மிரட்டும் மின்தூக்கி

 

பிப்ரவரி, 2009

ஜியான்ஜூ, தென் கொரியா

டான்க்குக் மருத்துவமனையில் இரவு ஒன்று நாற்பது மணி. பத்து மாடிகள் கொண்ட அந்த பெரிய அடுக்குமாடி மருத்துவமனையின் தரை தளத்தில் இருந்த ஒரு அறையில், நைட் ஷிப்ட் வேலைக்கு வந்திருந்த நர்ஸ் மின் சியோ, டேபிளில் அமர்ந்தவாறே அரை குறையாக தூங்கி விழுந்துகொண்டிருந்தாள். அப்போது அவள் தூக்கத்திலிருந்து லேசாக கண்ணை திறந்து பார்க்கையில் ஜன்னலுக்கு வெளியே இருந்து யாரோ அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தாள். அந்த ஜன்னல் ஒருவித பச்சை நிற கண்ணாடியை கொண்டிருந்ததால் வெறும் நிழலுருவம் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது. உடனே சியோ கண்களை கசக்கி தூக்கத்தில் இருந்து விழித்து அந்த ஜன்னலை பார்க்கையில் அங்கு யாருமில்லை. உடனே எழுந்து வெளியே சென்று பார்க்க, அங்கும் யாருமில்லை.  பின்பு மீண்டும் உள்ளே வந்து வாஷ் பேஷனில் தன் முகத்தை கழுவிவிட்டு, கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

கிழக்காசிய மக்களுக்கே உரிய வெள்ளை நிற தோளோடும், சப்பையான மூக்கோடும் இருந்தது அவள் முகம். தூக்கம் இல்லாமல் அவளது கண்கள் சற்றே வீங்கியிருந்தன. பின்பு அந்த அறையை விட்டு வெளியே வந்து யாரேனும் ஒரு நோயாளி தூங்காமல் உலாத்திக் கொண்டிருக்கலாம் என நினைத்து, அந்த தளத்தை ஒரு ரோந்து சுற்றிவிட்டு வரலாம் என முடிவெடுத்தாள். அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு தளத்தின் நடுவிலும் வராண்டா கடைசிவரை நீண்டு இருக்குமாறும், அதன் இருபுறமும் அறைகள் இருக்குமாறும் அக்கட்டிடம் வடிவமைக்கப் பட்டிருந்தது. நடைபாதையின் இறுதி முடிவில், கடைசியாக ஒரு எலிவேட்டர் இருந்தது. அந்த தளத்தில் புற நோயாளிகள் தங்கி இருக்கும் ஒரு பொது வார்டும் மற்றும் சில ஆய்வுக் கூடங்களும் இருந்தன. ஒவ்வொரு அறையையும் சியோ நோட்டமிட்டுக் கொண்டே செல்கையில், அங்கு நிலவிய அமைதி அவளுக்கு புதிதாக இருந்தது. சற்று தூரம் தள்ளி காலியாக வெள்ளை நிற ஸ்ட்ரெச்சர் ஒன்று இருந்தது.

அதனருகில் செல்லும்போது அது லேசாக நகர்ந்தது. காற்றில் அது தானாக நகர்கிறது என எண்ணி சியோ அவ்விடத்தை கடந்து சென்றாள். அடுத்த இருந்த ஜெனரல் வார்டில் நோயாளிகள் அனைவரும் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை கண்ணாடி வழியாக பார்த்தாள்.  அங்கு எதுவும் சியோவிற்கு வித்தியாசமாக தோன்றவில்லை. இருப்பினும் இன்று ஏதோவொன்று இங்கு சரியில்லையென அவள் மனது உறுத்திக்கொண்டே இருந்தது. தற்போது மீண்டும் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டே தொடர்ந்து நடந்தாள். அவ்விடத்தில் மேலே தொங்கிக் கொண்டிருந்த சி.எப்.எல் விளக்குகள் அனைத்தும் விட்டு விட்டு எரிந்தது. அங்கே ஸ்கேன் சென்டர் என கொரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அந்த பகுதியை அவள் பலமுறை கடந்து சென்றிருக்கிறாள். ஆனால் இன்று அங்கு மிகவும் குளிர்ச்சியாக இருப்பதைஉணர்ந்தாள்.அந்நேரம் சற்று பயம் ஏற்பட்டு எதையும் பார்க்காமல் நேராக நடக்கும்போது, அவளுக்கு சில அடிகள் முன்பிருந்த எலிவேட்டரின் கதவு தானாக திறந்தது.

அதைக்கண்டு சியோ திடுக்கிட்டாள். எப்படி இது திறந்தது என யோசித்துக் கொண்டே அதன் அருகில் சென்று எலிவேட்டர் மூடும் பட்டனை அழுத்தினாள். ஆனால் அது மூடவில்லை.அப்போது ஒரு கணம் தன் பின்னால் யாரோ மிக அருகில் இருப்பதைப்போல் உணர்ந்தாள். பின்னால் இருந்து யாரோ ஒருவரின் மூச்சுக்காற்று பலமாக வந்து அவள் கழுத்தில் விழுந்தது. சட்டென அவள் திரும்பிப் பார்க்க நினைக்கையில், யாரோ அவளைத் தள்ளி விட்டது போல கால் இடறி எலிவேட்டரின் உள்ளே விழுந்தாள். யார் என்று அவள் பயந்து பார்க்கையில், அந்த நீண்ட வராண்டா முழுவதும் யாருமில்லாமல் காலியாக மற்றும் அமைதியாக இருந்தது. தற்போது அந்த இடத்தில் அவளுக்கு ஏற்பட்ட பயம், அவளது தலை உச்சி வரை ஏறியது. பின்பு எழுந்து தன்னை சரி செய்துகொண்டு அந்த எலிவேட்டரை விட்டு வெளியே செல்ல முயன்றபோது, அதைக் கண்டாள்! அந்த வராண்டாவில் அவளுக்கு எதிராக கடைசி மூலையில் அது நின்றது.

சியோ அரண்டு போய் அங்கேயே நின்றாள். மிகவும் கருப்பாக நிழல் போன்ற ஒரு உருவத்தில் ஒன்று சியோவை பார்த்தபடியே நின்றிருந்தது.“யார் அங்க?” என கொரிய மொழியில் அதைப்பார்த்து கத்த, அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. நன்கு சிவந்திருந்த அதன் கண்கள் பளிச்சென்று அவளுக்குத் தெரிந்தது. காதுகள் சற்று நீண்டிருந்தன. அதன் கை கால்கள் மனிதனை போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. தற்போது அந்த உருவம் அதன் முகத்தில் இருந்த பளிச்சென்ற பல்வரிசை தெரியுமாறு சிரித்தது. அப்போது அதன் பெரிய கூர்மையான கோரைப்பற்கள் சியோவிற்கு நன்றாக தெரிந்தது. அந்த சிரிப்பானது ‘ஒரு வழியாக நான் தேடிய ஒருத்தி சரியாக, அதுவும் தப்பிக்க முடியாத ஒரு முக்கில் வந்து வசமாக சிக்கிக் கொண்டாள்’ என்பதைப் போல் இருந்தது. ஏற்கனவே பயத்தில் இருந்தவளுக்கு தற்போது மரண பீதி ஏற்பட்டு தானாக அவள் கால்கள் மெதுவாக பின்நோக்கி நகர்ந்தது.

அதேநேரம் அவ்வுருவமும் மெதுவாக அவளை நோக்கி நகர்ந்து வந்தது! தற்போது சியோ எலிவேட்டரின் உள்ளே சென்றாள். அதைப் பார்த்ததும் அதன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து, அது அங்கேயே நின்றது. சியோவிற்கு இப்போது ஒரு யோசனை தோன்றியது.இது எல்லாமே ஒரு மாயம் என எண்ணி, அவளது அறையில் நடந்த மாதிரி கண்ணை மூடி சில நொடிகள் கழித்து திறந்தால் இவ்வுருவம் மறைந்து விடும் என நினைத்தாள். நன்கு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு ‘இதெல்லாம் ஒரு கற்பனை, இதெல்லாம் ஒரு கற்பனை’ என மனதில் கூறிக்கொண்டே ஒரு நொடி கண்களை மூடித்திறந்தாள். தற்போது அங்கே அந்த ஒருவம் இல்லை. சில நிமிடங்களில் அவளுக்கு உயிர் போய் திரும்பி வந்தது போல் ஆனது. ‘அப்பாடா…’ என நிம்மதி பெருமூச்சு விட்டாள். கைகளால் தனது வெளிறிய முகத்தை துடைத்துவிட்டு அந்த எலிவேட்டரின் உள்ளே இருந்து வெளியேற நினைக்கையில் அதைக் கண்டாள். அக்கணம் அவள் உடல் முழுவதும் அச்சம் பரவி அரண்டு போய் ‘ஆ…..’ வென கத்தினாள்.

ஏனெனில் வராண்டாவின் கடைசியில் இருந்து அவ்வுருவம் சியோவை நோக்கி வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது. அந்த உருவத்தின் ஓட்டம் மிக வேகமாக காற்றில் பறந்து வருவதை போல் இருந்தது. அந்த வேகம் இவளை மிக சீக்கிரமாக கொல்ல வேண்டும் என்பதை போல் இருந்தது. தற்போது சியோவை நோக்கி சில அடிகளே பாக்கி இருந்த நிலையில், அரண்டு போய் இருந்த அவள், இதனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைத்து, அவள் இருந்த எலிவேட்டரை இயக்கினாள். பயத்தில் ஏதோவொரு பட்டனை தாறுமாறாக அழுத்தினாள். ஆனால் அது இயங்கவில்லை. அதேசமயம் அவ்வுருவம் அருகே வர வர அவளுக்கு பீதி அதிகமானது. அப்பேய் அவளை பிடிக்க ஒரே ஒரு நொடி இருக்கும்போது, திடீரென எலிவேட்டர் உயிர்பெற்று டக்கென கதவை மூடியது. ‘டமார்ர்ர்ர்….’ என அது அந்த எலிவேட்டரின் இரும்புக் கதவில் மோதி சத்தம் உண்டானது. சியோவிற்கு என்ன நடக்கிறது என ஒன்றும் விளங்கவில்லை.

அந்த எலிவேட்டரின் பின்பக்க இரும்பு சுவற்றில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். சில நொடிகளில் எலிவேட்டர் மேல்நோக்கி நகர ஆரம்பித்தது. அப்போதுதான் சியோ கவனித்தாள். அவள் பத்தாம் எண் பட்டனை அழுத்தியிருக்கிறாள் என. எலிவேட்டர் சீராக மேலே ஏறியது. சியோவின் வயிற்றுப் பகுதி அப்படியே மேலே தூக்குவது போல் இருந்தது. ஆறு, ஏழு, எட்டு என அங்கிருந்த டிஜிட்டல் திரையில் எண்கள் மாறிக் கொண்டேயிருந்தது. பத்தாவது தளத்தை அடைந்ததும் டிங் என்று ஒரு ஒலி வந்தது. இன்னும் சில நொடிகளில் அந்த இரண்டு இரும்புக் கதவுகளும் மெதுவாக திறக்கப்போகின்றன என்று உணர்ந்த சியோ, இந்நேரத்தில் அந்த நீண்ட நடைபாதையில் யார் இருப்பாரோ என அச்சத்தில் உறைந்தாள். கதவுகள் திறந்தது. சியோ அந்த வராண்டா நெடுகிலும் ஒரு பார்வை பார்த்தாள். அங்கே எந்த ஒரு உயிருள்ள பொருளும் இருப்பதற்கான அறிகுறியே காணவில்லை.

ஆனாலும் அந்த இடம் சற்றே வித்தியாசமாக இருந்தது. அந்த தளத்திற்கு அவள் பலமுறை வந்திருக்கிறாள். ஆனால் இப்போது அவ்விடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. மின்விளக்குகள் எதுவும் எரியாமல் இருட்டாகவும், தரைப்பகுதி முழுவதும் வெள்ளை நிற புகைமண்டலமாக காட்சியளித்தது. சியோவின் கண்ணிற்கு எந்த உருவமும் சரியாக புலப்படவில்லை. அவளுக்கு ஏதோ கனவு உலகில் இருப்பது போல் அந்த இடம் தோன்றியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவள் முன்னே நடக்கத் தொடங்கினாள். அப்போதுதான் அவள் அதை கவனித்தாள். தூரத்தில் ஒரு கூட்டல் குறியீடு போன்ற வடிவத்தில் ஒரு சிகப்பு நிற மின்விளக்கு மின்னியது. இவ்வளவு மங்கலான இடத்திலும் அந்த குறியீடு மட்டும் சியோவிற்கு மிகத்தெளிவாக தெரிந்தது. அவளை அறியாமல் அதை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அதே சமயம் அவளுக்கு பின்புறம் இருந்த எலிவேட்டரின் கதவுகள் தானாக மூடி, அது தரை தளத்தை நோக்கிச் சென்றது.

சற்று தூரம் மெதுவாக நடந்த பின்னர் டக்கென சுய நினைவு வந்து அங்கேயே நின்றாள். அப்போது அவளுக்கு இடது புறத்தில் இருந்த ஒரு அறையின் தடிமனான இரும்புக் கதவானது ‘கிர்ர்ர்ர்ர்….’ என்ற ஒலியுடன் லேசாக திறந்தது. நடுக்கத்துடன் சியோ அந்த கதவின் மேலே பார்த்தாள். அங்கு ஒரு சிவப்பு நிற ஜீரோ வாட்ஸ் பல்ப் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அதற்கு மேலே பிணவறை என கொரிய மொழியில் எழுதப்பட்ட ஒரு பெயர்ப் பலகை தொங்கியது. பாதியளவு திறந்திருந்த அந்த அறையில் உள்ளே மிகவும் இருட்டாக இருந்தது. தற்போது அதனுள் இருந்து ‘வா….’ என ஒரு மென்மையான பெண்ணின் குரல் கேட்டது. ‘நீ எங்க போக விரும்புற.’…… ‘சியோ உள்ள வா…’ என்று கேட்டது. அரண்டு போன சியோ அங்கிருந்து இரண்டடி பின்னால் சென்றாள். தற்போது அந்த குரலில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ‘வா உள்ள…’ ‘உள்ள வா…’ ‘வாடி….’ என சத்தம் அதிகரிக்க, சியோ இன்னும் பின்னாடி போனாள்.

அந்த இரும்புக் கதவு ‘படார்ர்ர்….’ என தானாக பலமாக திறந்து ஒலி எழுப்ப, அதே நொடி மேலே இருந்த பல்ப் வெடிக்க அவ்விடம் முழுக்க தற்போது வெளிச்சம் இன்னும் குறைந்தது. ‘ஹாஆ…..’வென்று ஒரு கோரமான கதறும் சத்தம் அங்கு கேட்க, அலறிக் கொண்டு சியோ அந்த இடத்தை விட்டு எலிவேட்டரை நோக்கி ஓடினாள். அப்போது அங்கு கண்ட ஒரு காட்சியை அவள் கண்களால் நம்ப முடியவில்லை. அங்கு ஒரே மாதிரி மூன்று எலிவேட்டர்கள் இருந்தன. மூன்றும் அவள் மேலே வந்த அதே எலிவேட்டர் போலவே இருந்தன. கண்களை நன்கு துடைத்துவிட்டு மீண்டும் பார்த்தாள். எந்த மாற்றமும் இல்லை. ‘என்ன நடக்குது இங்க. நான் இப்ப எந்த இடத்துல இருக்கன்.’ என தன் மனதினுள் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டாள். சில சமயம் அந்த எலிவேட்டர் தன்னை பத்தாவது மாடிக்கு கொண்டுவராமல், தன்னை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறதோ என நினைத்து பீதியுற்றாள்.

இப்போது சற்று திரும்பி அந்த பிணவறையை நோக்கினாள். முழுவதும் திறந்திருந்த அந்த கதவின் உள்ளே இருந்து ஒரு பெண்ணின் தலை மட்டும் எட்டி சியோவை பார்த்தது. அந்த தலையும் முகம் தெரியாமல் முழுவதும் கசங்கிய கூந்தலால் மூடப்பட்டிருந்தது. தற்போது அது தனது இடது கையால் பளார் என்று அந்த சுவற்றில் அடித்து தனது கையை ஒட்டியது. அதன் கையில் இருந்து கருப்பு கலரில் பெயின்ட் போன்ற ஒரு திரவம் சுரந்தது. அது அந்த சுவர், தரை, கூரை மற்றும் எதிர் பக்க சுவர் என நான்கு பக்கமும் பரவிக்கொண்டே அவளை நோக்கி வந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியில் சியோ பொறுமையில்லாமல் நடுவில் இருந்த எலிவேட்டரை நோக்கிச் சென்று திறக்கும் பட்டனை அழுத்தியதும், டக்கென கதவு திறக்க, முதல் தளத்தில் அவளை நோக்கி ஓடிவந்த சிவந்த கண்களை உடைய அந்த பேய் உருவம் அவளின் முன்னே மிக அருகில் நின்றது.

அவள் ‘ஆ…..’வென்று வாய் திறந்து கத்த, அந்த மிருகம் தனது கோரமான கைகளால் அவளது தோளை பலமாக பற்றி அந்த எலிவேட்டரின் உள்ளே இழுத்துப் போட்டது. தற்போது அதன் இரண்டு இரும்புக்கதவுகளும் மூடி கீழ்நோக்கி இயங்க ஆரம்பித்தது.

***

அடுத்தநாள் அதிகாலையில் ஆஸ்பத்திரியின் துப்புரவு பணியாளர் வேய் சேன் நான்காவது மாடிக்குச் செல்ல எலிவேட்டரை இயக்கியதும் அதிர்ந்து போனார். உடனே அவர் ‘காப்பாத்துங்க, காப்பாத்துங்க. யாரவது உடனே இங்க வாங்க.’ என கொரிய மொழியில் அலறினார். ஏனெனில் எலிவேட்டரின் உள்ளே உடம்பில் பல கீறல்களோடும், யாரோ அடித்துப் போட்டதைப் போல் காயங்களோடும் மின் சியோ மயங்கிக் கிடந்தாள். இறுதியாக அவள் வேலை செய்த அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டாள்.

பின்பு அன்று மதிய வேளையில் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை அதிகாரி டாக்டர். ஜாங் கியூன் லீ, ஐ.சி.யு விற்கு சென்று மின் சியோவை சந்தித்தார். தான் அனுபவித்த அமானுஷ்ய நிகழ்வுகளால் பயத்தோடும் மற்றும் சற்றே மயக்கத்தோடும் இருந்த அவளை எழுப்பினார்கள். தற்போது அவள் உடல்நிலையை அங்கிருந்த ஒரு டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்ட லீ, முழித்துக் கொண்ட சியோவின் அருகில் வந்து கொரியனில் பேச ஆரம்பித்தார். “சியோ அவர்களே , என்ன ஆச்சு?” என அவர் கேட்டதுதான் தாமதம். சியோ கட கடவென தன் அறை ஜன்னலில் பார்த்த உருவத்தில் இருந்து கடைசியாக எலிவேட்டரில் தன்னை இழுத்த பேய் வரை முழுமையாக அவரிடம் கொட்டினாள். அதைக்கேட்டு லீ அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என நினைத்தார். “சரி நல்லா ஓய்வெடுங்க. எல்லாம் சரி ஆய்டும்.” எனக்கூறி அவளிடம் மறுபதிலை எதிர்பார்க்காமல் எழுந்து அவ்வறையில் இருந்து வெளியே வந்தார்.

பின்பு அவர் ஆஸ்பத்திரியின் சிசிடிவி காட்சிகளில் நேற்றிரவு நடந்ததை பார்த்த பின்பு, ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்தார். அவளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது என. மேலும் அந்த வீடியோவில் மின் சியோ தானாகவே எலிவேட்டரின் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக மாறி மாறி இருந்தது. இருப்பினும் சியோ சொன்ன கதை கற்பனைதான் என்பதை லீ உணர்ந்தது, அவள் சொன்ன அந்த பத்தாவது மாடி சம்பவங்களுக்குப் பிறகுதான். ஏனெனில் சிசிடிவி வீடியோக்களின் படி அவள் மேல்தளத்திற்கு செல்லவே இல்லை. இரவு முழுவதும் பத்தாவது தளத்தில் இருந்த பிணவறையிலும் மற்ற அறைகளிலும் எந்த நடமாட்டமும் இல்லை என அது தெளிவாக காட்டியது. ஒருவேளை சியோ சொன்ன மாதிரி அவள் எலிவேட்டர் வழியாக வேறு ஒரு உலகத்திற்கு போய் இருப்பாளோ என மனதில் வேடிக்கையாக நினைத்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அவரது நண்பரும் கொரிய எழுத்தாளருமான வோன் சிக் ஹாம் நீண்ட நாட்களாக ஏதாவது உண்மையான அமானுஷ்ய கதை இருந்தால் சொல்லுமாறு அவரிடம் அடிக்கடி கேட்டு நச்சரித்தது அவருக்கு அப்போது ஞாபகம் வந்தது. உடனே தனது கைப்பேசியை எடுத்து அவரை அழைத்தார் லீ.

***

மின் சியோவின் அமானுஷ்ய கதையை கேட்ட வோன் சிக் ஹாம் ஆச்சரியத்தில் வியந்து போனார். உடனே அதை ஒரு கதையாக எழுதலாம் என முடிவெடுத்தார். கதையின் தலைப்பு கூட அவர் முடிவெடுத்து விட்டார். ‘மறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் எலிவேட்டர். சூப்பர்….’ தன் வாசகர்களுக்கு இந்த மாதிரி தலைப்புகள்தான் ரொம்ப பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும் அந்த கதையில் சில கற்பனைகளை புகுத்தி ரெட்இட் இணையதளத்தில் அமானுஷ்ய கதைகள் பகுதியில் அக்கதையை பதிவிட்டார். பின்னர் ஆங்கிலத்தில் அக்கதை மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட்டதும் உலகம் முழுவதும் பல பேர் அக்கதையை வாசித்தனர். சில திகில் விரும்பிகள் கதையை பின்பற்றி இரவில் தனியாக எலிவேட்டரில் ஏறி இறங்கி மறு உலகிற்கு செல்ல முடிகிறதா என முயற்சித்தும் பார்த்தார்கள். அதனால் அந்நிகழ்வு ஒரு அமானுஷ்யமான விளையாட்டாக மாறியது. ‘தி எலிவேட்டர் கேம்’ என்னும் பெயரில் அவ்விளையாட்டு உலகம் முழுவதும் பரவியது. ஆனால் இன்றுவரை மின் சியோவைத் தவிர வேறு யாரும் ஆவியுலகை கண்டதாக கூறவில்லை.

***

                                                                                    டிசம்பர், 2019

நுங்கம்பாக்கம், சென்னை

கண்ணை இழுக்கும் தூக்கத்தோடு எலா தனது ஐ.டி கம்பெனியின் வேலையை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தான் வசிக்கும் அபார்ட்மென்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழக்கமாக இரவு எட்டு மணிக்கே வீட்டில் இருப்பாள். வேலைப்பளுவால் இன்று வீட்டிற்குச் செல்ல பத்து முப்பது மணியாகி விட்டது. கொட்டாவி விட்டுக்கொண்டே தனது ஃபிளாட் இருக்கும் தெருவில் வண்டியை இடது புறமாக திருப்பினாள். அந்த தெருவே ஆளரவமற்று மிக அமைதியாக இருந்தது. ‘அம்மா என்ன திட்டுவாளோ’ என மனதில் நினைத்தபடியே அவசர அவசரமாக சென்று பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள். தரையில் இருந்து பார்த்தால் பௌர்ணமி நிலவை மறைக்கும் அளவிற்கு அந்த அபார்ட்மென்ட் உயர்ந்து நின்றது. வேகவேகமாக எலிவேட்டரை நோக்கி நடந்தாள். அவளது ஃபிளாட் நான்காவது மாடியில் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக அந்த பார்க்கிங்கில் யாருமில்லாமல் காலியாகவும் சற்று இருட்டாகவும் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

தற்போது எலிவேட்டரின் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தாள். பத்தாவது மாடியில் இருந்து எலிவேட்டர் அவளுக்காக இறங்கி வந்து கொண்டிருந்தது. அந்த சமயம் அங்கிருந்த ஜன்னல் வழியாக தூரத்தில் இருந்த ஒரு பூங்காவில் அதைக்கண்டாள். நிழல் போன்ற ஒரு உருவம் சிவந்த கண்களோடு நின்றிருந்தது. ஒரு கணம் வியப்போடு அவள் நன்கு உற்றுப் பார்த்தாள். தற்போது அங்கு யாருமில்லை. அது அங்கிருந்த செடி கொடிகளின் நிழலால் காற்று அடிக்கும்போது அப்படி நிகழ்ந்திருக்கலாம் என நினைத்தாள். எலிவேட்டரின் உள்ளே ஏறி கதவு மூடியதும் அவளுக்கு ஒரு யோசனை வந்தது. பேய் படங்கள் மற்றும் அமானுஷ்ய விஷயங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட அவள். அன்று இணையதளத்தில் படித்த எலிவேட்டர் கேம் எனும் அமானுஷ்ய விளையாட்டை விளையாடி பார்க்க முடிவெடுத்தாள். ஏனெனில் இந்நேரத்தில் யாரும் வந்து எலிவேட்டரில் ஏறப்போவதில்லை. அவ்விளையாட்டின் முதல் விதியே தனியாக விளையாட வேண்டும் என்பதுதான். எனவே இந்நேரத்தை அவள் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்.

அவ்விளையாட்டின்படி ஒரு தனிநபர் கீழே இறங்காமல் பல தளங்களுக்கு மேலேயும் கீழேயும் எலிவேட்டரை இயக்கி கடைசியாக பத்தாவது தளத்தை அடைந்தால் வேறு ஒரு உலகத்திற்கு செல்லலாம் என்றும், அங்கே வேறெதுவும் தெரியாமல் சிகப்பு நிற கூட்டல் குறியீடு மட்டும் வெளிச்சமாக தெரியும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. எலாவிற்கு மறுஉலகத்திற்கு போகவெல்லாம் விருப்பமில்லை. அவளுக்கு அந்த கதையை பொய் என நிரூபிப்பதில்தான் ஆர்வம். எனவே விளையாட்டை ஆரம்பித்தாள். இரண்டாவது நான்காவது ஆறாவது மீண்டும் ஐந்தாவது என பல தளங்களுக்கு மாறி மாறி எலிவேட்டரை இயக்கினாள். ஆனால் எங்கும் இறங்கவில்லை. இறுதியாக பத்தாவது மாடியை அடைந்தாள்.கதவு திறந்தது! ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு எதுவும் வித்தியாசமாக இல்லை. எலிவேட்டரில் இருந்து வெளியே வந்து சில அடிகள் நடந்து பார்த்தாள். எல்லாம் இயல்பாகவே இருந்தது. பின்பு இதெல்லாம் பொய்தான் என நாளை முகநூலில் போட்டுவிடலாம் என எண்ணி மீண்டும் உள்ளே ஏறினாள்.

அக்கணம் அங்கு ஒரு ஜீரணிக்க முடியாத துர்நாற்றம் வீசியதை நுகர்ந்து மூக்கை மூடிக் கொண்டாள். பின்பு தனது ஃபிளாட் இருக்கும் நான்காவது தளத்திற்கு செல்வதற்கான பட்டனை அழுத்தினாள். ஆனால் மாறாக அந்த எலிவேட்டர் மேல்நோக்கி சென்றது. சற்று அச்சத்தோடு எலிவேட்டரை நிறுத்தப் பார்த்தாள். ஆனால் பலனளிக்கவில்லை. பதினொன்று, பன்னிரெண்டு என மேல்நோக்கி ஏறியது. எலா அதிர்ச்சியில் அதிலிருந்த எல்லா பட்டனையும் அழுத்தினாள். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அக்கணம் ஏற்பட்ட பதட்டத்தில் பின்னால் நின்ற ஒருத்தியை அவள் கவனிக்கவில்லை. பின்பு அது பதிமூன்றாவது தளத்தில் வந்து நின்றது. அதனுள் இருந்த விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன. எலாவிற்கு முன்பு இருந்த அந்த ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கதவில் அவளுக்கு  பின்புறம் யாரோ நிற்பதைப்போல விட்டு விட்டு பிரதிபலித்தது. அதைக்கண்டு திடுக்கிட்டு அவள் திரும்பிக் பார்க்க, கிழிந்த உடையை அணிந்துகொண்டு, அழுக்கான நீண்ட தலைமுடியினால் முகத்தை மூடிக்கொண்டு, தலையை குனிந்தவாறு ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து மிரண்டு போய் எலா அப்படியே உறைந்து நின்றாள். அப்போது அந்த பெண் தனது தலையை மெதுவாக உயர்த்தி ‘நீ எங்க போக விரும்புற?’ என ஒரு கோரமான குரலில் கேட்க, எலா அது ஒரு பெண்ணே இல்லையென உணர்ந்து ‘ஆ……’ வென கத்தினாள். அதே சமயம் அந்த இரும்புக்கதவுகள் திறக்க அவள் பயத்துடன் வெளியே ஓட முயற்சித்த போது,  அவள் வழியை மறைத்து சிவந்த கண்களோடும் கோரைப் பற்களின் சிரிப்போடும் பார்க்கில் நின்ற அந்த கருப்பு உருவம் எலாவின் முன்பு நின்றது. கணப்பொழுதில் அது அவளைப் பிடித்து எலிவேட்டரின் உள்ளே கொண்டுவந்தது. பின்பு கதவுகள் தானாக மூட, அதன் உட்புறம் முழுவதும் கருப் நிறத்தில் ஒரு திரவம் பரவ, எலாவின் இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே வழிந்தது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *