*19*

 

முன்தினம் கணவன் தன்னிடம் இதே தண்டனையை கையாண்ட பொழுது வெகுவாக அழுது தீர்த்தவள் இன்று அவனுக்கு இசைவாக எவ்வித எதிர்ப்புமின்றி அமைதியாக ஒத்துழைத்தாள்.

மனைவியின் செயலில் வியந்த மன்வந்த் மெதுவாக விலகி அவள் முகம் பார்க்க, விழிகளை இறுக்க மூடியிருந்தவளிடம் இருந்து வெளியேறும் சுவாசக்காற்று சிறு புயலுக்கு ஒத்ததாக அவள் நெஞ்சம் லேசாக ஏறி இறங்க சீறலாக வந்துக் கொண்டிருந்தது.

நிர்மலமான நிலவிற்கு ஈடான அமைதியை சுமந்திருந்த மதியின் முகத்தில் இவன் முத்தத்திற்கு எதிரொலியாக எந்தவித வெறுப்போ, அருவருப்போ இல்லாததை கண்டவனின் மனதில் அவளோடு உறவுக் கொள்ள சொல்லி வாலிபத்தின் உணர்வுகளெல்லாம் எழுந்து பேயாட்டம் போட்டாலும் தற்பொழுது உருவாகியுள்ள சுமுகமான சூழ்நிலையை தன் அதீத எதிர்பார்ப்பால் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவு அறிவுறுத்த மெல்ல பெருமூச்செறிந்து எழுந்தமர்ந்து கண்களை மூடி தலைமுடியை அழுந்தக் கோதினான்.

தன் உதட்டிலிருந்து அவன் இதழை பிரித்து விட்டவனின் மூச்சுக்காற்று இன்னமும் அவள் முகத்தோடு உறவாடுவதை உணர்ந்த நிறைமதி அவனுடைய முகம் காண தயக்கம் கொண்டு விழிகளை திறவாமலே அசையாது படுத்திருந்தவள் சில நிமிடங்களில் தன்னை உரசும் அவன் தேகம் விலகியதில் மெதுவாக இமைகளை பிரித்துப் பார்த்தாள்.

தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருப்பவனின் முகத்தையும், மனதையும் படிக்க இயலாது யோசனையில் நெற்றியை சுருக்கியவளுக்கு முதலில் தன்னை குறித்தே தெளிவானதொரு முடிவுக்கு வர இயலவில்லை.

மனு இவள் கழுத்தில் முதன் முதலில் தாலி கட்டும் வரையிலும் சரி, அதன்பிறகான நாட்களின் பொழுதும் சரி, மதி அவனை முழுதாக வெறுத்தாள் தான். அவன் மீது சிறிதளவும் காதலோ அல்லது கணவன் என்கிற சலனமோ இவளுக்கு துளியும் ஏற்படவில்லை. அவன் கட்டினான், நான் கழற்றிப்போட்டு விட்டேன் அவ்வளவு தான் அந்த கயிறுக்கான மரியாதை என்று இவள் அலட்சியமாக இருந்ததெல்லாம் ஹரீஷின் திருமணம் வரை மட்டும் தான். பட்டுப்புடவை கட்டி வெளிவந்தவளை பார்த்து உன் பெண் திருமணத்திற்கு தயாராகி விட்டாள் என சாந்தா ஜோதியிடம் கேலிப் பேசியதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.

மதி ஆறு மாதங்களாக சிறிதும் சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்திய உறவு அதன்பின் அவள் இருதயத்தில் பாரமாக ஏறி அமர்ந்துக் கொண்டது. இவளுக்கு வேறொருவனுடன் திருமணம் பேசி விடுவார்களோ என்கிற பதற்றம் தோன்றும் நேரம் மனு அன்று கட்டிய தாலியை இவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவன் என்னுடைய கணவன் தானே என உள்ளம் கேள்வியெழுப்பவும் திடுக்கிட்டவள் அவனை நேரில் கண்டதும் இன்னமும் தடுமாற ஆரம்பித்தாள்.

சூழ்நிலைகளின் உச்சகட்டமாக பேரன், பேத்தியின் பிரச்சினை தெரியாத நவநீதம் மன்வந்த்தின் முன்னிலையிலேயே இவளை வேறொரு அந்நிய இளைஞன் முன்னால் திருமணம் பேச அமர வைக்கவும் இவளுக்கே பெரிய அதிர்ச்சி என்றால் அதைவிட அந்நேரத்தில் அவன் இருக்கையிலிருந்து வேகமாக வெகுண்டெழுந்தது இவள் இதயத்தை இன்னமும் பதறச் செய்தது.

அடுத்தவன் முன்னால் இவள் அப்படி அமர்ந்திருப்பதையே அவனால் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதை கட்டுக்கடங்காத சினத்தில் சீறி சிவந்திருந்த அவனது முகமே தெளிவாக பறைசாற்ற இவளும் செய்வதறியாத குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

இருவருக்குமிடையே நடைப்பெற்ற உள்நாட்டுப் போரை வீட்டினர் அனைவரின் முன்னிலும் அலமேலு வெளிச்சம் போட்டுக் காட்டவும் அவனை திருமணம் செய்துக் கொள்வதை தவிர இவளுக்கும் வேறுவழி தெரியவில்லை சம்மதித்து விட்டாள்.

விதி வழி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டவளுக்கு அவன் மீது உள்ள கோபம் மட்டும் சிறிதும் குறையவில்லை.

குறையவில்லை என்று சொல்வதைவிட அதனை குறைப்பதற்கான வழியில் மன்வந்த் ஈடுபடவில்லை என்பது தான் நாயகியின் கருத்தாக அடுத்தக்கட்ட கோபமாக நாயகன் மீது அவளுக்கு திரும்பியது.

அவனை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று இவள் பலமான குழப்பத்தில் இருக்கும் பொழுது தான் தெளிவான முடிவெடுத்து விட்டதாக அனைவரின் முன்னிலும் இவளை மணக்க சம்மதித்தவன் அடுத்து இவளுக்கு தங்களது வாழ்க்கை குறித்து ஒரு தெளிவான விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா…

அதை விடுத்து அவன் விருப்பம் போல் அவனுக்கு சாதகமாக எல்லாம் நடக்கவும் இவளுக்கு தான் எதையும் விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை என்பதை போல் இவளை எந்தவிதத்திலும் தொடர்பு கொண்டு சமாதானமாக பேச முயற்சி செய்யாது அவன் அலட்சியமாக நடந்துக் கொண்டது இவளை கண்டிப்பாக அவமானப்படுத்தவே தான் என இவளாக தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டு இறுதியாக முதலிரவு அன்று இப்படித்தான் அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்று வெறிக்கொண்டு சில திட்டங்களை போட வைக்கும் அளவிற்கு தூண்டி விட்டது.

உள்ளத்தில் உள்ள அத்தனை துவேசத்தோடு அவனை திருமணம் செய்துக் கொண்டவள் அன்றைய இரவில் அவனை தோற்கடிப்பதற்கு பதிலாக இவள் தோற்று நின்றதிலேயே துவண்டுப் போய் அடுத்து அவன் அதிரடியாக கொடுத்த முத்தத்தில் மொத்தமாக உடைந்துப் போனாள்.

அதனுடைய தாக்கம் மறுநாள் விடியலிலும் மிச்சம் இருக்க விரக்தியுடன் எழுந்தவளுக்கு காலை முதல் மாலை வரை கணவன் தன்னிடம் காட்டிய இணக்கம் மனதை ஒருபுறம் குழப்புமுற செய்யும் பொழுதே மறுபுறம் இதமாகவும் உணரச் செய்தது. அதன் எதிரொலியாக தான் அவன் தன்னை குற்றஞ்சாட்டி பேசி தண்டனை வழங்கியப் பொழுதும் இவள் அமைதியாக ஏற்றுக்கொண்டது.

மன்வந்த் கட்டிலை விட்டுக் கீழிறங்கவும் இவள் திரும்பி அவன் முகம் பார்க்க, சின்ன தயக்கத்தின் பின்னே, “நான் மாடியில் கொஞ்ச நேரம் நடந்து விட்டு வருகிறேன், நீ தூங்கு!” என்று வேகமாக கதவை திறந்து வெளியேறி விட்டான்.

புருவம் சுளித்திருக்க அப்படியே படுத்திருந்தவள் பின் மெல்ல எழுந்து அமர்ந்தாள். விழிகளை சுழற்றி சுவர்க்கடிகாரத்தை பார்க்க, நேரம் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.

இந்த இரவு நேரத்தில் எதற்காக நடக்கப் போய் இருக்கின்றான்… இத்தனை தூரம் பயணம் செய்து வந்தது அவனுக்கு அலுப்பாக இல்லையா என்று குழம்பியவளுக்கு தன்னை விட்டும் தூக்கம் வெகு தூரம் ஓடிச்சென்றது போல் ஒரு பிரமை தோன்றியது.

முழங்கால்களை கட்டிக்கொண்டு அதன் மீது தலையை சாய்த்துக் கொண்டவள், தங்களின் திருமணத்தால் இரு குடும்பங்களிலும் அதன் அங்கத்தினர்களிடமும் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து தனக்குள் அலச ஆரம்பித்தாள்.

விஷயம் அறிந்து முதலில் பெற்றோர் கவலைப்பட்டாலும் பிறகு மகிழ்ச்சியுடன் இவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்தது, ஆரம்பம் முதலே அலமேலுவை தவிர குடும்பத்தினர் அனைவரும் இவர்களது திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்ததும் நடத்தி வைத்ததும், அதிலும் மன்வந்த் தன் கழுத்தில் கட்டாய தாலி கட்டி விட்டான் என்று முகேஷ்ஷிடம் முதலில் பதற்றத்துடன் கூறிய பொழுது கூட மாமா தானே அப்பொழுது ஒன்றும் பிரச்சினை இல்லை என அவன் சுலபமாக எடுத்துக் கொண்டதும் என எல்லாமே ஒவ்வொன்றாக நினைவில் அணிவகுத்தது.

தன் மீது பாசம் வைத்த அத்தனை உறவுகளுமே நான் இவனுடன் வாழ்க்கையில் இணைந்தால் நன்றாக இருப்பேன் என்று எப்படி அவ்வளவு உறுதியாக நம்பினார்கள்?

அப்படியென்றால் முகேஷ் அண்ணாவும், யோகி அண்ணியும் சொல்வதுப் போல் இவர் உண்மையில் நல்லவர் தானா… நான் தான் இன்னமும் சிறு வயதுப் பிரச்சினையை இழுத்துப் பிடித்துக் கொண்டு வீம்பாக சுற்றுகிறேனா என்கிற தடுமாற்றம் முதன் முதலாக அவளிடம் ஏற்பட்டது.

திருமணமான இந்த இரண்டு நாட்களாக அவனை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள், அவன் முகத்தில் இவளை திருமணம் செய்துக் கொண்டோமே என்கிற சிறு முகச்சுளிப்பு இல்லையே… மலர்ந்த முகத்துடன் தானே வலம் வருகிறான். அதேபோல் இன்னும் ஒருபடி மேலே சென்று இவளிடம் ஒரு சராசரி கணவனாக உரிமை எடுத்துக் கொண்டு நெருங்கி வரவும் செய்கிறானே என்ற எண்ணம் தோன்றும் பொழுதே, என் அண்ணா பாவம்டி இப்படியெல்லாம் செய்யாதே என யோகிதா முன்தினம் புலம்பியது வேறு தோன்றி நெஞ்சத்தில் குறுகுறுத்தது.

அதன் தொடர்ச்சியாய் சிந்தனையை விரட்டியவளுக்கு நேற்றும், இன்றும் தன்னை முத்தமிட அவன் பயன்படுத்திக் கொண்ட நிமிடங்களும், இப்பொழுது அவன் வெளியேறியதற்கான காரணமும் லேசாக புரிபட குப்பென்று தேகம் சூடேறி இதயம் படபடத்தது.

‘எப்படி?’

‘எப்படி இவ்வளவு சீக்கிரமாக அவனால் என்னை அப்படி உரிமையாக எண்ண முடிந்தது? ஒருவருக்கொருவர் தன்மானத்தை சீண்டிக் கொண்டதால் ஏற்பட்ட பின்விளைவுகளால் நடந்த கட்டாய திருமணம் தானே இது… எனக்கு அவனிடம் இதுப் போன்ற கணவன் என்கிற இணக்கம் எதுவும் தோன்றாதப் பொழுது அவனுக்கு மட்டும் எப்படி அது தோன்றும்? ஒருவேளை ஆண்கள்… சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் சட்டென்று தங்களை சுலபமாக பொருத்திக் கொள்வார்களா…’

க்ளிக்… என்று கதவு திறக்கும் ஓசையில் இவள் பட்டென்று சுருண்டுப் படுத்து விழிகளை மூடிக்கொண்டாள்.

அறையின் உள்ளே வந்த மன்வந்த் மனைவி உறங்குவதை கவனித்து விட்டு விளக்கை அணைத்தவன் அரைமணி நேரமாக கால் வலிக்க நடந்ததில் ஓய்ந்துப் போய் படுக்கையில் சரிந்து விழிகளை மூடினான்.

கணவன் உறங்கும் வரை அசையாது படுத்திருந்தவள், அவனிடமிருந்து சீரான மூச்சுக்காற்று வெளியேறவும் மெல்ல நேராக திரும்பி படுத்து அடுத்து தான் இவனிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என எதையும் சரியாக முடிவெடுக்க முடியாமல் இருளை வெறித்தபடி யோசித்திருந்தாள்.

காலையில் கண்விழிக்கும் பொழுது மனு அருகில் இல்லை எனவும் வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கு மனம் திக்கென்று இருந்தது.

‘ஐயோ… மணி ஏழு… முதல் நாள் அதுவுமாக இந்தப் பாட்டியிடம் என்னை திட்டு வாங்க வைப்பதற்கென்றே இவன் சீக்கிரமாக எழுந்து கிளம்பி கீழே சென்று விட்டானா… அந்த அதிகார வர்க்கம் வேறு என்னை காலையிலேயே நடுக் கூடத்தில் நிற்க வைத்து கண்டபடி அதட்டப் போகிறது!’ என சலிப்புடன் தலையை தாங்கினாள் நிறைமதி.

“குட்மார்னிங்!” என்ற குரலில் விலுக்கென்று நிமிர்ந்தவள் பளீரென்று முகம் மலர்ந்தாள்.

குளித்து முடித்து இடையில் பெரிய பூந்துவாலையை சுற்றிக்கொண்டு அப்பொழுது தான் குளியலறையிலிருந்து வெளியே வந்தான் மன்வந்த்.

“ஓ… நீங்கள் இன்னும் இங்கேயே தான் இருக்கிறீர்களா?” என்றாள் ஆவலுடன்.

மனுவிற்கு ஒன்றும் புரியவில்லை, மதி தூங்கிக் கொண்டு தானே இருக்கிறாள் என்று இவன் மேலே அணியும் உள் பனியனை கூட கையில் எடுத்துக் கொள்ளாமல் அவள் எழுவதற்குள் வந்து உடையை மாற்றிக் கொள்ளலாம் என குளிக்க சென்றிருந்தான். வெளியே வந்தவன் தன்னியல்பாக அவளிடம் காலை வணக்கம் தெரிவித்த பின்னர் தான் இவன் வெற்று மார்புடன் இருப்பதை உணர்ந்து அவள் எதுவும் சங்கடப்படப் போகின்றாள் என தடுமாறும் நேரம் மனைவி பளீரென்று முறுவலிக்கவும் கணவன் விழித்தான்.

“என்ன?”

கட்டிலை விட்டு இறங்கியவள் அவனிடம் வந்து, “இல்லை… எழுந்தவுடனே திரும்பி பார்த்து உங்களை காணவில்லை என்றதும் நான் கொஞ்சம் பயந்து விட்டேன்!” என்றாள்.

“ஏன்?” என்று புருவம் சுருக்கினான்.

“ஏன்னா… நீங்கள் கிளம்பி கீழே போய் விட்டீர்கள் என்று நினைத்தேன். போச்சு… இன்று அந்தப் பாட்டியிடம் நன்றாக மாட்டினோம், பெரிய மண்டகப்படி காத்திருக்கிறது என அப்செட் ஆகும் நேரம் நீங்கள் வந்து விஷ் செய்கிறீர்கள்!” என்றாள் மலர்ச்சியுடன்.

அவளின் மலர்ந்த முகத்தை அவன் ஆசையாக இமைக்காமல் நோக்கவும் தான் சூழ்நிலையை உணர்ந்தவள் அப்பொழுது தான் அவன் அரைகுறையாக நிற்பதையும் சரியாக கவனித்தாள்.

ஏதோ ஓர் உற்சாகத்தில் ஓரடி இடைவெளியில் அவனை நெருங்கி நின்று பேசி விட்டவளுக்கு தற்பொழுது அவன் நிற்கும் கோலமும் அவன் மீதிருந்து எழும் சோப்பின் நறுமணமும் இதயத்தை படபடக்கச் செய்ய தடுமாறியவள் அவனை விட்டு வேகமாக விலகும் நேரம் மனு மயக்கத்துடன் அவள் கையை பற்றி இழுக்க முன்னிரவில் அவனுடைய மனதை ஓரளவு கண்டுக்கொண்டவளுக்கு பதற்றமாக இருந்தது.

“நானும் சீக்கிரமாக குளித்துவிட்டு வருகிறேன்!” என தன் பிடியிலிருந்து கையை உருவிக்கொள்ள முயன்றபடி முணுமுணுத்தவளின் முகத்தை உற்றுப் பார்த்தவன் சட்டென்று அவள் கையை விட்டான்.

அதில் நிம்மதியடைந்தவள் சரேலென்று குளியலறைக்கு பாய, “ஏய்… குளித்துவிட்டு வரும் பொழுது என்னை மாதிரி வெறும் டவல் கட்டிக்கொண்டு வரலாம் என்று எதுவும் அபிப்ராயம்மா… கையில் துணி எதுவும் எடுத்துக்கொள்ளாமல் ஓடுகிறாய்!” என்றான் மனு கிண்டலாக.

வெறும் டவலை சுற்றிக்கொண்டு வருவதா… என அவன் சொல்லை கேட்டு ஒரு கணம் திகைத்தவள் பின் அவனை முறைக்க முயன்று தோற்றவளாக முகம் சிவக்க வேகமாக தன் பெட்டியிடம் சென்றாள்.

மனுவிற்கு நடப்பதை எதுவும் நம்பவே முடியவில்லை, ஒரே இரவில் தன் மனைவி இந்தளவிற்கு மனம் மாறிவிட்டாளா… அதுவும் தன்னிடம் இயல்பாக நெருங்கி நின்று சிரித்துப் பேசுவதும், முகம் காண முடியாமல் தடுமாறுவதும், இவன் கேலிக்கு வெட்கம் கொள்வதும் என ஒவ்வொன்றும் இவனுடைய மனதில் சிலீரென்று காதல் மின்சாரத்தை பாய்ச்ச இவன் தேகம் சிலிர்த்தது.

கணவன் ஆவலுடன் மனைவியிடம் விழிகளை திருப்ப, அதற்குள் மதி குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

‘என்ன நடந்திருக்கும்? எதனால் இந்த திடீர் மாற்றம்?’ என தனக்குள் ஆலோசித்தபடி உடை மாற்றியவன், அவளிடம் எதையும் முழுவதுமாக தெளிவுப்படுத்தும் முன்னே தான் அவசரப்பட்டு விடக்கூடாது என்று முடிவெடுத்தான்.

மதி தன்னுடைய ஆலோசனையின் முடிவில் கணவன் எவ்வாறு தன்னிடம் நடந்துக் கொள்கிறானோ தான் அதற்கேற்றவாறு எதிரொலிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது.

குளித்து முடித்து உடலில் புடவையை போர்த்தியபடி வெளியே வந்தவள் அவனிடம் தயக்கத்துடன், “நான் புடவை கட்ட வேண்டும்!” என்றாள் மெல்லிய குரலில்.

“சரி…” என்று இழுத்தவன், “அதற்கு நான் எதுவும் உதவ வேண்டுமா?” என்றான் குறும்பாக.

அவனை இப்பொழுது நன்றாகவே முறைத்தவள், “ஒன்றும் தேவையில்லை, நீங்கள் கொஞ்சம் திரும்பி உட்கார்ந்தால் போதும்!” என்று உதட்டை சுழித்தாள்.

சின்ன சிரிப்புடன், “சீக்கிரம் கட்டு!” என்றபடி தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அவன் சென்று கட்டிலில் அமர, அதுவரை அடைத்திருந்த மூச்சை ஆசுவாசமாக வெளியே விட்டவள் மடமடவென்று உடலில் புடவையை சுற்ற ஆரம்பித்தாள்.

தலையில் கட்டியிருந்த துண்டை உதறி ஈரக் கூந்தலை லேசாக வாரி கிளிப் போட்டு தான் அலங்காரம் செய்து முடிக்கும் வரையிலும் கூட அவன் லேப்டாப்பினில் இருந்து பார்வையை உயர்த்தாமல் இருப்பதை பார்த்து இவளுக்கு சிரிப்பு மலர, அவனை கிண்டல் செய்ய உள்ளம் ஆர்வமாக விளைந்தது.

ஆனால்… ரொம்ப உரிமை எடுப்பதாக தோன்றிவிடுமோ, வேண்டாம் என தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், “போகலாமா?” என்று அவனருகே சென்றாள்.

ம்… என நிமிர்ந்தவன் அவளை மேலிருந்து கீழ்வரை ஒருப்பார்வை பார்த்து விட்டு தன்னியல்பாக, “நைஸ்!” என்றுவிட்டு லேப்டாப்பை சட்டவுன் செய்ய இவளுக்குள் குறுகுறுப்பு தோன்றியது.

“எது புடவையா?” என்றாள் மதி நக்கலாக.

பதிலேதும் அளிக்காமல் அவன் மடிக்கணியை கட்டிலின் மீது வைத்துவிட்டு எழவும் இவளுக்குள் பதற்றம் பீடிக்க, “நான் கீழே அத்தையிடம் போகிறேன்!” என ஓட முயன்றவளின் கரம்பற்றி வேகமாக இழுத்து தன் மீது மோதச் செய்தவன் அவளிடம் குனிய இவளுக்குள் இதயம் ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தது.

“பதிலை கேட்காமல் போகிறாய்?” என்றவனின் மூச்சுக்காற்று சீறலாக வந்து செவியில் மோதவும் விழிகளை இறுக மூடிக்கொண்டவள், “எனக்கு பதில் வேண்டாம்!” என படபடத்தாள்.

“ஆனால்… நான் சொல்வேன்!” என்றவனின் குரலில் உல்லாசம் வழிந்தது.

திணறியவளாக, “சரி… சீக்கிரம் சொல்லுங்கள்!” என்றாள் அவன் பிடியில் நெளிந்துக் கொண்டு.

“ம்…” என்றவனின் முகம் இன்னமும் அவள் காதருகில் நெருங்க, உணர்வுகளின் கொந்தளிப்பில் கீழ் உதட்டை அழுந்தக் கடிப்பவளை பார்த்து இவன் தேகத்தில் தீப்பற்ற இதை இப்படியே தொடர்ந்தால் ஆபத்து என்பதை சடுதியில் உணர்ந்தவன் அவளுக்கு சட்டென்று பதிலளித்தான்.

“புடவையும், புடவையை கட்டி இருப்பவளும்!” என்று அவளிடம் கிசுகிசுத்தவன் தன் மனதின் ஏக்கங்கள் முழுவதையும் அவள் கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து தீர்த்துக் கொண்டான்.

வெட்கத்தில் சிலிர்த்து வேகமாக அவனை தள்ளிவிட்டு கதவு வரை ஓடியவள் பின்பு சற்று நிதானித்து பெரிய பெரிய மூச்சுகளை வெளியேற்றிவிட்டு கதவை திறந்து அமைதியாக வெளியேறினாள்.

மனைவியின் இணக்கத்தில் இவன் இளமை கொதித்துக் கிளம்ப அப்படியே சற்று நேரம் கட்டிலில் அமர்ந்து விட்டவன், கண்களை மூடி மெல்ல தன் உணர்வுகளை சமன்படுத்தி விட்டே எழுந்து கீழே சென்றான்.

நளினியின் கண்ணசைவில் பூஜையறை சென்று கடவுளை வணங்கி விட்டு அதன் பின்னரே சமையலறை சென்று கணவனுக்கும் தனக்குமாக காபியை கலந்து எடுத்துக் கொண்டு அவள் முன்னறைக்கு வரவும் மனு அங்கே வரவும் சரியாக இருந்தது.

தன்னிடம் வந்து அக்மார்க் மனைவியாக காபி கோப்பையை நீட்டுபவளை ஆர்வமாக பார்த்தவன் வம்பிற்கென்றே அவளின் விரல்களோடு தன்னுடைய விரல்களை நன்றாக உரசியபடி எடுக்க தன் முகம் சிவப்பதை தடுக்கப் போராடிய மதி அவனை வேண்டுமென்றே முறைத்து வைத்தாள்.

அதைக் கண்டும் காணாமல் பெரியவர்கள் திருப்தியுடன் பார்த்திருந்தனர் என்றால் சிறியவர்களின் விழிகளோ வெளியே தெறித்து விழுமளவிற்கு அகன்று விரிந்தது.

கணவன் மனைவிக்கே உரிய இயல்பாக எந்தவொரு விஷயத்தையும் தன் கணவனிடம் வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்ளும் யோகிதா, அண்ணியாக வந்திருப்பவள் தன் அண்ணனை வெறுப்பேற்ற என்று எப்படியெல்லாம் திட்டமிட்டு முதலிரவிற்கு தன்னை அலங்கரித்துக் கொண்டாள் என அன்றைய இரவில் கார்த்திக்கிடம் நள்ளிரவு வரை புலம்பி தீர்த்தாள்.

அதன் எதிரொலியாக தான் இப்பொழுது இருவருக்குமே மன்வந்த், நிறைமதியின் பார்வைகளும், சீண்டல்களும் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.

“காபி குடித்து விட்டாயா? நீ எழுந்து தயாராகி வருவதற்குள் உன் மாமியார் காலை சமையலையே முடித்துவிட்டாள்!” என மதிக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு, “சரி… உன் பங்குக்கு போய் ஏதாவதொரு இனிப்பாவது செய்!” என்று அவளை சமையலறைக்கு துரத்தினார் அலமேலு.

“ஸ்வீட்டா… என்ன ஸ்வீட் செய்யட்டும்?” என்று இவள் பதிலுக்கு கேள்வி எழுப்ப முறைப்பாக பார்த்தவர், “உனக்கு எது நன்றாக வருமோ அதை செய். நான் ஏதாவது சொல்லப் போக அதை நீ செய்ய தெரியாமல் செய்து வைத்து எல்லோருடைய வயிற்றையும் கெடுத்து விடாதே!” என்றார் அலட்சியமாக.

‘கிழவி…’ என பல்லைக் கடிப்பவளை சரியாக உணர்ந்த கணவனுக்கு சிரிப்பு பொங்கியது.

“எனக்கு கேசரி நன்றாக வரும், நான் அதை செய்கிறேன்!” என நளினியை பார்வையிட்டுக் கொண்டே அவள் எழ, மருமகளை தொடர்ந்து மாமியார் வேகமாக எழுந்தார்.

ஆனால் அவரின் மாமியாரோ அதை சாமர்த்தியமாக தடுத்து, “நீ எங்கே போகிறாய்? உட்கார். உன் மருமகளுக்கு வாய் மட்டும் தான் ஒழுங்காக வருமா இல்லை சமையலும் ஓரளவு வருமா என்று நான் தெரிந்துக் கொள்ள வேண்டும்!” என்றார் அதிகாரமாக.

தான் மட்டும் தனியாக சென்று செய்ய வேண்டுமா என்று ஒரு கணம் தடுமாறிய நிறைமதி அலமேலுவின் கழுகுப் பார்வை தன்னை கூர்ந்து நோக்கவும் வேகமாக முகத்தை சீர்படுத்திக் கொண்டவள் உள்ளுக்குள் இருக்கும் கலக்கத்தை மறைத்து அவரை அமர்த்தலாக பார்த்து விட்டு சமையலறை சென்றாள்.

மனைவியை பாட்டி சமைக்க சொன்னதில் இருந்து அவள் முகத்திலேயே விழிகளை நிலைக்க விட்டிருந்த மன்வந்த் கணப்பொழுதில் அவளிடம் தோன்றி மறைந்த கலக்கத்தை கண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *