ஞாபகம் வருதே 

 

தீபிகாவுக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது.

இன்று அவளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள்.

இருபத்துமூன்று வயதான தீபிகாவிற்கு, இன்னும் ஓராண்டாவது திருமணத்தை தள்ளி போட வேண்டுமென்று ஆசை.

எப்படியும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு கணவன், வீடு, குழந்தை என்று அவள் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாற தான் போகிறது. அதனால் இன்னும் சிறிது காலம் திருமணத்தை தள்ளி போடலாம் என்று எண்ணினாள்.

ஆனால் அதற்கு அவள் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை.

உனக்கும் வயதாகி கொண்டே போகிறது… இன்னும் எத்தனை வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறாய்? அதெல்லாம் முடியாது. இன்று வருகிற மாப்பிள்ளை ரொம்ப நல்ல இடம், நன்றாக படித்து நல்ல வேளையில் இருக்கிறார். அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்கிற வழியைப் பார். உன்னை விட்டால் ஏதாவது காரணம் சொல்லி தடுத்துக் கொண்டே தான் இருப்பாய் என்று அவள் பேச வாய்ப்பின்றி முடித்து விட்டார்.

அவளை மீறி எதுவும் நடக்காது தான். அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு அவள் அப்பா மோசமானவர் இல்லை என்றாலும் ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது.

ஒரு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது, ச்சே… படித்த பெண் தானே நீ… பெண் பார்க்க வருவதற்கெல்லாம் பயந்து கொண்டு இருக்கின்றாய் என்று அவளை அவளே திட்டிக் கொண்டிருக்கும் பொழுது, வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

அவளின் இதயத்துடிப்பும் அதிகரித்தது, கட்டியிருந்த புடவை நுணியை கைகளில் இறுக பற்றிக் கொண்டாள்.

அவளுடைய அம்மா ரூமிற்குள் வந்து அவள் கைகளில் காபி ட்ரேயை கொடுத்து ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க கூட அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது. குனிந்த தலை நிமிராமல் காபியை கொடுத்தாள்.

மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, அக்கா, மாமா என்று மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தனர்.

“வாம்மா… இப்படி உட்கார். ஏன் டென்ஷனாக இருக்கிறாய்? எல்லாம் பேமிலி பிரெண்ட்ஸ் மாதிரி தான்… ஃபீல் ஃபீரி…” என்று அவளை அருகிலிருந்த சேரில் அமரச் சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா புன்னகையுடன்.

அவரின் பேச்சைக் கேட்டதும் அவளுக்கு சற்று ரிலாக்ஸாக இருந்தது, அவரைப் பார்த்து பதில் புன்னகை சிந்தியவாறு சேரில் அமர்ந்தாள்.

“அப்புறம் எங்களுக்கெல்லாம் உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் ப்ரகாஷை பிடித்திருக்கிறது என்றால் நாங்கள் பெரியவர்கள் பேசி திருமண தேதி முடிவு செய்ய வசதியாக இருக்கும்!” என்று அவளின் முடிவை கேட்டார் அவர்.

“ஓ காட்! டாட்… இந்த கொஸ்டியினை போய் தீபிகாவிடம் கேட்கிறீர்களே… பாவம் அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவார்கள் பாருங்கள்!” என்று துள்ளலோடு குறும்புடன் ஒலித்தது ஒரு குரல்.

தீபிகாவின் விழிகள் சட்டென்று குரல் வந்த திசையை நோக்கின.

அவன் விழிகளும் சிரிப்புடன் அவளையே கூர்ந்து நோக்கி கொண்டிருந்தது.

‘ஓ! இவன் தான் ப்ரகாஷா…’ என்று எண்ணியவளின் கன்னமும், காது மடலும் அவளையுமறியாமல் சூடாகியது.

“ஏன்டா அப்படி சொல்கிறாய்?” என்று கேட்டார் அவனுடைய அக்கா.

“பின்னே என்னை பார்த்தால் தானே பிடித்திருக்கிறதா… இல்லையா என்று தெரியும். தீபிகா தான் என்னை பார்க்கவே இல்லையே…” என்றான் வேண்டுமென்றே சோகமாக.

உடனே அந்த இடத்தில் ஒரு சிரிப்பலை தோன்றியது.

தீபிகாவின் முகம் சிவந்து இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

பிரகாஷின் முகத்தில் வெற்றி பெருமிதம் தோன்றியது.

“என்ன பிரகாஷ்… நீ எதுவும் தீபிகாவிடம் தனியாக பேச வேண்டுமா?” என்று கேலியாக கேட்டார் அவன் மாமா.

“பப்ளிக் முன்னாடி டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு தனியாக பேசுவதெல்லாம் எனக்கு ஒத்து வராது. நாங்கள் அதை பிறகு பிளான் செய்து கொள்கிறோம்!” என்றான் அவனும் பதிலுக்கு கிண்டலாக.

“ஓ! சாரி… சாரி… தீபிகா நீங்கள் எதுவும் என்னிடம் தனியாக பேச விரும்பினால் நான் ரெடி!” என்றான் குறும்பாக.

அவள் புன்னகையுடன் மறுத்து தலையசைத்தாள்.

பிறகு நிச்சயத் தேதியை பேசி முடிவு செய்தனர் பெரியவர்கள்.

நிச்சயத்தார்த்த விழாவின் பொழுது தீபிகாவிற்கு ஒரு மொபைல் போன் பரிசளித்தான் பிரகாஷ்.

அதன் பிறகென்ன… ஒரே கடலை தான்.

சிறுவயது முதல் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொன்றையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

தன் தம்பியுடன் ஐஸ் பாய் விளையாடும் பொழுது கதவிடுக்கில் மூக்கை நசுக்கி தையல் போட்டது வரை அவளிடம் சொன்னான்.

ஒவ்வொன்றையும் அவன் சொன்ன விதம் ரசிக்கும் படியாக இருந்தது.

திடீரென்று ஒரு நாள், “தீபு… அப்புறம் உன்னிடம் இன்னொன்றும் சொல்ல வேண்டும்!” என்றான் பிரகாஷ்.

“என்ன?”

“ஒன்றுமில்லை… அபிஷியல் பார்ட்டி அன்ட் பிரெண்ட்ஸ் கூட ஏதாவது செலப்ரேஷன் என்றால் லைட்டா டிரிங் பண்ணுவேன். தம் அடிப்பதெல்லாம் மூடைப் பொறுத்து ரேர் தான். பார்ட்டி தான் எப்படியும் மன்த்லி ஒன்ஸ் ஆர் டூ மன்த்ஸ் ஒன்ஸ் வரும்!” என்று கூலாக அவள் நெஞ்சில் பதற்றத்தை உண்டாக்கி விட்டு, அடுத்த டாபிக்கை பேச ஆரம்பித்து விட்டான் அவன்.

அதன்பிறகு அவன் பேசிய பேச்சுக்கள் எதுவும் அவள் மனதில் பதியவில்லை. அவளுடைய அரைகுறை பதிலை வைத்து அவளின் மனநிலையை உணர்ந்து கொள்ளும் விவரமும் அவனுக்கு இல்லை. பேசி முடித்து விட்டு இரவு வணக்கம் சொல்லியபடி அவன் லைனை கட் செய்ய இவள் யோசனையில் ஆழ்ந்தாள்.

அவர்கள் வீட்டில் அப்பா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா என்று யாருக்கும் இந்த மாதிரி பழக்கம் எல்லாம் கிடையாது.

இவருக்கு இந்த பழக்கம் இருப்பது தெரிய வந்தால் வீட்டிலுள்ளவர்கள் என்ன சொல்வார்கள் என்று தவித்தாள்.

இரவு தூக்கமும் கெட்டு, மறுநாள் பகல் முழுவதும் குழம்பிவள் அக்குடும்பத்தில் மூத்தவனான தன் ஒன்று விட்ட அண்ணனுக்கு டயல் செய்தாள்.

“ஹலோ… சொல்லும்மா!” என்றது தான் தாமதம், கடகடவென்று நடந்தை கூறியவள்,

“இப்பொழுது என்னண்ணா செய்வது? அப்பாவுக்கு தெரிந்தால் என்ன சொல்வாரென்று தெரியவில்லையே…” என்றாள் குரல் கமற.

“ப்ச்… ஏய்… அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ டென்ஷனாகதே… சித்தப்பாவிடம் சொல்லி அவரையும் கலவரப்படுத்திடாதே… இக்காலத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பார்ட்டியின் பொழுது மட்டும் என்றால் ஓகே, பிரச்சினை இருக்காது. தனியாக தேடிப் போகும் அளவுக்கு பழக்கம் இருந்தால் தான் ஆபத்து. இவர் தான் அப்படியில்லை இல்லை… ஸோ நோ பிராப்ளம்!” என்றான்.

“அப்பொழுது பயப்படத் தேவையில்லை என்கிறீர்களா?” என்றாள் தீபிகா தயக்கத்துடன்.

“ம்… ஆமாம். அதுவும் இல்லாமல் இவ்வளவு ஓப்பனாக சகஜமாக பேசுபவர் நல்லவராக தான் இருப்பார்!” என்றான் நம்பிக்கையுடன்.

“ஓ… சரி சரி!” என்று நிம்மதியுடன் புன்னகைத்தாள்.
அதுவரை இருந்த மனக்குழப்பம் தெளிந்து பிரகாஷிடம் தீபிகா நார்மலாக பேச ஆரம்பித்தாள்.

அவ்வப்பொழுது ஆன் டியுட்டி, அஃபிஷியல் ஒர்க் என்று மாதம் இருமுறை இடைப்பட்ட மூன்று மாதத்தில் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியபடி தீபிகாவை வந்து நேரில் பார்த்துச் சென்றான் பிரகாஷ்.

சூழ இருந்தோர் கேலியில் தீபிகாவிற்கு தான் வெட்கமாக போயிற்று. வருபவனும் அமைதியாக இல்லாமல் தன் இயல்பான பழக்கத்தால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டான்.

நாட்கள் வேகமாக பறந்து, திருமணம் முடிந்து இதோ இன்று ஹனிமூனுக்கு ஊட்டி வரை வந்து விட்டார்கள்.

முதல் நாள் முழுவதும் ஒருவர் கரத்தோடு மற்றவர் கரத்தை கோர்த்துக் கொண்டு ஊட்டியை சுற்றி சந்தோசமாக வலம் வந்தனர்.

மறுநாள் ரோஸ் கார்டனில் அமர்ந்து பேசி கொண்டிருந்த பொழுது… திடீரென்று பிரகாஷ், “ஹேய் தீபு.. உன்னிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேனே…” என்றான் வேகமாக.

அவன் வேகம் கண்டு சிரித்தபடி, “என்ன?” என்று கேட்டாள் .

“ம்… நான் யு.ஜி படித்துக் கொண்டிருந்த பொழுது வனிதா என்று ஒரு பெண்ணை காதலித்தேன்!” என்றான் கூலாக.

அதுவரை இருந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்தது போல் இருந்தது தீபிகாவிற்கு.

அவள் மனம் வாடியது, அவனுக்கு தெரியாமல் வெளியில் அமைதி காத்தாள்.

அவனோ உற்சாகமாக தன் வழக்கமான சுயவரலாற்றை!!! சொல்வது போல் இதையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அவள் எங்கள் குவார்டர்ஸில் தான் இருந்தாள். என் பிரெண்டு அவள் பிரெண்டை காதலித்தான். அதனால் நாங்கள் இருவரும் அவர்கள் இருவரோடு துணைக்கு ஒன்றாக சுத்துவோம். அப்படிதான் எங்களுக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு ஆறு மாத காலம் நான்கு பேரும் ஒன்றாக சுற்றி திரிந்தோம். அதன் பிறகு அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்து நாங்கள் வேறு ஊருக்கு சென்று விட்டோம். நான் அந்த ஊரிலேயே பி.ஜி. ஜாயின் பண்ணிட்டேன். முதல் இரண்டு மாதம் வனிதாவிடம் மொபைலில் வாரம் இருமுறை பேசி கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று அவளுடைய நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை… நாட் இன் யூஸ் என்று வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… ஒரு மாதம் கழித்து என் நண்பனிடம் அவளைப் பற்றி விசாரித்தேன். அதற்கு அவன், அவள் உனக்கு வேண்டாம் மச்சான்! அவள் கேரக்டர் சரியில்லை… வேறு ஒருவனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்றான். சரியென்று நானும் விட்டு விட்டேன். அப்பொழுது முடிவு செய்தேன்… இனி என் வாழ்வில் திருமணம் என்றால் அது அப்பா அம்மா பார்க்கும் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று!” என்றான் நீண்ட விளக்கமாக.

‘நல்ல முடிவுடா… படுபாவி… படுபாவி… பரவாயில்லை எல்லாவற்றையும் ஓப்பனாக ஷேர் பண்ணுகிறானே என்று பார்த்தால், இப்படி செய்து விட்டானே!’ என்று மானசீகமாக தலையிலடித்து கொண்டாள் தீபிகா.

‘அதுவும் ஒரு நேரம் காலம் இல்லை… புதிதாக திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் ஹனிமூனில் பேசுகின்ற விஷயத்தை பார்!’ என்று லேசாக எரிச்சல் வந்த பொழுதும் அவன் மேல் அவளுக்கு சற்றும் கோபம் வரவில்லை.

எந்த ஒரு உணர்வுமின்றி அவன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை கூறுவது போல் அவன் சொன்ன விதத்திலேயே அந்த பெண் அவன் மனதில் ஆழமாக இல்லை என்பது அவளுக்கு புரிந்து விட்டது.

யோசிக்க யோசிக்க அவனுக்குள் இருக்கும் குழந்தைதனத்தை அவள் ரசித்தாள்.

மேலும் எந்த நம்பிக்கையில் தன்னிடம் இதை அவன் கூறினான்… இவள் எதுவும் சண்டை போடுவாளோ என்று சற்றும் யோசித்ததாய் தெரியவில்லையே… தன் மீது அவ்வளவு நம்பிக்கையா? என்று ஆச்சரியமாக இருந்தது.

“என்ன யோசனை… சரி கிளம்பலாமா?” என்று கேட்டான் பிரகாஷ்.

தீபிகா அவன் முகத்தையே பார்த்தவாறு மெல்ல தலையசைத்தாள்.

அவன் அவளை கைப்பற்றி எழுப்பி, அவள் தோளில் கைப்போட்டு அரவணைத்தபடி நடக்க ஆரம்பித்தான்.

தீபிகா, திருமணத்திற்கு பின் வரப்போகும் தன் கணவனை தான் காதலிக்க வேண்டும் என்று தனக்கு தானே விதித்துக் கொண்டு அவனுக்காக தன் மனதில் யாருக்கும் இடம் கொடுக்காமல் காத்திருந்தவள்.

கல்லூரியில் படித்த காலத்தில் தனக்கு வந்த இரண்டு ப்ரோபசலையும் தவிர்த்தவள்.

அவள் தான் யாரையும் காதலிக்கவில்லையே தவிர, தனக்கு வரப்போகும் கணவனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

அவள் மிகவும் பிராக்டிக்கல் டைப், இன்றைக்கு இருக்கும் நிலையில் மற்றவர் கேலியினாலோ… தூண்டுதலினாலோ… இல்லை ஈர்ப்பினாலோ ஏதோ ஒன்றால் நிறைய பாய்ஸ் யாரையாவது காதலித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த காதல் அனைவருக்கும் வெற்றியடைந்து விடுகிறதா என்ன? ஏன் அவளை கூட ஒருவன் விடாமல் ஐந்து வருடமாக காதலித்து கொண்டு தான் இருக்கின்றான். ஆனால் அவள் தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்காக அவன் யாரையுமே திருமணம் செய்யாமல் இருக்க வேண்டுமா என்ன? அப்படியில்லை. அதுபோல் தான் தனக்கு வருகின்ற கணவன் ஏற்கனவே காதலில் விழுந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை, திருமணத்திற்கு பின் தனக்கு சின்சியராக இருந்தால் போதும் என்று முடிவு செய்திருந்தாள்.

அதை இப்பொழுது நினைக்கும் பொழுது அவள் இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.

என்ன தான் மனதளவில் எதுவென்றாலும் சரி என்று எதிர்பார்த்திருந்தவள் தான் என்றாலும், தன் ஆசைக் கணவனாகிய காதலன் இப்படி பட்டென்று தேன்நிலவில் விஷயத்தை போட்டு உடைப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.

பிரகாஷ் வேலைப் பார்ப்பது வெளியூர் என்பதால் இருவரும் தனியாக தான் இருந்தனர்.

அவ்வப்பொழுது நண்பர்கள் பொது இடத்தில் குடும்பம் குடும்பமாக சந்தித்து ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொள்வர்.

அவ்வாறு பிரகாஷின் நண்பர்கள் மூன்று பேர் நெருக்கமாக இருந்தார்கள். அதில் இருவர் ஏற்கனவே திருமணமானவர்கள், ஒருவர் மட்டும் தான் பேச்சிலர்.

அதில் தினகர் என்பவன் ரொம்ப ஜாலி டைப், அனைவரையும் ஏதோ ஒன்றில் கலாய்த்து கொண்டே இருப்பான்.

தீபிகாவும் ஒரே மாதத்தில் அவர்களோடு நன்றாக ஐக்கியமாகி விட்டாள். அவள் எப்படி பழகுவாளோ என்று தயங்கி கொண்டிருந்த மற்றவருக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

அப்படித்தான் ஒரு வார இறுதியில், தினகர் வீட்டின் மொட்டை மாடியில் அனைவரும் ஒன்றாக குழுமியிருந்தனர்.

அன்று பௌர்ணமி ஆதலால், நிலாச் சோறு சாப்பிட்டபடி அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென்று தினகர், “ஏம்மா தீபிகா, இந்த திருட்டு பையன் உன்னிடம் எல்லா விஷயங்களையும் ஷேர் செய்திருக்கின்றானா… என்னிடம் இவனைப் பற்றிய ரகசியம் ஒன்றிருக்கிறது. இவன் ஏதாவது உன்னிடம் வாலாட்டினால் சொல்லு… வைத்து செய்திடலாம்!” என்றான் கேலியோடு.

“அது என்ன விஷயம் அண்ணா? அவர் என்னிடம் இதுவரை எதையுமே மறைத்ததே இல்லையே…” என்று வினவினாள் தீபிகா.

“அப்படியா? ஆனால் கண்டிப்பாக இதை சொல்லியிருக்க மாட்டான்!” என்றான் அவன் நம்பிக்கையோடு.

ஒரு நொடி தயங்கியவள், “எது வனிதா விஷயமா?” என்று போட்டு உடைத்தாள்.

சாப்பிட்டு கொண்டிருந்த தினகருக்கு புரை ஏறியது சற்று இருமி சமாளித்தவன், “ஓட்டைவாய்டா நீ… இதையும் சொல்லி விட்டாயா?” என்று பிரகாஷை பார்த்து கேட்டான்.

“ஹேஹேய்… உன்னை மாதிரி ஆட்களுக்கு மிரட்ட சான்ஸ் கொடுப்பேன் என்று நினைத்தாயா?” என்று சிரித்தபடி அருகிலிருந்த மற்றொரு நண்பனிடம் ஹாய்ஃபை அடித்தான் பிரகாஷ்.

“அடப்பாவி… அவள் செமி என்பது முதற்கொண்டு அனைத்தையும் சொல்லி விட்டாயா?” என்று அவன் கண்களை விரிக்க, தீபிகா திகைத்தாள்.

“என்ன… யார் செமி… வனிதாவா? அதை இவர் சொல்லவில்லையே…” என்று அவள் வினவ, ஹேய்… என்று குதூகலத்தில் கத்தினான் தினகர்.

“உனக்கு தெரியுமா தீபிகா? அந்த வனிதா எப்பொழுது பார்த்தாலும் ஈயென்று சிரித்தபடி தான் சுற்றிக் கொண்டிருப்பாள். அருகில் உள்ளவர்கள் அவள் சற்று மறை கழண்ட கேஸ் என்றெல்லாம் கூட பேசிக் கொள்வர்!” என்று ஹஹாவென்று சிரித்தவனை பிரகாஷ் தர்மஅடி வெளுத்தான்.

“இப்பொழுது திருப்தியாடா…” என்று கேட்டபடி.

அதுவரை மனதின் ஓரம் இருந்த ஏதோ ஒரு பளு நீங்கி மனம் லேசாவதை உணர்ந்தாள் தீபிகா, இதழ்களில் சின்ன முறுவல் பூத்தது.

வீட்டிற்குச் செல்லும் வழியெல்லாம் தினகர் கூறியதே மாற்றி மாற்றி நினைவுக்கு வந்து அவளுக்கு சிரிப்பை மூட்டியது.

தீபிகாவையே ஓர விழியில் நோக்கியபடி கதவைத் திறந்த பிரகாஷ், கதவைச் சாத்திய வேகத்தில் அவளை இழுத்து கதவில் சாய்த்து நிறுத்தினான்.

“ஏய்… என்ன சிரிப்பெல்லாம் பலமாக இருக்கிறது?” என்று புருவம் உயர்த்தினான்.

“ம்… ஒன்றுமில்லையே…” என்று பீறிட்ட சிரிப்பை இதழ் கடித்து அடக்கினாள்.

“உதட்டை கடிப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே…” என்று அவள் இதழை வெளியில் இழுத்து விட்டான்.

“ம்… எப்படிப்பட்ட தியாக குணம் கொண்ட பெண்ணுக்கும் தன் கணவன் மனதில் வேற ஒரு பெண் இருந்தாள் என்பது சற்று வருத்தத்தை அளிக்கின்ற விஷயம் தான். எனக்கும் அப்படித்தான் என்னவன் மனம் முழுக்க எனக்கு மட்டும் தான் சொந்தமாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் மனதில் ஏற்கனவே வனிதா இருந்தாள் எனவும் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். நீங்கள் என்னை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் அவள் நினைவால் ஒரு சின்ன நெருடல் இருந்தது. ஆனால் தினகர் அண்ணா அவளைப் பற்றிக் கூறியதும் என் மனதில் ஒரு உவகைத் தோன்றியது பாருங்கள்… என்னை விட தகுதியில் குறைந்தவளை தான் என் கணவன் ஒரு காலத்தில் காதலித்திருத்திருக்கிறார்…” என்று கொல்லென்று சிரித்தவள், “ம்… அவள் செமி என்பதை மறைத்து விட்டு வெறும் பீலாவா விட்டு கொண்டு இருந்திருக்கிறீர்கள்!” என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள் அவள்.

“ஏய்…” என்று கத்தியபடி அவளைத் தனக்குள் சிறை செய்தான் பிரகாஷ்.

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் காதலுக்கு தான் வலிமை அதிகமோ!!!

2 thoughts on “Gnyabagam Varuthe – Deepababu”

  1. Hai deepa sis Yah your thought is 100 % Right ya Marriage Ku pirahu vara love than romba strong aanathu yaralaum pirikka mudiyathathu Nice story ya Congratulations pa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *