*1*

 

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பத்து மைல் தொலைவில் சென்னை செல்லும் மார்க்கத்தில் நகரின் ஆரவாரமும், போக்குவரத்தும் அடங்கும் இடத்தின் அருகாமையில் உள்ள முக்கிய பிரதான சாலையில் அமைந்திருந்தது அக்குடியிருப்பு பகுதி. லக்சோரியஸ் எனப்படும் ஆடம்பரமான டியுப்லெக்ஸ் அமைப்பை கொண்ட இருபது வில்லாக்கள் அடங்கியிருந்த இடத்தை சுற்றிலும் சுற்றுசுவர் எழுப்பப்பட்டு நுழைவுவாயிலின் அருகே ஒருபுறம் அழகிய சிறுவர் பூங்காவும் எதிர்ப்புறமாக பாதுகாவலரின் குடிலும் அமைக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு வீட்டின் வரவேற்பறையில் குழுமியிருந்த இளையவர் முதல் மூத்தவர் வரை உள்ள அக்குடும்ப அங்கத்தினர் அனைவரிடமும் அப்பொழுது அங்கே பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருந்தது.

அவ்வீட்டின் நான்காம் தலைமுறையினர் தவிர மற்ற அனைவரும் கைபேசியும் கையுமாக அறையின் குறுக்கே இதற்கும் அதற்கும் நடந்துக் கொண்டும், பிள்ளைகளின் அருகே அமர்ந்தபடியும் எதிர்புறத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தீவிரமாகவும் என முகத்தில் பல்வேறு பாவனைகளை வெளியிட்டபடி தங்கள் வீடு பெருமைக் கொள்ளும் மிக முக்கியமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டிருந்தனர்.

தங்கள் கைகளை கன்னத்தில் முட்டுக் கொடுத்து தாங்கியபடி அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்திருந்த குழந்தைகள் இருவரும் திரும்பி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள் பின்பு சைகையில் தோள்களை குலுக்கி உதட்டை பிதுக்கி கொண்டனர்.

கண்ணசைத்த பத்து வயது தமையனின் தூண்டுதலில் வேகமாக தலையாட்டிய ஐந்து வயது சிறுமி அருகில் உட்கார்ந்திருந்த தன் தந்தையின் முழங்கையை மெதுவாக சுரண்டினாள்.

“ம்… ஆமாம் ஆமாம், இன்று தான்!” என அலைபேசியில் பதில் அளித்துக் கொண்டிருந்த மன்வந்த் அவர்களிடம், “ஒரு நிமிடம்…” என்றுவிட்டு, “என்னடா?” என்று மகளிடம் குனிந்து விவரம் கேட்டான்.

“டிவியில் சவுண்ட் வைங்க, அம்மா ப்ரோக்ராம் போடப் போறாங்க!”

“இல்லைடா… இன்னும் அதற்கு பத்து நிமிடங்கள் இருக்கிறது!”

“அப்போ அதுவரை எல்லோரும் போனிலே தான் பேசிக்கிட்டே இருக்கப் போறீங்களா?” என்றாள் குழந்தை மிகவும் கவலையாக.

அதில் தன்னை மீறி நகைத்து விட்டவன் மனைவியின் புருவங்கள் உயர்வதை கண்டு ஒன்றுமில்லை என இதழசைத்து புன்னகைத்து விட்டு மகளை ஆசையுடன் தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

கையில் இருந்த அலைபேசியில் இருந்து, “ஹலோ… ஹலோ…” என விடாமல் தொடர்ந்து குரல் கேட்கவும், “டேய்… விஷயம் அவ்வளவு தான் நீ லைனை கட் பண்ணு. இங்கே உன் மருமகள் எங்களை பார்த்து ரொம்ப அலுத்துக் கொள்கிறாள்!” என்று இணைப்பை துண்டித்தான்.

தன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவளின் கன்னத்தோடு கன்னம் உரசியவன், “சரி… இனி அப்பா பேசவில்லை, நாம் டிவி பார்க்கலாமா?” என்றான்.

“ம்… டேய் அண்ணா… ஒருவழியா அப்பா பேசி முடித்து விட்டார். நாம் அம்மாவை டிவியில் பார்க்கலாம்!” என்றாள் மதிநிலா உற்சாகமாக.

“ஆங்… பார்க்கலாம் பார்க்கலாம்… இதை வைத்து தான் நாளை நான் பள்ளி செல்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்!” என்றான் நிகித் கேலியாக.

“அப்போ… நானு… நானு…” என்று தந்தையின் மடியில் தங்கை குதிக்க கண்டு நகைத்தவனின் மண்டையில் பின் பக்கமிருந்து ஒரு செல்லக் குட்டு விழுந்தது.

“அவுச்… பாட்டி!” என்று தலையை தேய்த்தபடி தன்னை முறைத்த பேரனிடம் கிசுகிசுத்தார் நளினி.

“டேய்… இது மட்டும் உன் அம்மாவின் காதில் விழுந்திருந்தது, நீ இன்று அவளிடம் செமயாக மொத்து வாங்கி இருப்பாய்!”

“ஹஹா… அதனால் தானேம்மா அவள் போன் பேசும் பொழுது பயப்பிள்ளை தெளிவாக அறிக்கை வாசிக்கிறது!” என நகைப்பில் பளபளத்த முகத்துடன் மகனின் தோள்மீது கைப்போட்டான் மன்வந்த்.

“ரொம்ப சரியாக சொன்னீர்கள் டாடி, அம்மா அமைதியாக உட்கார்ந்திருக்கும் பொழுது இதையெல்லாம் நான் சொல்வேனா என்ன… பாட்டிக்கு இன்னும் என்னை பற்றி ஒன்றுமே தெரியவில்லை!” என்று அவனிடம் அழகாக கண்சிமிட்டினான் நிகித்.

“என்ன? ஏதோ என்னை பார்த்து பார்த்து அப்பாவும், பிள்ளையும் ஜாடை பேசுவது போல் தெரிகிறது!” என்றபடி வந்து கணவனின் அருகில் அமர்ந்தாள் நிறைமதி.

“அது… ஒன்றுமில்லை அம்மா, டிவியில் உங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து விடப் போகிறார்கள் சீக்கிரமாக போனை கட் செய்து விட்டு சத்தம் வையுங்கள் என்று அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!” என்றான் நிகித் வேகமாக.

ஆஹான்… என நம்பாத பாவனையில் இழுத்தவள், கணவனின் விழிகளில் வெளிப்பட்ட ரகசிய சிரிப்பிலும், அனைவரையும் முந்திக் கொண்டு மகன் அவசரமாக பேசியதிலும் அவன் தன்னை பற்றி தான் ஏதோ கேலிப் பேசி இருக்கிறான் என்பது புரிந்தாலும் தற்பொழுது இருக்கும் பரபரப்பில் அதை ஏன் பெரிதுப்படுத்திக் கொண்டு என கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டாள்.

“என்னடி செல்லம் ரொம்ப அமைதியாக இருக்கிறாய்? உன் முகத்தை பார்த்தாலே பையன் சொன்னதை நீ நம்பவில்லை என்பது நன்றாக தெரிகிறதே!” என்று மனைவியின் புறம் சாய்ந்து மெல்லிய குரலில் வினவினான் மனு.

“ம்… நம் பையன் தானே இவனை அப்புறம் கவனித்துக் கொள்ளலாம். இப்பொழுது எனக்கு என்னுடைய நிகழ்ச்சியை நினைத்தால் தான் ரொம்ப படபடப்பாக இருக்கிறது!” என்றாள் மதி லேசான பதற்றத்துடன்.

“அதிலென்ன டென்ஷன் உனக்கு? அதெல்லாம் நீ சூப்பராக ஜமாய்த்து இருப்பாய் டோன்ட் வொர்ரி!” என்று அவளை தேற்றினான்.

“என் மேல் அவ்வளவு நம்பிக்கையா மாமா?” என்றாள் அவள் பெரும் எதிர்பார்ப்புடன் ஆவலாக.

“உன்னை நம்புகிறேனோ இல்லையோ… உன்னுடைய பேச்சின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எதையும் பேசியே சாதித்து விடுபவள் நீ, அதனால் தான் பல பேர் பேச்சளவில் மட்டும் சலித்துக் கொள்ளும் ஒரு விஷயத்தை நீ துணிச்சலுடன் கையில் எடுத்து இவ்வளவு பெரிய இடத்தை அடைந்து இருக்கிறாய்!”

கண்கள் இடுங்க அவனை பார்த்த மதி, “ஹும்… நீ பாராட்டுகிறாயா அல்லது ஓட்டுகிறாயா என்பதை கூட என்னால் இப்பொழுது யோசிக்க முடியவில்லை மது!” என்றாள் பெருமூச்சுடன்.

“ம்… பாட்டி பார்க்கிறார்கள்!” என்றவன் எச்சரிக்க, “ப்ச்… அதற்கென்ன வேலை? சரியான தில்லாலங்கடி. போன் பேசினாலும் பாருங்கள் கண்ணையும், காதையும் இங்கேயே தான் வைத்திருக்கும்!” என்று மெலிதான குரலில் வெளியே புன்னகைத்தபடி கணவனிடம் அவனுடைய பாட்டியை பற்றி பொருமினாள் அவள்.

தனது பாட்டியை மனைவி வெறுக்கும் காரணம் அவனுக்கு நன்றாகவே தெரியுமாதலால் லேசான புன்சிரிப்போடு அவள் பேசுவதை கேட்டிருந்தவன், “மனு…” என்று அலமேலு அதிகாரமாக அழைக்கவும், “என்ன பாட்டி?” என்றான் அவரிடம் வேகமாக.

“அங்கே என்ன உன் பெண்டாட்டி என்னை பார்த்து குசுகுசுவென்று ஏதோ சொல்கிறாள்?”

“அதுவா… பாட்டிக்கு என் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் என்னால் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது எனும் பொழுது அதை அவருக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆர்வமாக அழைத்து சொல்கிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு ரொம்பவும் பெரிய மனது என்று சிலாகித்து கொண்டிருக்கிறாள் பாட்டி!” என புளுகும் கணவனை கண்டு கொதிப்படைந்த நிறைமதி பிறர் அறியாமல் அவன் தொடையை நறுக்கென்று கிள்ளி வைக்க, வலியில் முகத்தை சுளிக்காமல் இருக்க பெரிதும் சிரமப்பட்டு விட்டான் மன்வந்த்.

“ம்க்கும்… நான் ஏன் அவளை பற்றி சொல்கிறேன்? இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தப்பிறகு அவளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பையும், சுதந்திரத்தையும் பற்றி தான் பெருமையாக பேசினேன்!” என்று அலமேலு நொடிக்க, மனைவியின் கோபத்திற்கு பயந்து அவளருகில் இருந்து சட்டென்று எழுந்து விட்ட மனு, “சரி… சரி… எல்லோரும் போனை சைலண்டில் போடுங்கள். ப்ரோக்ராம் ஆரம்பிக்கப் போகிறார்கள், யாரும் எதுவும் பேசக் கூடாது அமைதியாக இருக்க வேண்டும். அப்பா, தாத்தா முக்கியமாக உங்களுக்கு தான் வாட்சப், பேஸ்புக் என ஏதாவது வீடியோவை அலற விடாதீர்கள். அப்புறம் குட்டிம்மா… நிகழ்ச்சியில் அம்மாவும், அந்த ஆன்ட்டியும் பேசுவது புரியவில்லை என்றாலும் குறுக்கே கேள்வி எதுவும் கேட்காமல் விளம்பரத்தின் பொழுது தான் உன் சந்தேகத்தை எங்களிடம் கேட்க வேண்டும் என்ன புரிகிறதா?” என்று வேகமாக மகளுக்கும் அறிவுறுத்தினான்.

அலமேலுவின் வார்த்தைகளில் புசுபுசுவென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்த நிறைமதி கணவனின் கைங்கர்யத்தால் தன்னை சிறிதே ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தானும் கவனத்தை தொலைக்காட்சியில் ஒருமுகப்படுத்தினாள்.

அவளின் முகத்தில் வெளிப்பட்ட அமைதியில் நிம்மதியடைந்த மனு கெத்தாக மனைவியின் அருகில் வந்து அமர, “நீ நடத்துடா… என்னை சமாளிக்கின்ற விஷயத்தில் உன்னை யாரும் அடித்துக் கொள்ள முடியாது!” என்று தன் கருவிழியை கூட அவன் புறம் திருப்பாது முணுமுணுத்தாள் அவள்.

லேசாக பெருமூச்சு விட்டவன், “என்னை வேறு என்னடா செய்ய சொல்கிறாய்?” என்றான் பரிதாபமாக.

“சரி… சரி.. உடனே ப்யூஸ் போகாதேடா!” என்று செல்லமாக கடிந்தபடி அவனுடைய விரல்களுக்குள் தனது விரல்களை நுழைத்து கோர்த்துக் கொண்டவள் அவனது கரத்தை இழுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

அடுத்த நொடி பளீரென்று முகம் மலர்ந்தவன் அவளிடம் நெருங்க துடித்த மனதை அடக்கி தானும் திரையில் கவனத்தை பதித்தான். மனைவியிடம் அவனுக்கு மிகவும் பிடித்த குணமே இது தான். ஒரு விஷயம் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட கணவனுக்காகவும், தனது மாமியாரின் அன்பிற்காகவும் பெரும்பாலும் விட்டுக் கொடுத்து சென்று விடுவாள் நிறைமதி.

அந்த வீட்டில் முக்கியமாக அலமேலுவின் கொட்டும் குணத்திற்கு தான் இவள் நிறையவே சகித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். மனுவின் அன்னை நளினியே அவன் தந்தை சம்பத்தை கைப்பிடித்து அங்கே காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து மாமியாரோடு குணத்திற்கு பொறுமையாக தலைவணங்கி சென்று விடுவார் என்பதால் மதியும் அவ்வாறே நடக்க வேண்டியதாக இருந்தது.

இத்தனை வருடங்கள் அவரின் பேச்சிற்கு கட்டுப்பட்டு எங்கள் வாழ்க்கை ஓடிவிட்டது. இனியும் அவர் வாழ்கின்ற காலம் வரை நாம் இப்படியே அவருக்கு கீழ்படிந்து நடந்து வீட்டில் நிலவுகின்ற அமைதியையும், நிம்மதியையும் தொடர்ந்து நிலைக்கச் செய்வோம் என்கின்ற நளினியின் சொல்லுக்காக தான் அவள் அலமேலுவிடம் எகிறாமல் பொறுத்துச் செல்வதே.

“யேய்… இதோ போட்டுட்டாங்க. அம்மா… டிவியில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” என நளினியிடம் இருந்து குதித்துக் கொண்டு ஓடிவந்து மதியின் மடிமீது ஏறி அவளின் கழுத்தை கட்டிக்கொண்ட குழந்தையை தாயாக அவள் வாஞ்சையோடு உச்சிமுகர, அலமேலுவின் அடுத்த நறுக்கென்று பேச்சு உடனே அங்கே தெறித்து விழுந்தது.

“ஹ… ஏன்? அப்பொழுது உன் அம்மா நேரில் அழகாக இல்லை என்கிறாயா…” என்றார் குழந்தையிடம் இடக்காக.

‘கிழவி…’ என்று நிறைமதி உள்ளுக்குள் பல்லைக் கடிக்கும் நேரம், அவள் மகள் தன் கொள்ளுப் பாட்டிக்கு சரியான பதிலடி கொடுத்தாள்.

“ஏன்…? என் அம்மா எப்பொழுதுமே அழகு தான்!” என்று அவரிடம் ரோசமாக உரைத்தவள் தன் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, “பாவம்… உங்களுக்கு தான் அது இல்லை, டொக்கு கன்னம்!” என அலமேலுவை பார்த்து கலகலவென்று நகைத்தாள் மதிநிலா.

மகளின் பேச்சில் பெற்றோர் இருவருக்குமே உள்ளுக்குள் சிரிப்பு வெடித்துக் கிளம்பினாலும் பேத்தியின் கேலியில் அதிர்ந்துப் போய் அவள் வயதிற்கு சமமாக பேசும் வழியறியாது பரிதவித்து நின்ற பாட்டியை கண்டு சற்றே மனமிரங்கிய மன்வந்த், “குட்டிம்மா… பெரியவர்களை அப்படி பேசக் கூடாதுடா தங்கம்!” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினான்.

“அப்போ… அவர்கள் மட்டும் கொஞ்சம் கூட டீசன்சியே இல்லாமல் நானும், அம்மாவும் பேசும் பொழுது குறுக்கே பேசலாமா?” என்று தந்தையை மடக்கினாள் அவள்.

“அது…” என்று மனு தடுமாற, “என் வீட்டு ரோஜா குட்டி இங்கே தாத்தாவிடம் வாங்க, அதற்கு நான் பதில் சொல்கிறேன்!” என பேத்தியை அழைத்தார் சம்பத்.

அவரருகில் ஓடிச் சென்றவளை அள்ளி மடியில் அமர்த்திக் கொண்டவர், “பெரிய பாட்டிக்கு அந்த காலத்தில் யாரும் டீசன்சி பற்றி சொல்லித் தரவில்லையாம்டா, அதனால் அவர்கள் அப்படி தெரியாமல் பேசி விட்டார்கள்!” என்றார் தன் அம்மாவிற்கு ஆதரவாக.

ஓ… என யோசனையாய் இழுத்தவள், “அப்படியா பாட்டி?” என்று அவரிடம் உறுதிப்படுத்த முனைந்தாள்.

அவளை சமாளிப்பதாக நினைத்து அவர் ஆமென்று தலையாட்டி வைக்க, “அப்ப சரி… இனிமேல் எனக்கு ஸ்கூலில் சொல்லி தருவதை எல்லாம் நான் உங்களுக்கு தினமும் வீட்டில் சொல்லித் தருகிறேன் கற்றுக் கொள்ளுங்கள். எப்படி டீசன்டா நடந்துக்கனும், மத்தவங்களை எப்படி ஹர்ட் பண்ணாம பேசனும் இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப முக்கியமா தேவை!” என்றாள் மதிநிலா அதிகாரமாக.

தன்னை மேலும் சின்னப் பிள்ளையிடம் மாட்டி விட்ட மகனை அலமேலு நன்றாக முறைத்து வைக்க, “பட்டு தங்கம்… அம்மா நிகழ்ச்சியின் பொழுது யாரும் பேசக் கூடாது என்று அப்பா சொன்னார்கள் அல்லவா, நாம் அமைதியாக டிவி பார்க்கலாம் வா!” என பேத்தியின் கவனத்தை திசை திருப்பியபடி தானும் மெதுவாக திரும்பிக் கொண்டார் சம்பத்.

நடக்கும் நாடகத்தை பார்த்து நளினி தன் மருமகளிடம் கேலியாக கண்சிமிட்ட, அவள் அலமு அறியாமல் பதிலுக்கு விரிந்த புன்னகையுடன் தன் கட்டை விரலை உயர்த்தி காண்பித்தாள்.

அதன்பிறகு அனைவரும் தீவிரமாக நிறைமதியை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் மூழ்கிப் போனார்கள். விளம்பர இடைவேளையின் பொழுது நிலா கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சம்பத் அவளுக்கு ஏற்றவாறு பொறுமையாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க நிகித்தும் தாத்தா கூறுவதை ஆர்வமாக கேட்டிருந்தான்.

“ரொம்ப தெளிவாக பேசி இருக்கேடா!” என்று நளினி மருமகளை பாராட்ட, அவள் தன் கணவனை கேள்வியாக பார்த்தாள்.

ம்… என்று இழுத்தவன், “நிகழ்ச்சி முழுவதும் முடியட்டும் நான் சொல்கிறேன்!” என்க, ஹும்… என உதட்டை சுழித்துக் கொண்டாள் மதி.

இதழ்கள் மெலிதாக விரிய, “என்னடி ரொம்ப தான் சுழிக்கிறாய்?” என்று அவள்புறம் குனிந்து கிசுகிசுத்தான்.

இவள் வாயை திறக்கும் நேரம், “அம்மா… பேசாதீங்க விளம்பரம் முடிஞ்சிடுச்சு!” என மகள் உத்திரவு இடவும் இருவரும் அமைதியாகினர்.

நிறைமதியின் பேட்டி முடிந்து அடுத்த நிகழ்ச்சி ஆரம்பம் ஆகவும் நளினி, சம்பத், தாத்தா ரத்தினம் என அனைவரும் அவளை மாற்றி மாற்றி பாராட்டினர்.

“நீ இந்த துறையில் இறங்குகிறேன் என சொன்னப் பொழுது எனக்கு கூட ரொம்ப தயக்கமாக இருந்ததும்மா. உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று… ஆனால் நினைத்ததை சாதித்துக் காட்டிவிட்டாய்!” என்றார் ரத்தினம் நிறைவாக.

“தேங்க்ஸ் தாத்தா!”

“ஆமாம்… நீ எதை செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று எங்களுக்குள் ஒரு நம்பிக்கையை உருவாக்கி விட்டாய். கீப் இட் அப்!” என்று தோளை தட்டும் சம்பத்திடம், “தேங்க்ஸ் மாமா!” என புன்னகைக்கும் நேரம், நிகித் வந்து அவளை இறுக்க கட்டிக்கொண்டான்.

“ஐ ஆம் சோ ப்ரௌட் ஆப் யூ மா!” என்றான் மகிழ்ச்சியுடன்.

அவன் உச்சியில் இவள் இதழ் பதிக்கும் பொழுது, “நானு… நானு…” என்று கால்களை கட்டிக்கொண்ட மகளை தூக்கியவள் அவளுக்கு முத்தமிட்ட நேரம் அவள், “ஐ லவ் யூ மா!” என கழுத்தை வளைத்ததில் உள்ளம் நெகிழ்ந்து, “மீ டு டா செல்லம்!” என்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் மதி.

“ம்… எப்படியோ ஒரு பெயர் எடுத்து விட்டாய், காலத்திற்கும் அது கெடாமல் இந்தக் குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றப் பார்!” என்றார் அலமேலு அலட்டலாக.

சின்னப் புன்சிரிப்புடன், “சரி பாட்டி!” என்றவள் ஆர்வமாக கணவனை திரும்பி பார்க்க, “நீ நிச்சயமாக நினைத்ததை சாதிப்பாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அதை தொடக்கமாக கொண்டு இன்னமும் உன்னால் வளர முடியும் என்பதை உன் பேட்டி நிரூபித்து விட்டது. உன்னுடைய அடுத்த இலக்கும் கண்டிப்பாக வெற்றியை முத்தமிடும், அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று கண்களில் காதல் மிளிர தனது எதிர்கால லட்சியத்திற்கும் சேர்த்து வாழ்த்து தெரிவிப்பவனை விழிகள் மின்ன பார்த்தாள் நிறைமதி.

குடும்பத்தினரை பார்வையாளராக வைத்துக்கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர முடியாமல் தடுமாறும் மகனையும், மருமகளையும் புரிந்துக் கொண்ட நளினி அனைவரையும் ஓய்வெடுக்க விரட்டினார்.

“சரி நேரம் தான் பத்தாகி விட்டதே குழந்தைகளை தூங்க வைம்மா. நீங்களும் சென்று ஓய்வெடுங்கள்!” என்றவர் கணவரிடம் கண் காண்பித்து விட்டு தங்கள் அறைக்கு சென்றார்.

“சரி ஓகே… குட்நைட்!” என்று சம்பத் நடையை கட்டவும் முதியவர்களும் தங்கள் அறைக்கு கிளம்பினர்.

“குட்டிம்மாவிற்கு இன்னும் தூக்கம் வரவில்லையா?” என்று கையில் இருக்கும் மகளை கொஞ்சியபடி மதி நடக்க, “எனக்கு சுத்தமாக வரவில்லைம்மா!” என வேகமாக அறிவிக்கும் மகனை கண்டு கணவனின் முகம் அஷ்டகோணலாவதை பார்த்து கீழுதட்டை கடித்து நமட்டு சிரிப்பு சிந்தினாள் நாயகி.

“அதெல்லாம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு படுத்தால் நன்றாக வரும்டா!” என்று அவன் தோளில் கைப்போட்டு இழுத்து சென்ற மன்வந்த் நிகித்தை அவனுடைய கட்டிலில் மேலேற்ற முயல, அவனோ ஏற மறுத்து முரண்டினான்.

“டாடி… எனக்கு தான் தூக்கம் வரவில்லை என்று சொல்கிறேன் இல்லை…”

“டேய்… அதற்கு என்னடா செய்ய சொல்கிறாய்? நாளை காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு கிளம்ப வேண்டாமா… அமைதியாக படுத்து தூங்கு!” என்று அவனை பிடித்து வலுக்கட்டாயமாக மீண்டும் கட்டிலின் ஏணியில் ஏற்றுபவனை திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு மேலேறிச் சென்று படுத்தான் நிகித்.

பெரிய படுக்கையறையின் ஒரு பகுதியிலேயே டபுள் டெக்கர் எனப்படும் இரண்டு அடுக்கு கட்டில் போடப்பட்டு பெரிய கர்டைன் கொண்டு அறை இரண்டாக பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் என பிரிக்கப்பட்டிருந்தது.

கீழ் கட்டிலில் மதி விட்டவுடனே சமத்தாக போர்த்திக் கொண்டு படுத்திருந்த மகளை கண்டு புன்னகைத்தவன், “பார்… என் குட்டிப்பாப்பு தான் சரி, எந்த முரண்டும் பிடிக்காமல் அழகாக படுத்துக் கொண்டாள்!” என்று கொஞ்சியபடி நிலாவின் நெற்றியில் மனு மென்மையாக முத்தம் பதிக்க, மதிக்கு சிரிப்பு தான் ஊற்றெடுத்தது.

பெரும்பாலும் நிலா தான் தனியாக உறங்க மறுத்து தூக்கம் வரவில்லை என சாக்கு சொல்லி இவர்கள் கட்டிலில் வந்து படுத்துக்கொண்டு வளவளவென்று உறங்காமல் பேசிக்கொண்டிருப்பாள்.

இன்று அண்ணன் அடம் செய்வதை பார்த்ததும் இவள் நல்லப் பிள்ளையாகி விட்டாள். அப்பொழுது தானே பெற்றோர் தன்னை குறித்து அண்ணனிடம் பெருமையாக பேசுவர்.

எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கவும் தனது சகோதரனை சீண்டலாக நோக்கியது சின்னக்குட்டி. அவனோ அனைவரையும் பார்வையால் வெட்டி முகத்தை சுளித்துக் கொண்டு தலை வரை ப்ளாங்கட்டை இழுத்து போர்த்திக் கொண்டான்.

“ஓகே… குட்நைட்!” என அறை விளக்கை அணைத்து இரவு விளக்கை ஒளிரூட்டிய மன்வந்த், கர்டனை இழுத்துவிட்டு தங்கள் பகுதிக்கு வரவும் அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக கணவனை இறுக கட்டிக்கொண்டாள் மதி.

அவன் முகத்தில் ஓசையில்லா சில முத்தங்களை பதித்து, “ஐ லவ் யூ… எல்லாம் உங்களால் தான், நீங்கள் தான் அனைவரையும் சமாளித்து என்னுடைய இந்த முயற்சிக்கு பக்கபலமாக நின்றீர்கள்!” என்று ரகசிய குரலில் மொழியும் மனைவியை அணைத்தவாறே மென்சிரிப்புடன் கட்டிலுக்கு தள்ளிச் சென்றவன் அமைதியாக அவளை தன் கைவளைவில் வைத்தபடி அமர்ந்துக் கொண்டான்.

அவன் தோளிலிருந்து தலையை உயர்த்தியவள், “என்னவாயிற்று? ஏன் இந்த அமைதி?” என்றாள் குழப்பத்துடன் விலகி அமர்ந்து.

அவளை மீண்டும் தன்னோடு இழுத்துக் கொண்டவன், “நாம் கடந்து வந்த நம் வாழ்க்கை பாதையை நினைத்துப் பார்த்தேனா… மனம் அதில் ரசனையுடன் மூழ்கி விட்டது!” என்று அவள் தலையோடு தலை சாய்ந்தான்.

“ஓ…” என்று மகிழ்ச்சியுடன் இழுத்தவள், “எதை நினைத்தீர்கள்?” என்றாள் அவன் கைவிரல்களில் விளையாடியபடி புன்னகையுடன்.

“ம்… இப்பொழுது நமக்கு இத்தனை முத்தம் கொடுத்து லவ் சொல்கிறவள், பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் கட்டிய தாலியை சற்றும் யோசிக்காமல் அடுத்த நிமிடம் கழற்றி நம் மீது வீசி எறிந்தாளே என்று நினைத்துப் பார்த்தேன்!” என்றான் மன்வந்த் கேலியாக.

வெடுக்கென்று விலகிய நிறைமதி, “ஓஹோ… ஏன் அதற்கும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்னை தொடுகிற வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதே என என்னிடம் அப்படி எரிந்து விழுந்து சண்டைப் போட்டவர் இன்று இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக்கி வைத்திருக்கிறீர்களே அது ஞாபகம் வரவில்லையா?” என்றாள் முறைப்பாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *