*31*

 

தன்னெதிரே பரிதாபமாக அமர்ந்திருக்கும் சிறுவனை பார்த்து நிறைமதிக்கு பாவமாக தான் இருந்ததே தவிர கோபம் எதுவும் வரவில்லை.

அவனிடம் அமைதியாக அவள் தன் இருக் கரங்களை நீட்டவும் பளிச்சென்று முகம் மலர்ந்தவன் வேகமாக வந்து தன் தாயின் மடியில் அமர்ந்துக் கொண்டான். மகனை தன்னோடு சேர்த்து அணைத்து உச்சி முகர்ந்தவள் அவன் முகத்தை நிமிர்த்தி இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட சந்தோசமாக அவளின் இடையை கட்டிக்கொண்டான் நிகித்.

“லவ் யூ மா!”

“அட… பாருடா!” என்று கேலி செய்து அவன் தலையில் முட்டியவளுக்கு அன்று ஒரு நாள் பேரனை பற்றி விசனமாக நளினி கூறியது நினைவிற்கு வந்தது.

நிலா பிறந்தப் பிறகு அம்மா தன்னை விட்டு சற்று விலகி விட்டதாக அவனுக்குள் சிறு சஞ்சலம் தோன்றியிருப்பதாக ஒரு முறை இவளிடம் அவர் தனிமையில் கூறி இருந்தார். கைக்குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டுமே என்று இவளும் அவனை தன் அம்மா வீட்டில் இருந்தவரை ஜோதியின் பொறுப்பிலும் இங்கு வந்தப் பிறகு நளினியின் பொறுப்பிலும் விட்டிருந்தாள்.

நேரத்திற்கு அவனுக்கு உணவளித்து அவனை பள்ளிக்கும் நளினியே அனுப்பி வைத்ததில் இவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இரவில் சரியாக உறங்காமல் விழித்திருந்து சேட்டை செய்யும் நிலாவை பெரும்பாலும் இவள் தான் இரவு நேரங்களில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் காலையில் அவன் பள்ளி கிளம்பும் பொழுது தான் இவள் விழித்து எழுந்தே கீழே வருவாள். நிகித் உறங்குவதும் பாட்டி, தாத்தாவின் அறையில் என்றாகவும் அவன் எழுந்து குளித்து தயாராவது எதுவும் அவளுக்கு தெரியாது.

நிலாவிற்கு ஆறு மாதங்கள் நடக்கும் பொழுது தான் நளினி இவளிடம் அவ்விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார்.

“மதி… இன்றிலிருந்து நிகி உன்னுடனே அறையில் தூங்கட்டும். அவன் உன்னை ரொம்பவும் மிஸ் செய்கிறான் என்று நினைக்கிறேன். இரண்டு நாளாக ரொம்ப டல்லாக இருந்தான், சரியாக சாப்பிடவும் செய்யாமல் கொடுக்கும் உணவையும் வேண்டாம் என மறுத்து விடுகிறான். மாமா வெளியே அழைத்து சென்று வந்தாலும் ஒரு மாதிரி உம்மென்றே இருந்தான். என்னடா கண்ணா பள்ளியில் எதுவும் பிரச்சினையா என்று கேட்டால் பாப்பா பிறந்ததிலிருந்து ஏன் அம்மா எனக்கு எதுவும் செய்வதில்லை எல்லாம் நீங்களே செய்கிறீர்கள் என வேகமாக கேட்கவும் தான் அவனுக்கு இருக்கும் பிரச்சினை புரிந்தது. இல்லைடாம்மா… பாப்பா கொஞ்சம் வளர்ந்தப் பின்னால் அம்மா எப்பொழுதும் போல செய்வார்கள் இப்பொழுது அவள் ரொம்ப குட்டிக் குழந்தை இல்லை அம்மா கூடவே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என அழுகிறாள் என்று சமாதானம் கூறினால் அப்பொழுது நான் அழாமல் இப்படியே அமைதியாக இருந்தால் என்னை உங்களிடமே விட்டு விடுவார்களா என கேட்கிறான். இந்தப் பையன் என்ன இப்படி யோசிக்கிறான் என்று எனக்கு கொஞ்சம் பக்கென்று ஆகிவிட்டது. அப்படியெல்லாம் இல்லைப்பா என நான் சொல்ல வருவதைக் கூட கேட்காமல் சரி விடுங்கள் என்று வெளியே விளையாட போய் விட்டான்மா அவன். அதனால் தான் சொல்கிறேன் பிள்ளை உன்னுடைய அருகாமைக்கு ஏங்குகிறான் போலிருக்கிறது. அவனுக்கு தூக்கம் கெடும், எழுந்து பள்ளிக்கு கிளம்புவதற்கு தாமதமாகும் என்றெல்லாம் நீ யோசிக்காதே உங்கள் அறையிலேயே அவன் படுத்து உறங்கட்டும். கூடவே இருந்துப் பார்க்கும் பொழுது உன்னுடைய கஷ்டமும் அவனுக்கு புரியும், அவனை பள்ளிக்கு கிளப்புகிற வேலையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அப்புறம் பிள்ளையின் மனதில் இது எதுவும் தவறான அபிப்பிராயமாக பதிந்து விடப் போகிறது!” என்றார் கவலையாக.

அமைதியாக சொல்வதை எல்லாம் கேட்கிறானே என்று இருந்தால் இவன் உள்ளுக்குள் இப்பிடியெல்லாம் யோசித்துக் கொண்டு சுற்றுகிறானா என முதலில் மதிக்குமே திகைப்பாக தான் இருந்தது. இதை இப்படியே வளர விடுவதும் ஆபத்து தான், இவளால் தான் எல்லாம் என்று நாளை அவனுடைய வருத்தம் முழுவதும் நிலாவின் புறம் திரும்பி விடும். வேண்டாம்… அத்தை சொல்வதுப் போல் இன்றிலிருந்து அவன் என்னுடனே உறங்கட்டும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பிறகு நிலாவின் சத்தத்தில் உறங்கப் பழகிக் கொள்வான் என முடிவெடுத்து அவனை தன் பொறுப்பிலேயே எடுத்துக் கொண்டாள் மதி.

“அம்மா இப்பொழுது என்ன செய்வது?” என்று அவள் சிந்தனையை கலைத்தான் மகன்.

அவனை செல்லமாக முறைத்தவள், “ஏன்? அடுத்து நாம் என்ன செய்வோம் என்று உனக்கு தெரியாதா… இது வழக்கமாக நடக்கிறது தானே!” என்றாள் சலிப்பாக.

பிள்ளை மறுபடியும், “சாரிம்மா!” என்றது, “அடப்போடா… யாருக்கு போன் பண்ணட்டும் ஸ்ரீஹரியா அல்லது சாய்சரண்ணா…” என்றவாறு அலைபேசியை எடுத்தாள்.

“ஹரி வேண்டாம்மா… இன்று நான் அவனோடு சண்டைப் போட்டு விட்டேன். நீங்கள் சாய் அம்மாவிற்கு போன் பண்ணுங்கள்!” என்றான் நிகித் வேகமாக.

“டேய்…” என பல்லைக் கடித்தவள், “உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையாடா…” என முறைத்தாள்.

“அம்மா… அவன் தான்மா என் பெர்மிஷன் இல்லாமல் என்னுடைய ஸ்நேக்ஸ் எடுத்து சாப்பிட்டான்!”

“ஏன்டா அவன் உன் பிரெண்ட் தானே கொடுத்தால் என்ன குறைந்துப் போய் விடுவாயா? நண்பர்களுடன் ஷேர் செய்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் இல்லை…”

“அப்பொழுது அவனும் அப்படி செய்ய வேண்டும் தானே… இன்று நான் பாதாம் எடுத்து செல்லவும் வேகமாக பாக்ஸில் இருந்து இரண்டு எடுத்துக் கொண்டான். ஆனால் போன மன்டே அவன் கொண்டு வந்தப்பொழுது எங்களுக்கு யாருக்கும் தரவில்லை!” என்றான் கோபமாக.

மகனை அயர்வுடன் பார்த்தவள் மைன்ட் வாய்சில், ‘இந்த சண்டைக்கு எல்லாம் நாம் பஞ்சாயத்து நடத்த வேண்டுமா என்ன… நாட்டாமை அப்படியே பம்மிக் கொண்டு பின்னால் ஓடிவந்து விடு!’ என தனக்கு தானே அறைக்கூவல் விடுத்தாள்.

இதுங்கள் சண்டையை நம்பி நாம் ஏதாவது தீவிரமாக அறிவுரை சொன்னால் கடைசியில் நம்மை கோமாளியாக்கி விட்டு அதுங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு முஸ்தபா பாடி நம்மை மூக்குடைத்து விடுங்கள். வேண்டவே வேண்டாம்பா நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்.

“சரிடா சாய் அம்மாவிற்கே பேசுகிறேன், சயின்ஸ் புக் ஒன்று தானே… இல்லை இன்னும் வேறு ஏதாவது வேண்டுமா என்று ஒழுங்காக பார்த்துச் சொல். அப்புறம் அடுத்த பத்து நிமிடங்களில் அம்மா ஹிந்தி, அம்மா ஜிகே என ஏதாவது தலையை சொரிந்தாய் என்றால் மகனே மண்டையை உடைத்து விடுவேன்!” என்று நிகியை கண்களை உருட்டி மிரட்டினாள் மதி.

எல்லாம் அனுபவப் பாடம், ஏற்கனவே சிலமுறை அப்படி மீண்டும் அவர்களை அழைத்து இவள் அசடுவழிந்த கதையெல்லாம் அவ்வப்பொழுது நடந்திருக்கிறது.

தாயின் எச்சரிக்கையில் அரண்டுப் போய் இன்னொரு முறை தன்னுடைய பையை சரிப் பார்த்தவன், “இல்லைம்மா… எல்லாம் வைத்திருக்கிறேன்!” என்றான் பவ்யமாக.

ம்… என்றவள் சாய்சரணின் அம்மாவை அழைக்க அடுத்த நொடி வேகமாக இணைப்பு ஏற்கப்பட்டு, “நானே உங்களுக்கு கால் பண்ணனும் என்று நினைத்தேன் நிகித் அம்மா, அதற்குள் நீங்களே கால் செய்து விட்டீர்கள்!” என்று எதிர்புறம் அளவிற்கு அதிகமாக பூரித்து வழிந்ததிலேயே இவள் இதழ்களில் அலட்சிய முறுவல் ஒன்று தோன்ற, “அப்படியா… என்ன விஷயம்?” என்றாள் ஏதுமறியாதவளாக.

“வேறென்ன…” என சலிப்புடன் ஆரம்பித்தவள், “ஆமாம்… நீங்கள் என்ன திடீரென்று கால் செய்திருக்கிறீர்கள்?” என்று சுதாரித்தாள்.

இம்முறை இவள் முகத்தில் அசடு வழிய, “வழக்கம் போலத்தான்… சயின்ஸ் புக் விட்டு விட்டு வந்து விட்டான். நீங்கள் கொஞ்சம் ஹோம் வொர்க் பக்கத்தை புகைப்படம் எடுத்து வாட்சப்பில் அனுப்புகிறீர்களா…” என்றாள் தன்மையாக.

“ஓ… அனுப்புகிறேனே… நிகித் சயின்ஸ் எடுத்து வரவில்லை, நான் பெற்ற எருமை ஹிந்தி எடுத்து வரவில்லை. நீங்களும் கொஞ்சம் அதை அனுப்பி வைத்து விடுங்கள்!”

“ஆங்… ஆங்… கண்டிப்பாக!” என உறுதி அளித்து சிறிது நேரம் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்து ஒரு பாய்-உடன் இணைப்பை துண்டித்தனர்.

பல தனியார் பள்ளி தாளாளர்கள் கல்வியை வியாபாரம் ஆக்கினார்களோ இல்லையோ இன்றைய தலைமுறை பிள்ளைகள் தங்கள் பாடப் புத்தகங்களின் நகல்களை அலைபேசி வாயிலாக பண்டமாற்று வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலா உறங்கிய பிறகு மெதுவாக அவளை தூக்கி நிகித் அருகில் படுக்க வைத்துவிட்டு அவளுக்கு மறுபுறம் நகர்ந்து வந்து தன் தோள்வளைவில் தலைசாயும் மனைவியை கண்டு புன்னகைத்த மனு கையில் இருந்த பேசியை அணைத்து டீபாய் மீது போட்டு விட்டு அவளிடம் ஆர்வமாக திரும்பி கழுத்தில் ஆழ முகம் புதைத்தான்.

“ஒரு வழியாக வாண்டு தூங்கி விட்டதா… இவளை நாம் ஆடி மாசத்தில் உருவாக விட்டிருக்க கூடாதுடி செல்லம். உன் பக்கத்தில் வரவே விட மாட்டேன் என்கிறாள், தூங்குவது போல் கண் மூடுகிறவள் கூட திரும்பவும் சிணுங்கி கொண்டே உன்னை அவள் பக்கம் இழுத்துக் கொள்கிறாள்!” என்று ஏக்கப்பெருமூச்சு விட்டான் அவன்.

அவனுடைய அலுப்பில் பக்கென்று வெடித்த சிரிப்பை ஓசையின்றி வெளியேற்றி, “இத்தனை வயதான நீங்களே என்னை விட்டு நகர்ந்து படுக்க மாட்டேன் என்கிறீர்களாம், பிள்ளைகள் தூங்கிய பிறகு நான் உங்கள் பக்கம் வந்து விட வேண்டும் என்று கட்டளை போடுகிறீர்கள். அப்புறம் உங்கள் பிள்ளைகள் மட்டும் எப்படி இருக்குமாம்? அன்றே உங்கள் மகன் உங்களிடம் எப்படி பதிலுக்கு பதில் கொடுத்தான் என்பது ஞாபகம் இருக்கிறதா அல்லது மறந்து விட்டதா. அப்படியே தலைவர் ஒரு நிமிடம் பேச்சு மூச்சில்லாமல் நின்று விட்டீர்களே…” என உடல் குலுங்க மௌனமாக நகைத்தாள்.

“என் பிழைப்பு உனக்கு சிரிப்பாக இருக்கிறதாடி…” என்று அவள் இடையில் ஒரு கிள்ளு கிள்ளியவனை பதிலுக்கு தோள்பட்டையில் கடித்து பழிவாங்கி விட்டே அவள் விலக, “பிள்ளைகளை பெற்றுக் கொடுடி என்றால் வரிசையாக எனக்கு தொல்லைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறாள். நமக்கு தூக்கம் வரும் வரை உன் பெண்ணிற்கு தூக்கம் வராது, நடுசாமம் வரை கண்களை உருட்டிக் கொண்டிருப்பாள். அதற்கும் பெரியது இருக்கிறதே, ஏன்டா நீதான் பெரியவன் ஆகிவிட்டாயே சுவரோரமாக படு பாப்பா மட்டும் அம்மாவிடம் படுத்துக் கொள்ளட்டும் என்றால் அதெல்லாம் முடியாது நானும் அம்மாவிடம் தான் படுப்பேன் என்று அடம் பிடிக்கிறான். டேய்… நீங்கள் இரண்டு பேருமே ஆளுக்கொரு பக்கமாக உங்கள் அம்மாவுடன் தூங்கினால் அப்புறம் நான் எங்கேடா தூங்குவது என தெரியாத்தனமாக அவனிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு அவன் எனக்கு ஒரு நோஸ்கட் கொடுத்தான் பார், காட்… யாரிடமும் நான் அப்படி அசிங்கப்பட்டதில்லை!” என்று தலையசைத்தவனை கண்டு மீண்டும் சிரிப்பு பீறிட அருகில் சென்று கன்னத்தில் முத்தம் பதித்தாள் மதி.

“இது என்ன ஆறுதல் பரிசா…” என்று அவன் முறைக்க, “இல்லை மாமா… இப்படிப்பட்ட பிள்ளைகளை எனக்கு கொடுத்த உங்களுக்கு வெற்றிப்பரிசு!” என அவள் குறும்பாக கண்ணடிக்க அதற்குரிய தண்டனையை அடுத்து மனைவிக்கு வழங்க ஆரம்பித்திருந்தான் கணவன்.

மன்வந்த் மகனிடம் கேட்ட கேள்விக்கு அவன் பளிச்சென்று அளித்த பதில் இது தான், “ஆங்… நாங்கள் எங்கள் அம்மாவிடம் தான் தூங்குவோம், நீங்கள் வேண்டுமென்றால் போய் உங்கள் அம்மாவுடன் தூங்குங்கள்!” என்றானே பார்க்கலாம் தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்.

மதிக்கோ கணவனை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை இருந்தாலும் அவனை மேலும் தூண்டி விட்டு விடக்கூடாது என தன்னை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவள் மறுநாள் முழுவதும் அவ்வப்பொழுது அதை நினைத்து நினைத்துப் பார்த்து சிரித்தாள். அதிலும் நளினியை பார்த்ததும் இன்னமும் அவளுக்கு சிரிப்பு வெடித்துக் கொண்டு கிளம்ப கண்களில் நீர் வழிய சத்தமாக நகைத்து, அதற்கு அலமேலுவிடம் சில பல கண்டனத்தை பெற்று, கணவனின் பலமான முறைப்பை பெற்று என அன்றைய பொழுதை நன்றாகவே கழித்தாள் அவள்.

****************************

“ச்சை… மறுபடியும் மறுபடியும் நாம் கூறுவதை காதில் வாங்காமல் இப்படி எல்லாவற்றையும் அவர்கள் இஷ்டத்திற்கே செய்வதற்கு அப்புறம் எதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை நிகழ்த்துகிறார்களோ தெரியவில்லை!” என்று எரிச்சலுடன் முணுமுணுத்த நிறைமதியின் அருகில் இன்னும் சில தாய்மார்கள் அதே எண்ணத்தில் முகத்தில் அதிருப்தியுடன் நின்றிருந்தனர்.

அனைவரும் நிகித் உடன் பயிலும் மாணவச் செல்வங்களின் தாய்மார்கள் தான் மதியின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள்.

“ஆமாம் சரியாக சொன்னீர்கள்… வேலைக்கு செல்லும் என்னை போன்றோருக்கு இது தேவையில்லாத அலைச்சல் தான்!” என சலித்துக் கொண்டாள் ஆதித்யாவின் அம்மா.

“அதுவும் பசங்க கிளாஸ் டீச்சர் சொன்னதை கவனித்தீர்களா நிகித் அம்மா… என்னுடைய பையன் வீட்டில் ஒழுங்காக படிப்பதே இல்லை. நீங்கள் தரும் ஒன்றிரண்டு ஹோம் வொர்க் முடித்துவிட்டு அவன் பாட்டிற்கு கார்டூனில் மூழ்கி விடுகிறான். வேறு ஏதாவது படிடா என நான் உட்கார வைக்க முயன்றால் சொன்னப் பேச்சைக் கேட்காமல் அவ்வளவு தான் ஹோம் வொர்க் விடுங்கம்மா என்று ஓடி விடுகிறான். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பாடத்தில் இருந்து கிளாஸ் டெஸ்ட் மாதிரி வையுங்கள் அப்பொழுது தான் வீட்டில் பிள்ளைகள் படிப்பார்கள் இல்லையென்றால் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. கடைசியில் நீங்கள் பருவத் தேர்வு வைக்கும் பொழுது மொத்தமாக படிக்க முடியாமல் திணறுகிறார்கள் என நான் சொன்னால் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். தினமும் எல்லாம் எங்களால் டெஸ்ட் வைக்க முடியாது அதற்கு நேரமில்லை என்றது பார் எனக்கு அப்படியே அதன் முகத்தில் ஓங்கி குத்தலாமா என்றிருந்தது!” என்றாள் வர்ஷினியின் அம்மா.

ஓ… என்று மதி அதை உள்வாங்க, “இதற்கே இப்படி கோபப்படுகிறீர்களே… உங்களுக்கு எந்த வேலையும் வேண்டாம்மா, வீட்டில் பெற்றோரிடம் தினமும் ஒரு பாடம் எழுதிக் காண்பித்து கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்று சொல்லி அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றோம். அதற்கும் வலிக்கிறது அவர்களுக்கு, நோ நோ அப்படியெல்லாம் செய்ய முடியாது. நீங்கள் வீட்டில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துக் கொள்வீர்கள் ஆனால் வேலைக்கு போகும் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டு முடித்து விட்டது அந்த டீச்சர். ஏன் ஆதித்யா அம்மா உங்கள் பையனை ஒரு பாடம் படிக்க வைத்து எழுத வைக்க உங்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்குமா?” என்று கேட்டாள் ஸ்ரீஹரியின் தாய்.

“என்ன? அப்படிமட்டும் கொடுத்தார்கள் என்றால் எனக்கு அது ரொம்ப சுலபமாக இருக்குமே, கடைசி நேரத்தில் மொத்தமாக உட்கார்ந்து அவனிடம் நான் போராடத் தேவையிருக்காது!”

“ரொம்பவும் கஷ்டம் தான்… என் பிள்ளை தானாகவே கொஞ்சம் ஆர்வம் எடுத்து படித்து விடுகிறான். வீட்டில் நானும் அவனை அவ்வப்பொழுது கைட் செய்வதால் பரவாயில்லை, இல்லையென்றால் நிகியை பற்றியும் நான் இப்படித்தான் புலம்ப நேரமோ என்னவோ…”

“பரீட்சை வைத்து திருத்த நேரமில்லை என்று சொல்வது கூட ஒருவகையில் பரவாயில்லையே… பையன்களின் டைரியில் முழுவதுமாக வீட்டுப் பாடங்களை எழுதியிருக்கிறார்களா என்று கவனித்து கையெழுத்துப் போடவே அவர்களுக்கு நேரமில்லை. நீங்கள் இதை குறைச் சொல்ல வந்து விட்டீர்கள்!” என்றாள் இன்னொருத்தி.

“ஆமாம்… ஆமாம்… அந்த விஷயத்தில் எனக்குமே கடுப்பு தான். கடைசி நேரத்தில் எழுதிப் போட்டு பசங்களை அவசரப்படுத்துகிறார்கள். ப்ரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு எத்தனை வேகம் இருக்கும்? அரைகுறையாக எழுதி வந்து முதலில் நானுமே நிகியை திட்டி இருக்கிறேன் அப்புறம் தான் பிரச்சினை எங்கு என்று புரிந்தது. லஞ்ச் ப்ரேக் முடிந்தவுடன் டைரி எழுத சொல்லி விடுங்கள் என நான் அதற்கு தீர்வு சொன்னால், அது முடியாது கஷ்டம் அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களும் அவர்களுடையதை கொடுக்க நேரமாகி விடும் என்கிறார்கள். ஏன்? அதையெல்லாம் சரியாக திட்டமிட்டு கண்டிப்பாக இந்த நேரத்தில் அனைவரும் கொடுத்து விட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்திரவு போட்டால் அவர்கள் மறுத்து விடுவார்களா என்ன? எந்த இடத்திலும் திட்டமிடலும், நிர்வாகமும் சரியில்லை!” என மறுப்பாக தலையசைத்தாள் மதி.

“உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? நானும் என்னுடைய கணவரும் கல்லூரி வாசலை கூட தொடாதவர்கள். ஒழுங்காக படிப்பு வரவில்லை, நான் ஒன்பதாவது என்றால் அவர் பத்தாவது, கிராமத்தில் இதையெல்லாம் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் எங்களை அப்படியே விட்டு விட்டார்கள். இங்கே வந்தப் பிறகு தான் எங்களுடைய இழப்பு புரிகிறது, சரி நம் பையனாவது நன்றாக படிக்கட்டும் என்று தான் கறிவேப்பிலை கொத்தாக இருக்கிற ஒரு மகனை காரோட்டி பிழைத்துக் கொண்டிருந்தாலும் அவன் அப்பா இவ்வளவு செலவு செய்து இந்த சி.பி.எஸ்.சி பள்ளியில் படிக்க வைக்கிறார். ஆனால் படித்து பல பட்டம் வாங்கியிருக்கின்ற இவர்கள் திருத்தியிருக்கும் நோட்டு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்து அவன் எழுதுவதை பார்க்கும் பொழுது அரைகுறையாக படித்த எனக்கே திகைப்பாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் குறைந்தபட்சமாக என் பையன் பத்து பிழைகள் ஆவது எழுதுகிறான், அதற்கு அவர்கள் மேம்போக்காக ஒன்றிரண்டு தவறை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு அப்படியே டிக் போட்டிருக்கின்றனர். அவன் செய்திருக்கும் தவறை நான் சரி செய்தால் அவன் நம்ப மாட்டேன் என்கிறான் மீறி வற்புறுத்தினால் மிஸ் திட்டுவார்கள் என்று பயப்படுகிறான். போன முறை நான் இதைச் சொன்னப் பொழுது அப்படியா அப்படியிருக்க வாய்ப்பில்லையே என நோட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, ஓ… இது அப்பொழுது நான் விடுமுறையில் சென்றிருந்தேன் வேறு ஆசிரியர் திருத்தியிருப்பார்கள் என கண்துடைப்பு காரணம் சொல்கிறார்கள். இது உண்மை தான் என நான் எப்படி நம்புவது யாரிடம் ஆதாரம் கேட்க முடியும்? அப்படியே உண்மை தான் என்றாலும் திருத்தியவரும் ஒரு ஆசிரியர் தானே அவருக்கு எழுத்துப் பிழைகள் தெரியாதா?” என அலுப்புடன் வினவினாள் அமுதனின் அம்மா.

“அது தானே எந்த ஆசிரியர் வேண்டுமென்றாலும் திருத்தி இருக்கட்டுமே செய்வதை சரியாக செய்ய வேண்டாமா… நாளை அதைப் பார்த்து படிக்கின்ற பிள்ளையின் படிப்பு எவ்வாறு இருக்கும்?”

“எனக்கு ஒன்று தான் புரியவில்லை… பள்ளியின் ஆசிரியர்கள் இப்படி அலட்சியமாக இருக்கிறார்களா அல்லது நிர்வாகத்தினரால் கற்பித்தல் மட்டும் அல்லாமல் வேறு அலுவலிலும் ஈடுப்படுத்தப் படுகிறார்களா? எதனால் அவர்களுக்கு நேரமில்லை, பிள்ளைகளின் பாடங்களை சொல்லிக் கொடுப்பதும், எழுத வைப்பதும் திருத்துவதும் தானே அவர்கள் வேலை. இதற்கு நேரமில்லை என்றால் அவர்கள் பள்ளியில் வேறு என்ன தான் செய்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினாள் ஒருத்தி.

“மற்றப் பள்ளியை பற்றி எனக்கு தெரியாது, நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவளிடம் நான் விசாரித்தேன். எனக்கு பக்கத்து வீடு தான் அவள், உங்கள் பள்ளி ஆசிரியர்கள் எதற்கெடுத்தாலும் நேரமில்லை நேரமில்லை என்கிறார்களே பிள்ளைகளை படிக்க வைப்பதை தவிர வேறு என்ன வேலை செய்கிறார்கள் அவர்கள் என்று கேட்டேன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஆறு வகுப்புகள் இருக்குமாம். அதேபோல் அவர்கள் எந்தெந்தப் பாடப்பிரிவில் தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அதைப் பொறுத்து ப்ரைமரி என்றால் இரண்டாவதில் இருந்து ஐந்து வரையிலும், செகன்டரி என்றால் ஆறிலிருந்து எட்டு வரையிலும் ஒன்பது, பத்து என்றால் அதற்கு தனி ஆசிரியர்கள் வேறாக இருப்பார்களாம்…” என்று அவள் சொல்லிக்கொண்டு போக, அவளை இடைமறித்தாள் ஸ்ரீஹரியின் அம்மா.

“எல்லாம் சரிப்பா… இவர்களுக்கு தான் நேரமில்லை, நாம் சொல்கிற மாதிரி ஹோம் டெஸ்ட்டாவது கொடுக்கலாம் அல்லவா… அதற்கும் ஏன் ஏதாவது காரணத்தை கூறி மறுப்பு சொல்கிறார்கள்?”

“அது என்னவோ…” என்று முன்னவள் தோள்களை குலுக்கி கொண்டாள்.

“ப்ச்… என்ன பேசி என்ன ஆகப் போகிறது? கிளம்பலாம். அதோ பள்ளிப் பேருந்து வேறு கிளம்புகிறது, அதில் யார் யார் செல்கிறீர்கள் சீக்கிரம் போய் ஏறுங்கள்!” என்று மதி முடுக்கி விடவும், பேருந்தில் செல்பவர்கள் ஒருப்பிரிவாகவும் இவளை போல் ஸ்கூட்டியில் வந்தவர்கள் மறுப்பிரிவாகவும் அவரவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி பறந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *