*31*

 

ஷ்ரவண் அமைதியாக இருப்பதை உணர்ந்து தன் பேச்சை இடையில் நிறுத்திய ஶ்ரீநிதி, “என்ன மாமா யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“இல்லை… இதற்கு உன்னுடைய அம்மா உன்னை ஆசிரமத்தில் எங்கேயாவது விடச் சொல்லி இருந்திருக்கலாம். இப்படி உன் அப்பாவின் மோசமான பக்கங்கள் தெரிந்து நீ மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நிம்மதியாகவாவது வாழ்ந்திருப்பாய்!”

“ப்ச்… ஆமாம்… அப்படி கூட செய்திருக்கலாம் தான், அநாதை என்கிற பட்டத்தோடு என் வேதனை முடிந்திருக்கும். ஆனால் என் அம்மா தன்னுடைய அம்மாவிடம் என்னை கொடுக்க சொல்லி அவர்களின் துவேஷத்தை இன்னமும் கிளப்பி விட்டுவிட்டார்கள். இதில் அடுத்த கொடுமை என்ன தெரியுமா? நான் வளர வளர அவர்களின் கேலி வேறுவிதமாக மாறியது. எப்பொழுது பார் அந்த விஷ்வாவிடம், டேய்… தப்பி தவறி முறைப்பெண் அது இது என்று இந்த ஜென்மத்தை எதுவும் விரும்பி விடாதேடா, வயதில் எல்லாம் அழகாக தான் தெரியும், அதன் பின்னால் உள்ள கேவலைத்தையும் நினைத்துப் பாருடா உன்னால் இந்த சமூகத்தில் கௌரவமாக வாழ முடியாது என அவனை எச்சரிப்பதை கேட்கும் பொழுது எனக்கு பற்றிக்கொண்டு வரும். அவனோ அதற்குமேல் அவனுடைய பாட்டிக்கு ஜால்ரா தட்டுவான், ஐயோ… இந்த நொண்டியையா…” என்று விட்டு ஷ்ரவணை ஒரு பார்வை பார்த்து, “நீங்கள் அடித்தாலும் நான் இங்கே இதை சொல்லி தான் தீருவேன். இவளை நான் என்ன விரும்புவது, ஊரில் உள்ள எவன் பார்க்க நினைத்தாலும் இவளுடைய அருகதை என்னவென்று அனைவருக்கும் சொல்லி விடுவேன். ஓடிப்போனவள், ஜெயிலுக்கு போனவனுக்கு பிறந்தவள், கையும் முடம் யாரென்றாலும் நன்றாக யோசித்து கொள்ளுங்கள்பா என்று சொல்லி விடுவேன் என எனக்கு முன்னாலேயே சீண்டுவார்கள். நான் எதையும் கண்டுக்கொள்ள மாட்டேன், எனக்கு அந்த வீட்டை விட்டு எங்காவது போய்விட்டால் போதும் என்று மட்டும் தான் எப்பொழுதும் மனதில் இருக்கும். ஆனால் எப்படி போவது என்பது மட்டும் ஒன்றும் புரியவில்லை, ஒருபுறம் அவர்களின் கேலிப் பேச்சுக்களை ஒதுக்கும் மனம் மறுபுறம் அதில் புதைந்துள்ள உண்மை உணர்ந்து கவலையடையும். எப்பொழுதுமே தனிமையிலேயே இருந்ததால் அந்த பாட்டி சொன்னப் பொழுது பெரிதாக தெரியாத விஷயம் கூட அந்த நேரத்தில் பூதாகரமாக மனதில் கிளம்பும். என்னை பெற்றவன் என்னை தூக்கி ரோட்டில் வீசினானாமே என்று அந்தக் காட்சி மனதில் திரும்ப திரும்ப ஓடி மனது இறுகும். பள்ளி செல்லும் வழியில்… பள்ளியில் என பல பெற்றோர்கள், பிள்ளைகளை தினமும் கூர்ந்து கவனிப்பேன். அனைவருமே தங்கள் பிள்ளைகளை ரொம்பவும் கவனமாக ஆசையாக பார்த்து கொள்வதுப் போல் தோன்றும், என்னை பெற்றவர்கள் மட்டும் தான் என்னை இப்படி கொல்லவும் துணிந்து அநாதையாக விட்டு விட்டார்கள் என்று விரக்தியோடு நினைத்தபடி மனவலியை தேடிக் கொள்வேன். இப்படியே ஒருவாறு பள்ளிப்படிப்பை முடிக்க, எதிர்ப்பார்த்திருந்தபடி இத்தனை நாட்களாக படிக்கிறேன் என பெயர் சொல்லி ஓசி சோறு சாப்பிட்டது போதும் இனிமேலாவது ஏதாவது வேலைக்கு சென்று சம்பாதிக்கின்ற வழியை பார் என்கிற குத்தல் விழுந்தது. அது எனக்கு பெரியதாக தெரியவில்லை, உரிமையில்லாத இடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று ஏற்கனவே எனக்குள் பதிந்து இருக்கும் அவமான உணர்வு தான் அது. பதினைந்து நிமிட பயணத் தொலைவிலேயே தனியார் பள்ளி ஒன்றில் மாண்டசரி வகுப்புகள் எடுக்கும் ஆசிரியைக்கு உதவியாக குழந்தைகளை பார்த்துக் கொள்வது அவர்கள் வராத நேரம் பிள்ளைகளுக்கு கதை சொல்வது போன்ற வேலை உடனே கிடைத்தது. நானும் நிம்மதியாக போய்வந்து கொண்டிருந்தேன், அப்பொழுது தான் ஒருநாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என்னுடைய வயது பத்தொன்பது, பள்ளி விட்டு வரும் வழியில் ஒரு விபத்தை நேரில் பார்த்தேன். ஒரு நடுத்தர வயது ஆண் லாரியில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். அவரைச் சுற்றி நின்றிருந்த கூட்டம், யாரென்று தெரியவில்லையே இப்படி அல்பாயுசில் போய் விட்டாரே… குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் எவ்வளவு பெரிய இழப்பு என்று அதற்கு மேல் அவர்கள் பேசியது எதுவும் எனக்கு காதில் விழவில்லை. மூளை அந்த இடத்திலேயே ஆணி அறைந்தது போல் நின்று விட்டது, இவருக்காக இவர் குடும்பம் முழுவதும் அழுவார்கள், துடிப்பார்கள்… நான் செத்துப் போனால் எனக்காக யார் அழுவார்கள் என்ற கேள்வி எழுந்தது!” என ஶ்ரீநிதி கூறவும், அவளை படுகேவலமாய் முறைத்த ஷ்ரவண், “உனக்கு எதையுமே நல்லபடியாக யோசிக்க தெரியாதாடி?” என்றான் கடுப்புடன்.

“உங்களுக்கு எப்படி தெரியும் என்னுடைய கவலையெல்லாம்… யாருடைய ஆதரவுமின்றி… ப்ச்… சரியான நட்பை கூட நான் தேடிக்கொள்ளவில்லை தெரியுமா?” என்று முகத்தை சுருக்கினாள் அவள்.

அவளுடைய விசனம் ஞாயமானதே என்றாலும், “ஏன் நீ சரியான நண்பர்களை உருவாக்கி கொள்ளவில்லை? பள்ளியில் இருக்கும் பொழுதாவது அவர்கள் உனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்கள் இல்லை…” என்று காரணம் கேட்டான் கணவன்.

“ம்க்கும்… எல்லாற்றுக்கும் இந்த கை தான் காரணம், சின்ன வயதில் கொஞ்சம் நண்பர்களை தேடினேன் தான். ஆனால் அவர்கள் என்னை பார்க்கும் கேலிப் பார்வையும், பரிதாபப் பார்வையும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருசிலரிடம் மட்டும் பட்டும்படாமல் சில வருடங்கள் நட்பு வட்டத்தில் இருந்தேன், பள்ளிப்படிப்பு முடிந்தபின் அதுவும் போய்விட்டது!” என்றாள் அலுப்போடு.

“சும்மா… எல்லாவற்றிற்கும் இந்த கையையே குறைச் சொல்லாதே நிதிம்மா… இப்பொழுது இதில் என்ன பிரச்சினை? எல்லா வேலைகளையும் எந்தக் குறையுமில்லாமல் மிக இயல்பாக தானே நீ செய்கிறாய்!” என்று அவளின் இடதுகையை தன் கரத்தில் எடுத்து அதட்டினான் ஷ்ரவண்.

சட்டென்று அவனை இறுக கட்டிக்கொண்டவள், “இதுதான்… இதுதான் எனக்கு உங்களிடம் முதலில் கவர்ந்த விஷயம். என் ஊனத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டீர்கள். அதோடு என்னிடம் கோபித்துக் கொண்டிருந்த நேரத்திலும் கூட இதனால் எனக்கென்ன வந்தது என்பது போல் அலட்சியமாக இருந்தீர்கள். காதலை சொன்ன பிறகோ மருத்துவர் கேட்கின்ற கேள்விக்கு கூட என்னால் கணவனாக சரியாக பதில் சொல்ல முடியவில்லை, அதற்காகவது உன் கை எதனால் இப்படி ஆனது என தகவலாக சொல்லேன் என்று தான் என்னிடம் நீங்கள் இதை விசாரித்தீர்கள். உங்கள் கண்களில் எப்பொழுதுமே இதைக்குறித்து சிறு பரிதாபமோ, அருவருப்போ நான் பார்த்ததே இல்லை!” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஸ்கேன் மன்னி…” என்று அவள் காதை திருகியவன், “அதுதானேடி உண்மை… எனக்கு இது ஒரு விஷயமாகவே மனதில் படவில்லையே!” என்றான் ஆத்மார்த்தமாக.

“ம்… ஆனால் இப்படியெல்லாம் மனிதர்களை நான் அப்பொழுது சந்திக்கவில்லையே… யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள என் தன்மானம் இடம் தரவில்லை!”

“அதில் தப்பில்லை தான்… ஆனால் தாலி கட்டி, பிள்ளையையும் கொடுத்து விட்ட புருஷனிடமும் விஷயத்தை சொல்ல மனம் வராமல் ஒதுங்கி இருந்தாய் பார். அதுதான் எனக்கு கடுப்பின் உச்சமே!” என்று முறைத்தான்.

“நான் ஒன்றும் உங்களிடம் தன்மானம் பார்க்கவில்லையே… என்னை அருவருத்து ஒதுக்கி விடுவீர்களோ என்று பயந்து கொண்டு தான் உண்மையை சொல்லாமல் மறைத்தேன்!” என்றாள் ஶ்ரீநிதி பரிதாபமாக.

“சரி போனதுப் போகட்டும் விடு, அப்புறம்… எப்படி என்னை பார்த்த முதல் பார்வையிலேயே துணிச்சலாக முடிவெடுத்து திருமணம் செய்து கொள்ள சொல்லி சட்டென்று என் சம்மதம் கேட்டாய்?” என்றான் ஷ்ரவண் ஆவலாக.

புன்னகைத்தவள், “நான் தான் சொன்னேனே… அந்த பத்தொன்பது வயதில் தோன்றிய பயம் எனக்கே எனக்கென்று உறவை தேடியது. அத்தனை வருடங்களாக சூழ்ந்திருக்கும் உறவுகளுக்கு மத்தியில் உரிமையற்ற அநாதையாக வாழ்ந்த எனக்கு முதலில் என் உரிமையை நிலைநாட்ட கூடிய உறவாக தான் கணவன் வர வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் என்ன யோசித்து என்ன பயன்? என்னை பெற்றவர்களின் உபயத்தால் காதல் பிடிக்கவில்லை. எனக்காக தேடிப்பிடித்து வாழ்க்கையை அமைத்து தரவும் அக்கறை உள்ளவர்கள் யாருமில்லை. வருடங்கள் தான் ஓடியதே தவிர என் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பள்ளி, அதே ஒட்டுறவு இல்லாத வீடு, அதே தனிமை சூழ்ந்த அறை என வாழ்க்கை கழிந்தது. வயது ஏற ஏற எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்காமல் என்னுடைய வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமோ என்கிற பயமும், பதற்றமும் என் குணநலன்களை மெல்ல மெல்ல மாற்றுவதை என்னால் தெளிவாக உணர முடிந்தாலும் அதை தடுக்க முடியவில்லை. நாளுக்கு நாள் இதனால் என் மன அழுத்தம் அதிகரித்து கண்களில் படுபவர்கள் மீதெல்லாம் காரணமேயில்லாமல் வெறுப்பு கிளம்பியது. பெற்றவர்கள் முதல் என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே தங்கள் வாழ்க்கையை மட்டுமே பார்த்துக் கொள்ளும் சுயநலமிக்கவர்களாக எனக்கு தோன்றினார்கள். பள்ளியிலும், வீட்டிலும் வெளிப்பார்வைக்கு நான் அமைதியாக இருப்பது போல் தோற்றத்தை உருவாக்கி கொண்டாலும், யார் மீது எப்பொழுது வெடித்து சிதற என தருணம் எதிர்பார்த்து உள்ளுக்குள் தீராத ஆங்காரம் ஆக்ரோஷமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. இப்படியொரு சூழ்நிலையில் தான் ஒருநாள் சுவாதியை கொல்ல வந்தவனை பார்த்து நான் பதறிப்போய் அதை தடுத்தேன். அவள் ரொம்பவும் பயந்து நடுங்கியதை பார்த்து எனக்கு அவள் மீது ஒரு இனம்புரியாத பரிவு உருவானது. என் அம்மாவை போல் கத்திக்குத்தில் சாகவிடாமல் அவளை காப்பாற்றி விட்டதில் மனதில் மிகவும் திருப்தி உண்டாகிற்று. அனைவரும் கிளம்பி சென்ற பின்னர் என் காலடியில் இடறிய மொபைலை எடுத்து யாருடையது இது என புரியாமல் திறக்க முயன்ற பொழுது தான் உங்கள் குடும்ப புகைப்படம் அதில் தெளிவாக வெளிவந்தது. அதுவரை எனக்குள் அடங்கியிருந்த துவேஷம் மீண்டும் தலைதூக்கி அதில் இருந்த அனைவரையும் வெறுப்புடன் பார்க்க வைத்தது. இவளும் ஏதோ ஓர் குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்பவள் தானா… அவள் தானே விட்டுச்சென்றாள், அவளுக்கு வேண்டுமென்றால் அவளே அழைக்கட்டும் என மொபைலை பைக்குள் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டேன்!” என்றவள் தயக்கத்துடன் கணவனின் முகம் பார்த்து, “ரொம்பவும் அற்பதனமாக தோன்றுகிறதா?” என பாவமாக கேட்டாள்.

மெல்ல முறுவலித்தவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இப்பொழுது நான் ஷ்ரவண் இல்லை, நீ சொல்ல சொல்ல ஶ்ரீநிதியாக உனக்கு சமமாக உன் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஸோ… உன்னுடைய உணர்வுகளை என்னால் சுலபமாக புரிந்துக் கொள்ள முடிகிறது. நீ மேலே சொல்!” என்று மனைவியை ஊக்குவித்தான்.

“ம்… அப்புறம் நீங்கள் சாயந்திரம் அந்த நம்பருக்கு அழைத்து விட்டு முதலில் எதுவும் பேசாமல் இருந்தீர்கள். அது ஏனென்று நீங்கள் ஏற்கனவே சொல்லி விட்டீர்கள்!” என அவனிடம் நேசத்துடன் புன்னகைத்தவள், “அடுத்து பேச ஆரம்பிக்கும் பொழுதே மொபைலை திருடிக் கொண்டு சென்றவள் என்பது போல் பேசினீர்களா எனக்கு கோபம் வந்து விட்டது. நாம் தான் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம், ஆனால் அவர்கள் திரும்பி நம்மை தான் கேவலமாக எண்ணமிடுவார்கள். எல்லாம் சுயநலம் பிடித்தவர்கள் என்று உங்களின் மீது எரிச்சலை வளர்த்துக் கொண்டேன். நீங்கள் என்னை சந்திப்பதும் தள்ளிக் கொண்டே சென்றது, மூன்று நாட்களாக சுவாதியின் அலைபேசி அதாவது உங்களின் குடும்ப புகைப்படம் என் கையிலேயே இருந்தது. அதுவரை என்னிடம் யாருடைய புகைப்படமும் இருந்தது இல்லை என்பதால் அனைவரும் சந்தோஷமாக சிரித்திருப்பதை வெறுத்தாலும் என்னையும் மீறி அடிக்கடி அதை திறந்து பார்ப்பேன். அப்படி பார்க்க பார்க்க மனதில் பெரியதாக ஏக்கம் எழுந்தது. நான் எப்பொழுது இப்படி மகிழ்ச்சியாக இருப்பேன், எனக்கென்று எப்பொழுது கணவன், குடும்பம் என்கிற அரவணைப்பு கிடைக்கும் என நிம்மதியிழந்து தவித்தேன். என் வாழ்க்கையை நான் எப்படி அமைத்துக் கொள்வது என்று மீண்டும் பதற்றப்பட ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த அத்தனை மன உளைச்சலையும் மறைத்து கொண்டு என்னை கேவலமாக மதிப்பிட்ட சுயநலவாதி தானே இவன் என்கிற அலட்சியத்தோடு தான் உங்களை சந்தித்தேன். மொபைலை கொடுத்து விட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்று விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்கு நீங்கள் விடவில்லை, என்னை தடுத்து நிறுத்தி சுவாதிக்காக நன்றி சொன்னதோடு நில்லாமல் ரொம்பவும் உருக்கமாகப் பேசினீர்கள். அவளுக்காக நீங்கள் அத்தனை நன்றிகள் சொன்னது எனக்கு ஒருபுறம் வியப்பாகவும், மறுபுறம் எரிச்சலாகவும் இருந்தது. என்னையெல்லாம் யாரும் கொன்று போட்டால் கூட கேட்க ஆளில்லை, இவன் என்னவோ இவனுடைய தங்கைக்காக இப்படி உருகிறானே என்று ரொம்பவும் பொருமிக் கொண்டு நின்றிருந்தேன். அப்பொழுது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு வெளியிட்ட சில வார்த்தைகள் என்னை பரபரப்படைய வைத்தது. பெற்றோரை இழந்து விட்டு தனியாளாக நிற்கின்ற எனக்கென்று இருக்கும் ஒரே உறவான என் தங்கையின் உயிரை காப்பாற்றியதற்கு பிரதியுபகாரமாக உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் நான் செய்வேன் என்று நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னுள் இருக்கும் சுயநலத்தை தூண்டி விட்டது!”

லேசான முக கன்றலுடன் பேசியிருக்கும் மனைவியின் மனதை சரியாக படித்தவனுக்கு அவளின் எண்ணங்களில் தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை.

தன்னுடைய கரத்தை மென்மையாக பற்றி அழுத்தும் கணவனிடம் விழிகளை உயர்த்தியவள் அவன் நெஞ்சில் ஏக்கமாக சாய்ந்துக் கொண்டு மீதியை சொல்ல ஆரம்பித்தாள்.

“வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் என்னுடைய அடையாளத்தை யாரும் வற்புறுத்தி கேட்க மாட்டார்கள், என்னை கட்டுப்படுத்தவும் யாரும் இருக்க மாட்டார்கள் என்னுடைய இஷ்டத்திற்கு நான் சந்தோஷமாக வாழலாம் என்று திட்டமிட்டேன். எதையும் நான் வெளிப்படையாக பேசினாலோ இல்லை என் நிலைமை தெரிந்தாலோ அல்லது பணிந்து நடந்தாலோ உங்களிடம் எனக்கு தகுந்த மரியாதை கிடைக்காது என்று பயந்து தான் அவ்வாறு அலட்சியமாகவும், திமிராகவும் இருந்து திருமணம் செய்துக் கொண்டேன். வெளியில் தான் அப்படி இருந்தேனே தவிர, உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தேன். நீங்கள் திருமணத்திற்கு சம்மதித்த அன்று இரவு அறையின் தனிமையில் கட்டுக்குள் கொண்டு வர முடியாத ஆனந்த கொந்தளிப்பில் எவ்வளவு நேரம் விடிய விடிய உணர்ச்சி வசப்பட்டு அழுதிருப்பேன் என்று எனக்கே தெரியாது. எனக்கு வாழ்க்கையே கிடைக்காதா என்றிருந்த நிலையில், எனக்கென்று கணவன், குடும்பம் அமையப் போகிறது என்ற நினைவே அத்தனை இனித்தது. நீங்கள் என்னுடன் பேசும் பொழுது வெளிப்படுத்திய சுவாதி மீதான பாசம் அனைத்தையும் எனக்காக உருகி நேசிப்பது போல் கற்பனையில் மூழ்கி திளைத்திருப்பேன். ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்திருக்கும் பொழுது விஷ்வா பாட்டி சொல்லும் உரிமை இல்லாது அண்டி வாழ்பவள், ஓசிச் சாப்பாடு இதெல்லாம் மனதை குடைய, இனி என் கணவன், அவனுடைய மனைவி நான் என்கிற உரிமையிலும், சலுகையிலும் உங்களின் அன்பை அனுபவித்தபடி எந்தக் கவலையுமில்லாமல் சில மாதங்களுக்காவது நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வந்தது. ஆனால் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் தங்கையையும் தனியாளாக கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் உங்களால் என்னையும் வைத்து சாப்பாடு போட முடியுமா என கொஞ்சம் குழப்பம் வந்தது. அதற்காக தான் உங்களுக்கு போன் செய்து சம்பளம், வசதி குறித்து அலட்சியமாக விசாரித்தேன். ஒருவேளை நீங்கள் எதுவும் சிரமப்படுகிறீர்கள் என்று தெரிந்தால் திருமணத்திற்கு பிறகு வீட்டிற்கு அருகில் எனக்கு வேறு ஏதாவது வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்தேன்!”

மனைவியின் சொல்லில் இம்முறை ஷ்ரவணின் முகம் கறுத்தது. மனதிற்குள் இத்தனை ஏக்கத்தை சுமந்தபடி தன்னை நம்பி திருமணம் செய்துக் கொண்டு வந்தப் பெண்ணை சிறிதும் யோசிக்காது முன்கோபத்தால் தவறாக கணித்ததும் அல்லாமல் என்னை அண்டி வாழ வந்தவள் அடங்கி தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எடுத்தெறிந்துப் பேசிவிட்டேனே என்று தவித்தவன் அவளின் தலையை தன்னோடு அழுத்தி மன்னிப்பு வேண்டினான்.

“ஐ ஆம் சாரிடா… கொஞ்சமும் யோசிக்காமல் அன்று நான் வேறு உன்னை ரொம்பவும் அவமானப்படுத்தி பேசிவிட்டேன்!” என்றான் வேதனையுடன்.

“நீங்கள் என்ன செய்வீர்கள் மாமா தவறு என் மீதும் தானே இருந்தது? மனதிற்குள் நான் இத்தனை கவலையை சுமந்திருப்பேன் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்ன… என் இயல்புபடி நான் நடந்திருந்தால் ஒருவேளை நீங்களும் என்னை புரிந்துக் கொண்டு நல்லபடியாக நடத்தி இருப்பீர்கள். ஆனால் நான் தான் எங்கே சாதாரணமாக பழகினால் என்னை பற்றிய உண்மையை கேட்டு விடுவீர்களோ என்று பயந்து திமிராகவும், அலட்சியமாகவும் இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேனே… இதில் அவ்வப்பொழுது என்னுடைய நுண் உணர்வுகள் சீண்டப்படும் நேரம் வேறு ரொம்பவும் ஆங்காரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்துக் கொண்டு விட்டேன்!” என்று அந்நாட்களின் நினைவில் பெருமூச்செரிந்தாள் ஶ்ரீநிதி.

“ம்… புரிகிறதுடா… என்னை கைப்பிடித்த மகிழ்ச்சியுடன் நீ ரொம்பவும் சந்தோஷமாக நம் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து வரும் நேரம், சுவாதியிடம் சொல்லாமல் உன்னை திருமணம் செய்துக் கொண்டேனே என்ற குற்றவுணர்வில் நான் தத்தளித்திருக்கும் பொழுது, அவள் வேறு அழுதுக்கொண்டே உள்ளே ஓடவும் மற்றதை மறந்து அவள் பின்னால் நானும் வீட்டினுள் ஓடிவிட்டேன். நீ அந்த நேரத்தில் எப்படி துடித்திருப்பாய் என்பதை நான் ஏற்கனவே ஓரளவு உணர்ந்துக் கொண்டு விட்டேன்!”

“ஆமாம்… எனக்கு வந்ததே பாருங்கள் அப்படியொரு ஆங்காரம், ஆசை ஆசையாக வீட்டிற்கு வருபவளை இவரும் கைப்பிடித்து அழைத்து செல்லவில்லை, அவளும் என்னவோ நடக்க கூடாதது நடந்த மாதிரி அப்படி அழுகிறாளே என்று கோபம் கோபமாக வந்தது. அதிலும் இவள் உயிரை காப்பாற்றிய நான் இந்த வீட்டிற்கு வாழ வருவதற்கு இப்படி அழுகிறாளே என்று வேறு ஆத்திரம். தப்பு தான்… ஆனால் எனக்குள் எழும் எதிர்மறை உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்புறம் நீங்கள் அமைதியாக பேசி புரிய வைக்கவும் தான் அவளுக்கு நான் யாரென்றும் தெரியவில்லை, நம் திருமண விஷயமும் தெரியாது என புரிந்தது. அடுத்து கொஞ்சம் சமாதானம் ஆன மனதையும் நம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஷ்வா பாட்டி மாதிரியே பேசி நோகடித்து விட்டீர்கள். நான் உங்களை எடுத்தெறிந்துப் பேசுவதால் தான் நீங்கள் அப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறீர்கள் என்பதை யோசிக்கும் புத்தி எனக்கு அப்பொழுது இல்லை. எங்கே சென்றாலும் எனக்கான உரிமைகளை யாரும் தரமாட்டேன் என்கிறார்களே என்று தான் அழுகையும், ஆவேசமும் வந்தது. ஆனாலும் ஒன்று தெரியுமா… யார் முன்னிலையிலும் நான் அழமாட்டேன்!” என்றாள் அவள் ரோஷமாக.

“யார் நீ? வாயில் நன்றாக வருகிறது எனக்கு. எப்பொழுது பார் பைப்பை திறந்து விடுபவள் பேசுகிற பேச்சை கேட்க சகிக்கவில்லை!” என்று தலையில் கைவைத்து கொண்டான் அவன்.

“ம்… அது எல்லாம் நீங்கள் என்னை விரும்புவதாக சொன்னப் பிறகு தான். எங்கே நீங்களே நன்றாக யோசித்து சொல்லுங்கள்… அதற்கு முன்னால் ஒருமுறையாவது உங்கள் முன்னே நான் அழுது இருப்பேனா?”

சிந்தனையை தட்டிவிட்டவனுக்கும் அது உண்மையே என்று புரிந்தது, எத்தனையோ முறை கோபமாகவும், சிடுசிடுவென்றும் பார்த்திருந்தவனுக்கு அவள் அழுத மாதிரி நினைவில்லை.

“என்னை ஆசையாக திருமணம் செய்து கொண்டவள் அப்புறம் ஏன்டி எப்பொழுது பார் அப்படி உர்ராங்கோட்டான் மாதிரி இருந்தாய்?” என்றான் ஷ்ரவண் அன்றைய தினத்தின் எரிச்சலோடு.

“இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேனே… கேட்பவர்களிடம் எல்லாம் தங்கை முதற்கொண்டு அத்தை வரை எல்லோரிடமும் வேறுவழியின்றி அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டேன் என மறுபடி மறுபடி சொன்னால் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். கணவனிடம் மட்டுமே நான் தேடுகிற அன்பு கிடைக்கும் என அளவிற்கு அதிகமாக எதிர்பார்ப்பை வளர்த்து கொண்டிருந்த எனக்கு நீங்கள் கட்டாயத்தினால் தான் மணந்தேன் என்று சொல்லும் பொழுதெல்லாம் அப்படியே பற்றிக்கொண்டு எரியும். அப்புறம் எங்கிருந்து எனக்கு சந்தோஷம் வரும் இல்லை சிரிப்பு வரும்?” என்று முகத்தை சுருக்கினாள் அவள்.

அதைக்கண்டு நகைத்தவன் அவளிடம் குனிந்து, “இப்பொழுதும் சொல்கிறேன் உன்னுடைய கட்டாயத்தினால் அவசரப்பட்டு தான் நான் திருமணம் செய்துக் கொண்டேன்!” என்றுரைத்து அவளை மேலும் கடுகடுக்க வைத்துவிட்டு, “ஆனால் அதை நினைத்து கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு நாளும் அதிகளவில் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!” என்றவன் அவள் காதோடு உதட்டை உரசி மென்மையாக முத்தமிட்டான்.

சிலிர்த்தவளின் கன்னத்தில் முகம் புதைத்து, “ஐ லவ் யூ பேபி… இதற்கு மேல் நீ எதுவும் சொல்ல வேண்டாம், எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. அமுதன் கீழே விழுந்தப் பொழுது அந்த இடத்தில் உன்னை வைத்துப் பார்த்து வெறும் தரையில் தானே விழுந்திருக்கிறான் என நீ அலட்சியமாக இருந்தது. அதை நான் தட்டிக்கேட்கவும் எனக்காக யார் பார்த்தார்கள் என்று ஆவேசம் கொண்டு வார்த்தைகளை கட்டுப்பாடின்றி நீ வெளியே விட்டது. தனிமையில் நின்று உன் மனம் கொஞ்சம் அமைதியானதும் அத்தை குழந்தையோடு வந்துப் பேசும் பொழுது உன்னுடைய தவறை உணர்ந்து அவர்களிடம் நீ மன்னிப்பு கேட்டது. இதைப்பற்றி எதையும் அறிந்துக் கொள்ளாத உன் முட்டாள் புருஷன், பெரியதாக தண்டனை கொடுக்கிறேன் என பைத்தியக்காரனாக நடந்துக் கொண்டது!” என்றதும் அவனை இறுக கட்டிக்கொண்டாள் ஶ்ரீநிதி.

“நீங்கள் சொன்ன வார்த்தைகளை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை மாமா, தயவுசெய்து அதைப்பற்றி திரும்பவும் பேசாதீர்கள். அப்புறம் எனக்கு உங்கள் மீது எவ்வளவு கோபம் வந்து எப்படி நடந்துக் கொள்வேன் என்று என்னால் எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது. இரவு முழுவதும் நீங்கள் வீட்டிற்கு வராமல் நான் தவித்த தவிப்பு எனக்கு தான் தெரியும்!” என்றவள் எரிச்சலுடன் எச்சரிக்க வாய் விட்டு நகைத்த ஷ்ரவண் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி, “என்னடி செய்து விடுவாய்? அன்று போல் பாத்திரத்தை தூக்கி விசிறியடிப்பாயா… ஏதோ முதல் முறை என்பதால் உன்னை பற்றி சரியாக தெரியாமல் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். இனி ஒருதடவை என்னிடம் எகிறிப்பார், அப்பொழுது தெரியும் சங்கதி!” என்றவன் அந்த நொடியே அவளை அடக்கி ஆளும் சூட்சுமத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தான்.
.
.

இரண்டரை வருடங்களுக்கு பிறகு மணமக்களாய் பிரசாத், சுவாதி ஜோடி மேடையை அலங்கரித்துக் கொண்டிருக்க, வரவேற்பில் விநாயகம், கற்பகத்துடன் பெண் வீட்டு சார்பாக ஷ்ரவண், ஶ்ரீநிதி ஜோடியும் தங்கள் வாரிசுடன் திருமணத்திற்கு வந்துக் கொண்டிருந்த உறவுகளையும், நட்புக்களையும் மலர்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் விஷ்வா அங்கே வரவும் ஶ்ரீநிதியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி துணிக் கொண்டு துடைத்தாற் போல் மறைந்து ஒருவித இறுக்கம் பரவியது.

அவள் அமைதியாக நிற்க, அவளுடைய மகள் அப்படி இருக்கவில்லை அனைவரையும் சரிசமமாக நடத்தும் இறைவனுக்கு நிகரான குழந்தைச் செல்வம், வந்திருப்பவனை தன் முன்னே தலையை குனியச் செய்தது.

எதற்கென்று புரிகிறது தானே… உங்கள் யூகம் மிகச்சரியானதே… குழந்தையின் கையில் பன்னீர் செம்பு சிக்கிக் கொண்டிருந்தது.

அங்கிருந்த பொருட்களில் வருபவர்கள் அனைவர் மீதும் தண்ணீர் தெளித்து விளையாடும் இந்த விளையாட்டு தான் நம் பிள்ளைக்கு மிகவும் பிடித்துப் போய் உற்சாகமாக அதை கையில் எடுத்துக் கொண்டிருந்தாள்.

புன்னகையுடன் அவளிடம் குனிந்து நிமிர்ந்த விஷ்வாவின் விழிகள் அவனையும் அறியாமல் தாயையும், பிள்ளையும் ஒருமுறை கூர்ந்துப் பார்த்து விட்டு சின்ன வியப்பை தத்தெடுத்துக் கொண்டது.

“க்யூட்டியின் பெயர் என்ன?” என்று அவளின் பட்டுக் கன்னத்தை வருடினான் அவன்.

திரும்பி தன் தாயை முதலில் பார்த்த குழந்தை அவள் உம்மென்று இருக்கவும் அதை தன் தந்தையிடம் திருப்பி உப்பென்று கன்னத்தை உப்பி வைத்து காண்பித்து கேலி செய்து கலகலவென்று நகைத்தாள்.

“ஓய்… சேட்டை… அம்மாவை கிண்டல் செய்கிறாயா நீ!” என்று தன் குட்டி தேவதையின் தலையில் செல்லமாக முட்டினான் ஷ்ரவண்.

“ப்பா… பாப்பா… பெய்!” என்று தன்னெதிரே நிற்பவனை பால்விழிகளால் சுட்டிக்காட்டி நினைவுபடுத்தினாள் குழந்தை.

“ம்… உங்களிடம் தானே அங்கிள் கேட்டார், நீங்களே அழகாக சொல்லுங்கள் பார்க்கலாம்!”

“அங்கிள் இல்லை பெரியப்பா…” என்று விஷ்வா திருத்த, ஒரு நொடி ஶ்ரீநிதியின் புருவங்கள் நெளிந்து பின் நேரானது.

“பெப்பா… பாப்பா… ஷநிதா…” என்றாள் குழந்தை மழலையில்.

“என்ன?” என்று விஷ்வா புரியாமல் விழிக்க, தன் பிள்ளையின் மழலைச் சொல் கேட்டு பெற்றவளின் இதழ்கள் தன்னால் புன்னகையில் விரிந்தது.

“அது…” என்று குனிந்து டேபிளில் அமர்ந்திருந்த குழந்தையை கழுத்தோடு கட்டிக்கொண்ட அவள் தந்தை, “எங்கள் பட்டுப் பாப்பா பெயர் ஷ்ரவநிதா!” என்று அவளுடைய ரோஜா கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டான்.

ஆங்… என தந்தை சரியாக சொன்னதை ஆர்ப்பரித்து, அவனுக்கு உற்சாகமாக ஹாய்ஃபை கொடுத்தாள் குழந்தை.

“நைஸ் நேம்!” என அவள் தலையை வருடிவிட்டு, “குழந்தை அப்படியே உன்னையே உரித்து வைத்திருக்கிறாள். நீ வீட்டிற்கு வந்தப்பொழுது இப்படி தான் இருந்தாய், ஆனால் இவ்வளவு ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இல்லை!” என இடைவெளி விட்ட விஷ்வா, “ஐ ஆம் சாரி ஃபார் எவ்ரிதிங்!” என்று விட்டு மடமடவென்று உள்ளே சென்று விட்டான்.

சின்ன திகைப்புடன் மாமன் மகன் சென்ற திசையை ஶ்ரீநிதி பார்த்து நிற்க, “என்ன பார்வை? அத்தை, மாமா மணமேடைக்கு சென்று விட்டார்கள், அடுத்து நம்மை அழைப்பதற்குள் செல்லலாம் வா!” என்று அவள் கரத்தை கோர்த்துக் கொண்டு, ஒரு கையில் பிள்ளையை தூக்கி கொண்டு நடந்தான் ஷ்ரவண்.

கணவனின் புறம் பார்வையை செலுத்தியவளுக்கு இவன் தான் அவனுடைய மன மாற்றத்திற்கு காரணம் என்று யாரும் தனியாக அவளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. தன்னவனை அணுஅணுவாய் அறிந்து வைத்து அவனுடன் காதல் வாழ்க்கை நடத்தும் அவனின் நிதிம்மாவிற்கு தெரியும் அவனுடைய உயர்ந்த குணங்கள் அனைத்தும்.

“ஏய்… மேடையில் நிற்கிறோம், அனைவரின் பார்வையும் இங்கே தான் இருக்கும். என்னதான் உன்னிடம் நான் காதலை சொல்லி விட்டாலும், உன் கழுத்தில் தாலி கட்டி பிள்ளையையே பெற்று விட்டாலும்… இப்படி பப்ளிக்காக என்னை சைட் அடிக்காதே நீ!” என்று அடிக்குரலில் மனைவியை எச்சரித்தான் ஷ்ரவண்.

கணவனின் பேச்சில் பழைய நினைவுகளில் மலர்ந்த ஶ்ரீநிதி, “மாமா… இந்தப் பட்டு வேஷ்டி சட்டையில் உங்களை பார்த்தாலே என்னுடைய கண்களை அசைக்க முடியாது என்பது தெரியாதா உங்களுக்கு…” என ரகசியமாக கண்சிமிட்டினாள்.

அதற்கு ஏதோ பதிலுரைக்க ஷ்ரவண் வாயை திறக்கும் நேரம், பிரசாத் நிமிர்ந்து அவனை பார்த்து முறைத்தான்.

“டேய் மச்சான்… இப்பொழுது எங்களுக்கு தான் கல்யாணம். இன்றைக்காவது உன்னுடைய ரொமான்ஸை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு எங்களை கவனிக்கின்ற வேலையை பாரேன்டா!” என்று பொருமினான்.

ஶ்ரீநிதி முகம் சிவந்து கணவன் பின்னால் மறைந்துக் கொள்ள, “இங்கே பாருடா… எப்பொழுது பார் எங்களை வேவுப் பார்க்கிறதை விட்டு விட்டு, உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே பார் என் அப்பாவி தங்கை… அவளை ஒழுங்காக கவனிக்கின்ற வேலையை நீ சரியாக செய். பாப்பா… உன் மாமாவை ஒன்றும் சொல்வதற்கு இல்லை, இனி நீயாக பார்த்து கவனமாக இருந்துக் கொள்!” என்று சுவாதியை அவன் கிளப்பி விட, அவளோ தன் மாமனை கண்களால் எரித்தாள்.

கிடைத்த இடைவெளியில், “எப்படித்தான் இத்தனை வயதிலும் சின்னப்பிள்ளையாக அவருடன் போட்டிப் போட்டுக் கொண்டு அவரை சிக்க வைக்கிறீர்களோ புரியவில்லை மாமா!” என்று ஶ்ரீநிதி கணவனிடம் கிசுகிசுக்க, “அது ஒன்றும் பெரிய விஷயமில்லைடி செல்லம்… மாமா உனக்கு இரவு எல்லாம் சொல்லித் தருகிறேன்!” என ஷ்ரவண் ஒற்றை கண்ணை சிமிட்ட, வெட்கத்தை மறைக்க திணறியவளாக அவனை விட்டு ஓரடி நகர்ந்து நின்றவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

எத்தனை வயதானாலும், வருடங்கள் கடந்தாலும் தன் கணவனின் அன்பையும், காதலையும் அனுதினமும் புதிதாய் எதிர்பார்த்து அலைபாய்ந்து கொண்டு தான் இருப்பாள் ஷ்ரவணின் பைங்கிளி.

💞சுபம்💞


சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தியில் நான் பார்த்த இரு வேறு நிஜ சம்பவங்களின் பாதிப்புக்களை கையில் எடுத்து கதையின் கோர்வைக்காகவும் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்வு மகிழ்ச்சியாக அமைவது போலவும் அவற்றில் கற்பனை கலந்து நாவலாக கொடுத்திருக்கிறேன் உங்களை நிச்சயம் கவரும் என்கின்ற நம்பிக்கையில்… – தீபா பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *