நேர்மை

 

 

நேர்மை… இந்த வார்த்தையை படித்ததும் நம் மனதில் தோன்றுவதென்ன? எதை செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலமின்றி பொய்யுரைக்காமல் எந்த காரியத்திலும் நேர்மை இருக்க வேண்டும். இது எங்கெல்லாம் பொருந்தும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், அரசியல், சினிமா, சமூகம்… இப்படி பல வெளியிடங்களை குறிப்பிடுவோம். ஆனால் இவற்றை எல்லாம் விட மிக முக்கியமானது இந்த நேர்மை என்ற சொல் முதலில் நம் மனதிலிருந்து வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்.

வீட்டிலா? நம் வீட்டில் நாம் நேர்மையாக இருப்பதில்லையா என்ன என்ற பலமான கேள்வி நம்மில் பலருக்கு எழும். சரி நம்மில் எத்தனை பேர் நம் மனசாட்சிக்கு சாதகமாக நேர்மையாக இருக்கிறோம் என பரிசோதித்து பார்க்கலாமா? இது ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அனைவருக்கும் பொதுவானது.

நம்மில் எத்தனை பேர் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு தகுந்த பதிலை சரியான முறையில் கொடுத்திருக்கிறோம்? பிறர் செய்யும் தவறுகளை பலமாக எதிர்க்கும் நாம் ஏன் நம்முடைய தவறுகளை மனமாற ஏற்க முன்வருவதில்லை?

வீட்டில் பொய்யுரைக்கலாம் அது மற்றவரின் மனதை காயப்படுத்தாமல் இருப்பதற்காக என்றால் மட்டும்… எந்த ஒரு தவறான செயலை செய்யும் பொழுதும் மற்றவரை ஏமாற்றி நாம் தப்பித்து விட்டோம் என்ற எண்ணமே மிகத்தவறானது. சரியாக சொன்னால் அங்கே நீங்கள் தான் உங்களிடம் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்.

நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி பாரபட்சம் என்பது மிகவும் வேதனையான விஷயம் தான். உங்கள் பிள்ளைகளிடையே இருக்கும் அவர்களின் திறமைகளை கொண்டு பாரபட்சத்தை விதைத்து ஒரு பிள்ளையை ஆஹோ ஓஹோவென்று புகழ்வதும் அடுத்த பிள்ளையிடம் உனக்கு அவ்வளவு தான் திறமை என கீழிறக்காமல் அவனு(ளு)ள் இருக்கின்ற திறமையை முதல் பிள்ளைக்கு சமமாக அத்துறையில் ஊக்குவித்து ஆளாக்குவதும் நேர்மை தான்.

பிறந்ததிலிருந்து பெற்றவர்களிடம் விரும்பும் உணவு, உடை, கல்வி, பணம், சொத்து என கேட்டுப் பெறுவதில் இருக்கின்ற உரிமையை வளர்ந்து ஆளாகி தனிக்குடும்பம் உண்டான பின் உங்கள் கடமையாய், உரிமையாய் வயதான காலத்தில் அவர்களின் நலனை பேணுவதில் நிரூபிக்க வேண்டும் உங்கள் நேர்மையை…

உடன்பிறப்புகளுக்கு இடையே உள்ள நேர்மையும் அவ்வாறு தான். ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரவரின் படிப்புதிறன், வேலைதிறனுக்கு ஏற்ப வசதி வாய்ப்புகள் வேறுப்படும். அந்த சூழ்நிலையில் நானும் அவர்கள் பிள்ளை தானே என பெற்றோரின் சொத்தில் சமபங்கிற்கு நின்று வாதிடாமல், உடன்பிறப்பின் வாழ்க்கைக்கு கொஞ்சம் விட்டு கொடுத்து கைத்தூக்கி விடலாமே…

இன்னுமோர் அதிமுக்கியமான உறவு கணவன், மனைவி உறவு. வீட்டில் இந்த உறவிற்கு தான் நேர்மை மிக அவசியமானது. கணவனோ, மனைவியோ பிடித்தோ, பிடிக்காமலோ எந்த சூழ்நிலையில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தாலும் அதன்பிறகு பரஸ்பரம் ஒருவர் மீது அடுத்தவர் அன்பு, நம்பிக்கை வைத்து அந்த உறவிற்கு உரிய மரியாதை தர வேண்டும்.

இருபாலரும் தங்கள் இணையின் கௌரவத்தை என்றும் வெளிமனிதர்களிடம் அது குடும்பத்து உறுப்பினர்களாகவே இருந்தாலும் விட்டு தரக்கூடாது. அடுத்தவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அதை தடுப்பது எப்படி உங்கள் கடமையோ அதேவேளையில் அவர்கள் சுட்டிக் காண்பிக்கும் தவறை மனமார ஏற்று அதை மாற்றிக் கொள்ள நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த உறவில் என்றில்லை எந்த உறவிற்கு இடையேயும் சுய ஆலோசனை, பரிசீலனை என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் செய்யும் செயல்கள் சரியா, தவறா என்ற அந்த ஆலோசனையின் முடிவை நேர்மையாக ஏற்றுக்கொண்டு அவ்வழி நடந்தாலே வீட்டில் நடக்கின்ற பாதி பிரச்சினைகள் சுலபமாக விடைப்பெற்று சென்று விடும்.

2 thoughts on “Nermai – Deepababu”

  1. Ama akka nejam daan oru uravugalukul… irukavendiyadu unmaiyana uravum,nermaiyana anbum, daan …….but inda samudhayathil yarum ipadi muluthaga irupathilaiye..?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *