதில் ஆழப்பதிந்து விடும் என்பதால் தான் நம்மை சுற்றியுள்ள சமூக ஆர்வலர்களின் நல்ல நல்ல கருத்துக்களின் தமிழ் காணொளியையும் அவற்றோடு இறுதியில் இணைத்து ஒளிபரப்பி விடுவோம். ஆரம்பத்தில் இதை முயன்றுப் பார்க்கும் பொழுது அவர்களும் ஆர்வமாக பார்த்தனர் என்பதால் அதையே இன்றுவரை பின்பற்றுகிறோம்!” என்றாள் மலர்ச்சியுடன்.

“நீங்கள் சனிக்கிழமையை பற்றி பேசும்பொழுது தான் நாங்கள் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது!”

“சொல்லுங்கள்!”

“அன்று பள்ளியில் பாடம் சம்பந்தப்பட்ட வகுப்புகள் எதுவும் நடத்தாமல் குழந்தைகளை பல்வேறு கூடுதல் பயிற்சிகளில் ஈடுப்படுத்துகிறீர்களாமே…”

“ஆமாம்… இதற்கு முதலில் யோசனை பெற்றோர் ஒருவரிடம் இருந்து தான் வந்தது. அவர் சொல்வதும் சரியாக இருக்க, முயன்றால் தான் என்ன என்று அந்தந்த பயிற்சி ஆசிரியரிடம் இதைப்பற்றி தனித்தனியாக பேசினோம். அவர்களும் ஒத்துக்கொள்ள சனிக்கிழமைகளில் வாய்ப்பாட்டு, நடனம், சிலம்பம், கராத்தே போன்ற வகுப்புகளை காலை வேளைகளில் வருவதை போல் திட்டமிட்டுக் கொண்டோம். இதனால் என்னவாகிறது என்றால் பள்ளி நேரம் முடிந்து இதற்காக என்று அவர்கள் வெளியே ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியாக அலைந்து திரிய தேவையில்லாமல் அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ற வகுப்பில் இணைந்து கொள்வதற்கு ஏற்றது போல் அவர்களுடைய கட்டணம் குறைவாக அமைந்து இருக்கும்!”

“வாவ்… ரொம்பவே நல்ல விஷயம் தான், அதனால் அவர்களுடைய ஆர்வம் பூர்த்தி ஆவதோடு குழந்தைகளுக்கு தேவையான ஓய்வு நேரமும் அவர்களுக்கு சிரமமின்றி கிடைக்கும்!” என்று பாராட்டினாள் மிருணாளிணி.

“எஸ்… அதோடு குழந்தைகள் மண்ணிலும் விளையாடி பழக வேண்டும் என்று சனிக்கிழமை மாலை வேளைகளில் அவர்களை தோட்டங்கள் பராமரிப்பதிலும், மண்ணில் பொம்மைகள் செய்து விளையாடுவதிலும் ஈடுபடுத்துகிறோம். இதற்காகவே மண் பானை செய்யும் வயோதிகர் ஒருவரை அந்நேரத்திற்கு வரச்செய்து பிள்ளைகளுக்கு தனியாக பயிற்சி கொடுக்கிறோம். இதன்மூலம் அவர்களுக்கு எதிர்ப்புசக்தி கூடுவதாக அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது!”

“ஓ… ரியலி கிரேட்! ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் குழந்தைகளின் உடல், மன நலனில் நீங்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளீர்கள்? இதையெல்லாம் கேட்கும் பொழுதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பொழுது அங்கே பயிலும் குழந்தைகளின் உற்சாகத்தை பற்றிக் கேட்கவா வேண்டும்?” என மெச்சுதலாக பார்த்தவள், “நீங்கள் ஏன் மேடம் இதை ப்ரைமரி அளவில் மட்டும் நிறுத்தி விட்டீர்கள்? உங்கள் பள்ளியில் உயர்கல்வியையும் கொண்டு வரலாமே… மாணவர்களுக்கு இன்னமும் சிறப்பான வாய்ப்பாக அது அமையும் அல்லவா. அதுவுமில்லாமல் உங்கள் பள்ளியில் இலகுவழி கல்வியை பயின்றுவிட்டு வெளியே உயர்நிலை கல்வியை தேடி வேறு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அங்குள்ள கல்வி கொஞ்சம் சிரமத்தை கொடுத்து விடும் வாய்ப்பு உள்ளதே!” என்றாள் யோசனையாக.

“இத்தனை செய்த நாங்கள் அதைப் பற்றி யோசிக்காமல் இருப்போமா… ஐந்தாம் வகுப்பில் மெதுவே வெளியிடங்களில் உள்ள சூழ்நிலைகளில் அவர்கள் பொருந்திப் போகுமாறு தேவையான பயிற்சிகளை கொடுத்து விடுவோம். நாங்கள் உயர்கல்வியை ஆரம்பிக்க கூடாது என்றெல்லாம் தயங்கவில்லை, பத்து வயது கூட நிரம்பாத சிறு பிள்ளைகளின் சிரமங்கள் தான் என் மனதை முதலில் அதிகமாக பாதித்தது. ஆகையால் குழந்தைகளின் பட்டாம்பூச்சி வாழ்க்கையை நம்மால் முடிந்தவரை காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்று தான் இதில் முழுவீச்சில் இறங்கினேன், அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டேன். உயர்நிலை பள்ளி… பார்க்கலாம்… எதிர்காலத்தில் ஒருவேளை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்!” என்று புன்னகைத்தாள் நிறைமதி.

“கண்டிப்பாக ஆரம்பியுங்கள்… பல பெற்றோர்கள் அதை ஆர்வமாக வரவேற்பர். நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாம் நன்றாக செய்தும், எனக்கு இதில் ஒரே ஒரு வருத்தம் தான் மேடம்!” என்றாள் மிரு சோகமாக.

மதியின் மனதில் மெல்லிய திடுக்கிடல் தோன்ற, “என்ன வருத்தம்?” என்றாள் குழப்பமாக.

“இதையெல்லாம் நீங்கள் உங்கள் ஊர் காஞ்சீபுரம் அளவில் மட்டும் நிறுத்தி விட்டீர்களே… மற்ற ஊர் குழந்தைகளுக்கும் இது போன்றதொரு பள்ளி வந்தால் நன்றாக இருக்கும்!” என்றாள் அவள் குறுஞ்சிரிப்புடன்.

“உஃப்… கொஞ்ச நேரத்தில் மிரள வைத்து விட்டீர்கள்!” என சிரிப்புடன் இடவலமாய் தலையசைத்தவள் பின் தீவிரமாகி, “அது சாத்தியமாவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்று தேசிய அளவில் புகழ்வாய்ந்த சில பள்ளிகள் நாட்டில் உள்ள முக்கியமான நகரங்களில் எல்லாம் தங்கள் பள்ளிக்கென நிறைய கிளைகள் வைத்திருக்கிறார்கள். அதுபோல எங்கள் பள்ளியின் பாடத்திட்டங்கள், கொள்கைகளின் மீது ஆர்வம் மற்றும் விருப்பம் இருப்பவர்கள் அவர்கள் ஊரில் இதுபோன்ற பள்ளி தொடங்க விரும்பினால் நாங்கள் அதற்கான பயிற்சியையும், உதவியையும் நிச்சயமாக செய்வோம். என் சொந்த ஊரான ராசிபுரத்தில் என்னுடைய சகோதரர் ஒருவர் எங்கள் பள்ளியின் கிளையை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டார். அடுத்த வருடத்தில் இருந்து புதிய பள்ளியில் வகுப்புகள் ஆரம்பிக்கப் போகிறது, அதற்கான மாணவர் சேர்க்கைகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன!” என்றாள் பெருமிதத்துடன்.

“வாவ்… வாழ்த்துக்கள் மேடம்!” என வேகமாக நிறைமதியிடம் கை நீட்டி வாழ்த்து தெரிவித்த மிருணாளிணி, “ஓகே இறுதியாக… இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தலைப்பின் பொருத்தமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த ஏதாவது ஒரு உத்வேகமான விஷயத்தை பகிர வேண்டும்!” என்று வேண்டுகோள் விடுத்தாள்.

“உத்வேகம்…” என இழுத்தபடி யோசித்த மதிக்கு சட்டென்று நிஷாத் பர்வீனின் நினைவு வந்தது.

நிமிர்ந்து அமர்ந்தவள், “என்னுடைய தோழி ஒருவர், நான் பள்ளி ஆரம்பித்த புதிதில் என்னை சந்தித்து தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளியிட்டார். அவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்களுடைய பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி கெடுபிடிகள் அதிகம். வெளியே எங்கே சென்றும் தன்னுடைய தனித் திறமைகளை நிரூபிக்க வழியில்லாமல் குடும்பத்தினுள் அடைப்பட்டுக் கிடப்பது அவருக்குள் பெரும் மன உளைச்சலை கொடுத்தது. இந்த வயதிற்கு மேல் என்னால் என்ன சாதித்துவிட முடியும்? பிறந்த வீட்டில் கல்லூரிக்கு அனுப்பாமல் சிறு வயதில் திருமணம் முடித்து விட்டனர். கணவரோ தன் அம்மாவையும், பிள்ளையையும் பார்த்துக் கொண்டால் போதும் என்று தடுத்து விட்டார். உங்களை போல் எனக்கு சரியான ஆதரவும், வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று வருந்தினார். இன்றும் அவரை போல் நம் நாட்டில் குறிப்பிட்ட சதவீதம் பெண்கள் இருக்க தான் செய்கின்றனர் என எனக்குமே கவலையாக இருந்தாலும் அவரை உற்சாகப்படுத்த முடிவு செய்தேன். அவரிடம் பொதுவாக பேசி அவருடைய ஆர்வங்களை தெரிந்துக் கொண்ட பின் வீட்டில் இருந்தபடியே படித்து அவரை ஹிந்தி பண்டிட் ஆகச் சொன்னேன். அதெல்லாம் சாத்தியப்படுமா… மாமியார் ஒத்துக் கொள்ள மாட்டார் என்றெல்லாம் அவர் தயங்கினார். நீங்கள் முதலில் உங்கள் கணவரிடம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து அவரை சம்மதிக்க வையுங்கள். எதற்கும் தயங்கி கொண்டிருந்தால் இந்த உலகில் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் அதற்கான நம் முயற்சியையும், உழைப்பையும் நாம் போராடி தான் கொடுக்க வேண்டி வரும் என்றேன். அதில் கொஞ்சம் தெளிந்தவர் பின்பு கணவர் மூலமாக மாமியாரை சம்மதிக்க வைத்து அடுத்த மூன்று வருடங்களில் ஹிந்தி பண்டிட் ஆகி வீட்டிலேயே மாணவர்களுக்கு மாலை வேளைகளிலும், வார இறுதிகளில் முழு நேரமாகவும் வகுப்புகள் எடுக்கிறார். இதை நான் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான தடைகள் என்றும் இருக்க தான் செய்யும், அவரவரின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு போராடி நம்முடைய இலக்கை அடைவதில் தான் நம் வாழ்வின் வெற்றியே அடங்கி இருக்கிறது!”

“சூப்பர் மேடம்!” என பலமாக கைதட்டிய மிருணாளிணி, “நீங்கள் சொல்வது போல் நமக்கு ஏதுவாக கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதை விடுத்து கிடைக்க இயலாத வாய்ப்புகளை தேடிப் பொழுதை வீணடித்து தோல்வியில் துவளுவதில் பிரயோஜனமே இல்லை. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய சரியான கல்வியறிவு குறித்து எங்களுடன் இத்தனை தூரம் கலந்துரையாடி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி மேடம்!” என கரம் குவித்தாள்.

“உண்மையில் இன்றைய கல்விநிலை குறித்து இந்த உலகிற்கு முன் என் மனதை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்வதற்கு எனக்கு சிறந்ததொரு வாய்ப்பளித்த ஃபார்யூ சேனலுக்கும், நான் சொல்ல மறந்ததை கூட தன்னுடைய கேள்வியால் கிடுக்குப்பிடி போட்டு பேச வைத்த மிருணாளிணிக்கும் நான் என் நன்றியை கூறிக் கொள்கிறேன்!” என்று நிறைவான புன்னகையுடன் வணக்கம் வைத்தாள் நிறைமதி.

மதியின் மனதில் விழுந்த ஒரு விதை உயிர் கொண்டு இன்று மரமாக வளர்ந்து நிற்பதோடு எதிர்காலத்தில் அவள் கணவன் மன்வந்தின் வாழ்த்தை மெய்ப்பிக்கும் வகையில் மேலும் விருட்சமாக தழைத்தோங்கும் என்று நாமும் அவளை வாழ்த்தி விடைப்பெறுவோம்.

💖💖நிறைந்தது💖💖


என்னுடைய மனதிற்கு தோன்றிய விஷயங்களை வைத்து எத்தனை தூரம் இது சரி, தவறு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் என் வரையில் எனக்கு சரியென தோன்றியது உங்கள் அனைவரையும் கவரும் என்கிற நம்பிக்கையில் எழுதி முடித்து இருக்கிறேன்.

சரி அடுத்து நம் மிருணாளிணிக்கு வருவோம் இவள் தான் என்னுடைய அடுத்த நாவலின் நாயகி.

நாவலின் தலைப்பு – சர்ப்ரைஸ் (கதைக்கு பொருத்தமான செம டைட்டில் தான்)

நாயகன் பெயர் – இதுவும் சர்ப்ரைஸ் (அவனுக்கு ரொம்ப பொருத்தமானதே)

அடுத்து எழுத இருப்பது என்னுடைய பதினைந்தாவது நாவல், ஆகையால் கதைக்கருவை கொஞ்சம் விசேஷமாக எடுத்திருக்கிறேன். ரொம்பவும் ஆசையுடன் எழுத காத்திருக்கிறேன், கதை முக்கியமாக நாயகனை சுற்றி தான் நகரும். அவனை பற்றி பேச ரொம்ப ஆசை, ஆனால் இப்பொழுது முடியாது கதையில் தெரிந்துக் கொள்வோம்.

புத்தகங்கள் வெளியிடுவதில் ரொம்பவும் நேரம் சரியாக இருப்பதால், புது நாவலை உங்களுக்கு எப்பொழுது கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. இப்பொழுது எழுதி முடித்த இந்நாவலையே இதுவரை இல்லாத அளவிற்கு நாட்களை இழுத்தடித்து விட்டேன்.

ஸோ… நோ கமிட்மெண்ட்ஸ், விரைவில் சந்திப்போம்.

– தீபா பாபு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *