நுண்ணியங்கள்

 

அக்டோபர்-2019

வூஹால்ஸ் தேசிய ஆராய்ச்சி நிலையம்

சைவூ நாட்டின் பிரபலமான வூஹால்ஸ் நகரில் சுமாராக ஒரு கோடி பேர் வசித்து வந்தனர். அந்நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக இருபது மாடிகளுடன் அந்த உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தின் கட்டிடம் இருந்தது. அவ்விடத்தைச் சுற்றிலும் அந்த கட்டிடத்திற்கு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏனெனில் சரியாக காலை பதினொன்று மணிக்கு அங்கு மிகவும் ரகசியமான ஒரு சந்திப்பு நடக்கப் போகிறது. அதில் அந்நாட்டு அரசாங்கத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் வரவிருக்கிறார்கள். அந்த சந்திப்பில் நடக்கப்போகும் கலந்துரையாடல் ஒரு மிகப்பெரிய ராணுவ ரகசியம். சில நாடுகள் தனது அண்டை நாடுகளின் மீது நட்புக்கரம் நீட்டினாலும் உள்ளுக்குள் அந்த நாட்டை விட தாங்கள் பொருளாதாரத்தில் எப்படி உயர்வது என்றும்,அல்லது அந்நாட்டின் பொருளாதாரத்தை எப்படி தங்களை விடக் குறைப்பது என்றும் ரகசியமாக வேலை செய்துகொண்டே இருக்கும்.

அதிலும் இந்த சைவூ நாடு தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னணியில் இருந்தது. உலகில் உள்ள எல்லா தொழில்நுட்பமும் அதனிடம் இருந்தது. உலக மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களில் பெரும்பான்மையான பொருட்கள் அந்த நாட்டில்தான் தயாரிக்கப்பட்டது. தற்சமயம் தங்கள் நாட்டு மின்சாரத் தேவைக்காக சிறிய அளவில் ஒரு செயற்கைச் சூரியனையே உருவாக்க முயன்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு அந்த வளர்ச்சி போதவில்லை. எப்படியும் வல்லரசு நாடாக மாறி, உலகின் முதல் இடத்திற்கு போகவேண்டும் என்ற வெறி அந்த அரசாங்கத்திடம் இருந்தது. அதற்காக அது என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தது. தனது குடிமக்களிடம் இருந்து கடுமையாக உழைப்பை உறிஞ்சி எடுத்தது. குறிப்பாக சைவூவிற்கு தெற்குப்புறமாக அதன் பரப்பளவிற்கு நிகராக இருந்த ஒரு வளரும் நாட்டின் மீது அதற்கு ஒரு கண் இருந்தது.

எப்படியாவது அந்த நாட்டின் பொருளாதாரத்தை சரிக்க வேண்டுமென்று அது விரும்பியது. அதுமட்டும் நிறைவேறிவிட்டால் அந்தக் கண்டத்திலேயே சைவூதான் ஒரு மிகப்பெரிய சக்திவாய்ந்த நாடாக விளங்கும். அதற்காக அந்த நாட்டின் எல்லைப்புற நிலங்களை தனது ராணுவத்தை வைத்து மறைமுகமாக சிறிது சிறிதாக ஆக்கிரமித்தது. பின்பு அந்த நாட்டைச் சுற்றியிருந்த சிறு சிறு நாடுகளுக்கு அவர்கள் கனவில் கூட நினைக்காத அளவிற்கு பணத்தை லஞ்சமாக கொடுத்து, அங்கு தன் நாட்டு ராணுவங்களை நிறுத்தியது. மேலும் அங்கிருந்து கொண்டு அந்நாட்டு பணத்தின் கள்ள நோட்டுகளை கோடி கோடியாக அடித்து, எல்லை வழியாக நாட்டுக்குள் கடத்தி, அவர்களின் பொருளாதாரத்தை சிதைக்க நினைத்தது. ஆனால் இதில் அவர்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

எனவே அடுத்து மறைமுகமாக என்ன செய்யலாம் என அவர்கள் யோசித்ததின் விளைவுதான் இப்போது நடக்கப்போகும் இந்த சந்திப்பு. மணி தற்போது சரியாக பதினொன்று ஆனது. அந்த கட்டத்தின் ஏழாவது மாடியில் இருந்த ஒரு நீள் வட்ட மேசையை சுற்றி அனைவரும் அமர்ந்திருந்தனர். அங்கே சுமாராக ஒரு ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர். குறிப்பாக அந்த நாட்டின் பிரதமர் திரு வின் கஹோ, தேசிய ராணுவத் தளபதி ஜெனரல் வார்சாப், தேசிய சுகாதாரத் துறை மந்திரி திரு. மின்சஹாப், அணு ஆராய்ச்சிகுழுவின் தலைவர் திரு.லீ வேய் மற்றும் அந்த நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடிய சில முன்னணி அறிவியல் விஞ்ஞானிகளும் மற்றும் பொருளாதார ஆராய்ச்சியாளர்களும் இருந்தனர்.  இன்று அந்த சந்திப்பை தலைமை ஏற்று நடத்தப் போகின்றவர் அந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைவர் டாக்டர். எரிஸ் யாஷிடா.

அவர் முகத்தில் ஒரு பெரிய சாதனையை சாதித்ததற்கான சந்தோஷம் தெரிந்தது. இந்த சாதனையை மட்டும் மனித வளர்ச்சிக்காக செய்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். ஆனால் அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது ஆராய்ச்சியை பல ஆண்டுகளாக மனிதர்களின் அழிவிற்காக செய்ததால், தற்போது அவர் அடைந்த வெற்றிக்கு தனது ஃபிளாட்டில் உள்ள படுக்கை அறையை முழுவதும் நிரப்பி அடைத்துக்கொள்ளும் அளவிற்கு பணம் கிடைக்கப் போகிறது. முதலில் ராணுவத் தளபதி வார்சாப் பேச்சை ஆரம்பித்தார். ‘என்ன யாஷிடா அவர்களே இந்தவாட்டி ஏதும் முன்னேற்றம் இருக்கா. இல்லை வழக்கம் போல் ஏதாவது கதை சொல்லப் போகிறீர்களா.’ என  சற்று நக்கலுடன் கேட்டார். அவரை எதுவும் கண்டு கொள்ளாத யாஷிடா பிரதமரை மட்டும் பார்த்து ‘நாங்கள் ஒன்றை உருவாக்கி விட்டோம்’ என்று நிதானமாகக் கூறினார். அதைக்கேட்டதும் அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி அமைதியாயினர்.

‘உங்களுக்கும், உங்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் யாஷிடா அவர்களே. அதைப்பற்றி எங்களுக்கு மேலும் விவரிக்க முடியுமா.’ என பிரதமர் வின் கஹோ பணிவுடன் கேட்டார். அந்த கேள்விக்காகத்தான் அவர் காத்திருந்ததைபோல் எழுந்து அங்கிருந்த ப்ரொஜக்டரை ஆன் செய்ய, அவ்வறையில் இருந்த மின் விளக்குகள் தானாக அணைந்தது. அதில் ஒரு சிறிய உருண்டை வடிவ மிட்டாயை போன்ற ஒன்றில், சுற்றிலும் நிறைய சிறு சிறு முட்கள் இருப்பது போன்ற ஒரு படம் தோன்றியது. மகிழ்ச்சியுடன் அவர்களைப் பார்த்து ‘மாண்புமிகு அதிகாரிகளே இதோ உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன், இதுதான் ‘புரோட்டான் யு.வி.ஜே’ (Proton – UVJ)’ என்று அந்த திரையைப் பார்த்து கை நீட்டினார். அதைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் அமைதியாக கிசுகிசுத்தனர். அங்கிருந்த விஞ்ஞானி ஒருவர் ‘மிகவும் கவரக்கூடியதாக உள்ளது .’ என்றார்.

பின்பு சுகாதாரத் துறை மந்திரி மின்சஹாப் ‘இது என்ன செய்யும்?’ என்று கேட்டார். ‘இது நாங்கள் புதிதாக கண்டுபிடித்திருக்கும் ஒரு வைரஸ் கிருமி மின்சஹாப் அவர்களே’ என்று அவர் கூறியதும் உடனே ராணுவத்தளபதி வார்சாப் ‘பிரமாதம். இது எத்தனை பேரைக் கொல்லும்’ என்றார். ‘இல்லை. இது எந்த மனிதரையும் அவ்வளவு சீக்கிரம் கொல்லாது. இதன் இறப்பு விகிதம் ஒரு சதவீதம் மட்டுமே. இவ்வளவு ஏன் மனித உடலின் நோய்எதிர்ப்பு சக்தியாலேயே இது நோயாளியிடம் இருந்து சில வாரங்களில் இறந்து விடும்.’ என்றார். அதற்கு வார்சாப் சற்று ஏமாற்றத்துடன் ‘என்ன சொல்கிறீர்கள். பின்பு எதற்கு இதை கண்டுபிடித்ததற்கு பெரிதாக பெருமைப் படுகிறீர்கள். எங்கள் நேரம் உங்களுக்கு மலிவானதாக இருக்கின்றதா’ என பொரித்து தள்ள, அக்கணம் பிரதமரிடம் இருந்து ‘அமைதி’ என ஒரு வார்த்தை வந்ததும் தளபதி உடனே பேச்சை நிறுத்தினார். அதோடு அந்த அறையே அமைதியானது.

பின்பு வின் கஹோ யாஷிடாவைப் பார்த்து ‘இந்த வைரஸை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’ என்றார். ‘சொல்கிறேன் பிரதமர் அவர்களே. கோழிகள், குதிரைகள் மற்றும் பன்றிகள் போன்றவற்றின் நுரையீரலில் இருந்து நாங்கள் இதைக் கண்டுபிடித்தோம். இதற்கு முன் மருத்துவ வரலாற்றில் இந்த வைரஸைப் பற்றி எந்த பதிவும் இல்லை. இது கரோனா குடும்பத்தை சேர்ந்த ஒரு புதுவகை வைரஸ். இது அம்மிருகங்களின் நுரையீரல் செல்களைத் தாக்கி அழிக்கின்றன. இதனால் அவை சுவாசக்கோளாறு ஏற்பட்டு இறக்கின்றன.’ என்றார். அதற்கு லீ வேய் ‘நாம் ஒன்றும் கால் நடைகளை அழிக்கும் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கவில்லையே. இதுவும் சின்னம்மை போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களும் ஒன்றுதானே. இந்த மாதிரி வீரியம் குறைந்த வைரஸ்களை வைத்து நாம் என்ன செய்வது’ என்றார்.

அதற்கு யாஷிடா சற்று புன்சிரிப்புடன் ‘இந்நேரத்தில் வீரியத்தை விட இது செய்யும் காரியமே பெரியது.’ என்றார். அங்கிருந்த யாருக்கும் அவர் சொல்ல வந்தது விளங்கவில்லை. பிரதமர் சற்று களைப்புடன் ‘திரு. யாஷிடா அவர்களே நீங்கள் இந்த நாட்டிலேயே தலை சிறந்த அறிவாளி என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை. இருப்பினும் நீங்கள் கண்டுபிடித்த இந்த புரோட்டான் யு.வி.ஜே வைரஸை பற்றியும் அதை வைத்து தாங்கள் உருவாக்கியுள்ள திட்டத்தை பற்றியும் சற்று எல்லாருக்கும் தெளிவாக விளக்குவது நல்லது’ என்றார். தற்போது யாஷிடா தன்னை தயார்படுத்திக் கொண்டார். அனைவரும் அவரை சற்று உன்னிப்பாகக் கவனித்தனர். ‘விளக்கமாக சொல்கிறேன் பிரதமர் அவர்களே, உலக வரலாற்றை நீங்கள் எல்லாரும் புரட்டிப் பார்த்தால் இதற்கு முன்பு பல உயிர்கொல்லி வைரஸ்கள் உருவாகி லட்சக்கணக்கான மக்களை காலரா. பிளேக், பெரியம்மை, எபோலா போன்ற நோய்களுக்கு ஆளாக்கி கொன்றிருக்கின்றன.

ஆனால் அவை யாவும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பரவி பாதிப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பாதிப்பு அதிகம் ஏற்படுத்தும் வைரஸ்கள் சீக்கிரமே அழிந்து விடுகின்றன. எபோலா போன்ற கொடிய நோய் வந்த ஒருவன் அதை பல பேருக்கு பரப்புவதற்கு முன் இறந்து விடுகிறான். அதனால் அதுபோன்ற வைரஸ்களின் ஆயுட்காலம் மிக குறைவு…..’ அப்போது அங்கிருந்த ஒரு விஞ்ஞானி குறுக்கிட்டார். ‘நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் உயிரை கொல்லும் வைரஸை விட அதிக அளவில் பரவும் ஒரு வைரஸ்தான் மிக அபாயமானது அப்படித்தானே’ ‘மிகச் சரியாகச் சொன்னீர்கள். எங்கள் குழு இதை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து அது போன்ற ஒரு வைரஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. அப்போதுதான் இந்த வைரஸ் தற்செயலாக விலங்குகளில் இருந்து  எங்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு குறைவு என்றாலும் பரவும் சக்தி மிக அதிகம்.’

தற்போது தளபதி வார்சாப் யாஷிடாவின் கண்டுபிடிப்பை கண்டு பேச்சற்றுப் போனார். அவர் தற்போது சற்று மென்மையாக ‘இது எந்த அளவிற்குப் பரவும்’ என்றார். யாஷிடா அதற்கு ‘வேகமாக மிக வேகமாகப் பரவும். மேலும் இந்த வைரஸில் நாங்கள் மனிதர்களுக்காக சில மாறுதல்களை செய்திருக்கிறோம். அந்த மாறுதலுக்குப் பிறகு அதன் வளர்ச்சியை பற்றித் தெரிந்துகொள்ளவே எங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப் பட்டது. ஒரு வாரத்தில் சுமாராக நாற்பத்தி ஐந்தாயிரம் பேருக்கு இது பரவும். அதற்குப்பின் அதற்கடுத்த சில வாரங்களில் பரவும் விகிதம் பலமடங்கு அதிகரிக்கும். இந்த வைரஸால் ஒருவன் பாதிக்கப்பட்டால் அதை கண்டுபிடிக்கவே ஒரு வாரமாகும். எனவே ஒரு அரசாங்கம் அதைப்பற்றித் தெரியாமல் கவனக்குறைவோடு இருந்தால் ஒரே மாதத்தில் ஒரு நாட்டையே இந்த வைரஸ் முடக்கிவிடும்’ என்றார்.

அங்கிருந்த அனைவரும் வியந்துபோய் தங்கள் கரகோஷங்களை எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர். பல நாட்கள் தூங்காமல் அவர் செய்த கடின உழைப்பிற்கு அந்த கைத்தட்டலை அவர் வெகுமானமாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். ‘மேலும் இதன் இறப்பு விகிதம் ஒரு சதவீதம் என்று சொன்னேன் அல்லவா. எனவே சுமாராக இரண்டு கோடி பேருக்கு இந்த நோய் வந்தால் அதில் ஒரு சதவீதமான இரண்டு லட்சம் பேர் இறப்பார்கள்.’ என்று தன் உரையை முடித்தார் டாக்டர். எரிஸ் யாஷிடா. பிரதமர் எழுந்து வந்து அவரை கட்டியணைத்தார். ‘பிரமாதம் டாக்டர். எரிஸ். இனி இந்த உலகமே நம் கையில் வந்துவிடும். எப்போது இதை அந்த நாட்டின் மீது பயன்படுத்தலாம்.’ என்று அவர் கேட்க அதற்கு ஒரு ஆராய்ச்சியாளர் ‘அவசரம் வேண்டாம் பிரதமர் அவர்களே. இந்த வைரஸ்க்கு யாஷிடா மாற்று மருந்து கண்டுபிடித்த பின்னர் நாம் இதை பயன்படுத்துவதைப் பற்றி யோசிக்கலாம்.’ என்றார்.

அதற்கு யாஷிடா ‘இந்த வைரஸ்க்கு மாற்றுமருந்தே தேவையில்லை. இதனால் ஜலதோஷம், ஜுரம், நிமோனியா போன்ற சிறிய பாதிப்புகள் தான் வரும். எனவே கவலைப்படத் தேவையில்லை’ என்றார். பின்பு அந்த சந்திப்பு முடிந்து அனைவரும் அந்த அறையை விட்டு செல்லும்போது யாஷிடா திடீரென பலமாக ஒரு தும்பல் தும்பினார். பின்பு தனது கைக்குட்டையை எடுத்து தன் மூக்கில் தேங்கி இருந்த சளியை சிந்தினார். ‘இந்த பாழாய்ப்போன ஜலதோஷம் வேறு படுத்துகிறதே.’ என மனதிற்குள் அதை சபித்தார்.

***

இரண்டு மணி நேரங்கள் கழித்து

அந்த ஆய்வுக் கூடத்தின் பாதாள ரிசர்ச் லேப்பில் பல கண்ணாடிச் சுவர்களால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வேக வேகமாக நடந்து வந்த யாஷிடா, விண்வெளி வீரன் போல் உடல் முழுவதும் மூடிய வகையில் உடையணிந்திருந்த மைக்கிலின் முன்பு போய் நின்றார். ‘என்னை எதற்காக அவசர அவசரமாக வரச் சொன்னாய் மைக்கேல். எனக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. தெரியுமல்லவா நமது திட்டம் அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. இனி நாம் எல்லாரும் பணக்காரார்கள்.’ ஆனால் மைக்கேலின் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் சோகமாக இருந்தான். ‘என்ன ஆச்சு’ ‘நீங்கள் இந்த வைரஸின் தனித்தன்மையை பற்றி அவர்களிடம் கூறவில்லையா?’ ‘இல்லை அது தற்காலிகமானதுதானே. அது மட்டுமின்றி நமக்கு அதை ஆராயும் அளவிற்கு நேரமில்லை. எல்லாம் சரியாக வரும்.’ தற்போது மைக்கேல் தனது தலைக்கவசத்தைக் கழட்டி வீசியெறிந்தான். கோபம் அவன் உடல் முழுவதும் பரவியது.

‘நீங்கள் எப்படி இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. அது தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. வரலாற்றில் எந்த வைரஸ்க்கும் இந்த சக்தி கிடையாது. நம்மால் இதுவரை அதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கவே முடியவில்லை. நாம் எந்த மருந்து செலுத்தினாலும் அதற்குள் அதன் முழு புரத அமைப்பும் மாறிவிடுகிறது. எனவே இது மிக மிக அபாயகரமான செயல்.’ தற்போது அவருக்கு பயங்கரமாக இருமல் வந்தது. நன்கு இருமி விட்டு பேச்சைத் தொடர்ந்தார். ‘அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும். நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காக இந்த மொத்த உலகத்தையே அழிவுப் பாதையில் தள்ளி விட்டீர்கள் யாஷிடா.’ அவன் அவரை எதிர்த்துப் பேசியது இதுவே முதல் முறை. அதை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் அவன் அவரை பெயர் சொல்லி அழைத்தது அவருக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது.

தன்னை மீறி வெடித்த கோபத்தில் யாஷிடா அவனிடம் முறையிட்டார். ‘வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதே மைக்கேல். என்னிடம் இம்முறையில் பேசும் அதிகாரம் உனக்கு யார் கொடுத்தது. இருப்பினும் இதை நான் நம் எல்லாருடைய நன்மைக்காகத்தான் செய்தேன்.’ ‘ஓஹ் அப்படியா, நீங்கள் செய்த நன்மையை சற்று பாருங்கள்’ என்று மைக்கேல் ஒரு கணினி திரையை அவரிடம் கட்டினார். மனிதனுக்காக மாற்றம் செய்த அந்த வைரஸை அவர்களது குழு ஆராய்ச்சி செய்யும் பொழுது இன்று காலை கண்டுபிடித்த தகவல் ஒன்று அந்த திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அதில் அவ்வைரஸ் காற்றில் பரவும் திறனை பரிணமித்ததன் மூலம் பெற்றுள்ளது என்று வந்தது. அதைப்பார்த்த யாஷிடாவிற்கு ஒரு நொடி இதயமே நின்று போனது.

தற்போது கண்களில் கண்ணீர் ததும்ப மைக்கேல் ஒரு விஷயத்தை அவரிடம் கூறினான். போன வாரம் நம் குழுவில் உள்ள லாசிபிக்கு இது தோற்றியுள்ளது. தற்போது அவர் நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். அவர் மூலம் நம் ஆராய்ச்சிக் குழுவில் உள்ள இருபது பேரில் பதினான்கு பேருக்கு அது பரவியுள்ளது. இந்த கசப்பான உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் யாஷிடா. வைரஸ் நம் நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டது(virus outbreak). இனி நம் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.’ யாஷிடா தலையில் இடி விழுந்ததைப் போல் அமர்ந்திருந்தார். அவருக்கு தற்போது மூச்சு விடவே சிரமாக இருந்தது. எவ்வளவு பெரிய தப்பை நான் செய்து விட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாரா என தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். கடைசியா மைக்கேல் சொன்ன வார்த்தையின் மூலம் தன்னைக் கடவுள் ஏற்கனவே தண்டித்துவிட்டார் என்பதை அவர் உணர்ந்தார். ‘எனக்கும் என் மூலமாக உங்களுக்கும் அந்த வைரஸ் நேற்றே தொற்றிக்கொண்டது.’

***

இரண்டு வாரங்கள் கழித்து

படுக்கையில் இருந்து கண் விழித்த ஷாவிற்கு தொண்டையில் பயங்கர வலி இருந்தது. தனக்கு அருகில் படுத்திருந்த தன் தம்பி டின்னை சற்று தள்ளி படுக்க வைத்துவிட்டு வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளித்தார். அன்று அவருக்கு விடுமுறை. அவர் வேலை செய்யும் அரசாங்க நிறுவனத்தின் தலைவர் திரு. எரிஸ் யாஷிடா இறந்ததே அதற்குக் காரணம். அதனால் காலையிலேயே ஒரு நல்ல மருத்துவ மனைக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ஷாவின் தம்பி டின், அந்நகரில் பிரபலமான இறைச்சிகள் விற்கும் மார்க்கெட்டில் இருந்த ஒரு கடையில் வேலை செய்து வந்தான். அந்தக் கடை வவ்வால் கறி விற்பதில் மிகவும் பிரபலமான ஒரு கடையாகும். தினமும் வேலைக்குச் சென்றதும் பெட்டியில் இருக்கும் வௌவால்களை ஒவ்வொன்றாக பிரித்து சிறிய சிறிய பாட்டில்களில் அடைத்து வைப்பான்.

ஷாவின் தொண்டைவலிக்கு என்ன காரணம் என்று அந்த டாக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கொண்டு வேறு ஒரு டாக்டரை பார்க்குமாறு அவர் பரிந்துரைத்து அனுப்பி வைத்தார். அவரது உடல் வெப்ப நிலையை தெர்மாமீட்டர் வைத்து பரிசோதித்த நர்ஸ் அன்று மாலை வீட்டிற்குச் சென்றதும் சற்றே சளி பிடித்து அவஸ்தைப்பட்டாள். அப்போது மிகவும் குறும்பு செய்து கொண்டிருந்த தனது மகனை கன்னத்தில் கிள்ளினாள். அடுத்த நாள் அவளது மகன் பள்ளி வகுப்பறையில் எல்லோரும் இருக்கும் போது பலமாக இரண்டு முறை தும்பினான். அதுவும் அப்போது அவன் கைகளைக் கொண்டு வாயைக் கூட மூடவில்லை.

***

ஒன்றரை மாதங்கள் கழித்து

பிரதமர் அலுவலகம் – சைவூ

அந்த அவசர கால கூட்டத்தில் தேசிய சுகாதாரத் துறை மந்திரி திரு. மின்சஹாப் நடுவில் அமர்ந்திருந்த பிரதமர் திரு. வின் கஹோவைப் பார்த்து ‘நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அந்த வூஹால்ஸ் நகரில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியே சில வாரங்கள் போனால் அந்த மொத்த நகரமே நோயினால் பாதிக்கப்படும் என்று நினைக்கிறேன். நாம் உடனே ஏதாவது செய்தாகவேண்டும் . இதற்கெல்லாம் யார் காரணம் என்று தெரியவில்லை.’ என்றார். அதற்கு பிரதமர் ‘உங்களுக்கு இன்றும் விளங்கவில்லையா புரோட்டான் யு.வி.ஜேதான் இதற்குக் காரணம். அந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து அது எப்படியோ வெளியேறிப் பரவி உள்ளது.’ அதற்கு மின்சஹாப் ‘இப்போது என்ன செய்வது. உடனே உலக சுகாதார மையத்தின் உதவியை கேட்கலாமா.’ ‘வேண்டாம். இப்போது உடனே அழைத்தால் நாம் மாட்டிக் கொள்வோம். கொஞ்ச நாள் போகட்டும். அதற்குள் நாமே இந்த சூழ்நிலையை வெளி உலகிற்குத் தெரியாமல் சமாளிக்கப் பார்ப்போம். அதுவரைக்கும் உலக நாடுகள் யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது.’

‘ஆனால் அந்த நகரில் இருக்கும் ஒரு டாக்டர் இந்த நோய் ஏதோ புதிதாக உள்ளது என மக்களிடம் கூறிக்கொண்டு இருக்கிறாரே.’ ‘அவரை முதலில் பிடியுங்கள். அவர் பரப்பியது வெறும் வதந்தி, எல்லாம் பொய் என அறிக்கை விடுங்கள். இனிமேல் அதைப்பற்றி அவர் வாய்திறக்கக் கூடாது என எழுதி வாங்கிவிட்டு மிரட்டி அனுப்புங்கள்.’ ‘சரி’ ‘முதலில் இந்த வைரஸ் உருவானதற்கான பழியை நாம் வேறு எதன் மீதாவது போட வேண்டும். அப்போதுதான் நாம் தப்பிக்க முடியும்.’ என்க, அப்போது அங்கிருந்த ஒரு அதிகாரி அவரிடம் அந்த நகரில் மிகவும் பழமையான ஒரு இறைச்சி சந்தை உள்ளது எனவும். அங்கே பாதுகாப்பற்ற முறையில் மாமிசங்களை கையாள்கிறார்கள் எனவும் பிரதமரிடம் கூறினார். அதைகேட்டதும் அவருக்கு பிரச்சனையை அழகாக திசை திருப்ப ஒரு வழி கிடைத்ததை எண்ணி அவர் முகத்தில் புன்னகை பூத்தது.

-கதை முடிந்தது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *