display

கடைசி குளியல்

 

முன்னொரு காலத்தில்,

வேக வேகமாக அந்த அடர்ந்த காட்டிற்குள் அவள் ஓடி வந்தாள். எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடினாள். அவள் வாழ்கையே தற்போது இலக்கில்லாமல் மாறி இருந்தது. அவர்கள் அவனை இழுத்துச் சென்று விட்டார்கள். ‘இனி வாழ்கையில் ஒன்றும் செய்ய முடியாது. அவன் இல்லாமல் நான் ஏன் வாழ வேண்டும்’ என நினைத்துக் கொண்டே ஓடினாள். கண்ணீர்த் துளிகள் அவள் கன்னத்தில் இருந்து சிதறி விழுந்தது. பின்னால் அவளது இனத்தை சேர்ந்த நான்கைந்து பேர் துரத்திக் கொண்டு வந்தனர். இறுதியாக அந்த காட்டில் ஒரு மலை விளிம்பை அடைந்தாள். அவளுக்கு கீழே சுமாராக இருநூறு மீட்டருக்கு அடியில் ஒரு ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் குறுக்கும் நெருக்குமாய் எண்ணற்ற பாறைகள் இருந்தது. சிறுவயதில் இருந்தே அவள் அந்த காட்டுப்பகுதியில் உள்ள எல்லா இடத்திலும் சுற்றித் திரிந்திருக்கிறாள். அந்தக் காடும், மலையுமே அவளது உலகம். அவைதான் அவளை வாழ வைத்தன.

தற்போது சுற்றும் முற்றும் பார்த்தாள். ‘ஓஹ் அன்னையே. என்னை வாழ வைத்த தெய்வமே. உனக்கு சக்தி இருந்தால் என்னை அவரோடு சேர்த்து வை.’ என்று கூறி அந்த மலை விளிம்பில் இருந்து எகிறி குதித்தாள். துரத்தி வந்த அவர்கள் அவள் நீரில் விழுந்ததைப் பார்த்து செய்வதறியாது திரும்பிச் சென்றனர். அப்போது அந்த இடத்தின் வானிலையே முற்றிலும் மாறியது. திடீரென கருமேகங்கள் உருவானது. காற்று பலமாக வீசி, பயங்கரமாக இடி இடித்தது. ஆற்றில் திடீரென ஒரு நீர்ச்சுழல் உருவானது. அந்த சுழலுக்குள் அவள் உடல் உள்ளே சென்றது.

***

நவம்பர் – 2019

டெவில்ஸ் ஃபூல் – ஆஸ்திரேலியா

பபிண்டா பௌல்டர்ஸ் எனப்படும் அவ்விடமானது பல வெளிநாட்டு சுற்றலாவாசிகளுக்கு ஓர் விருப்பமான இடமாகவே இருந்து வருகிறது. காரணம் அதனருகில் இருக்கும் ஒரு மலையின் உச்சியில் உருவாகும் நதியானது அவ்விடத்தை கடந்து செல்லும் போது மிகவும் ஆழம் குறைவாகவும் நீந்துவதற்கு ஏற்றதாகவும் ஒரு ஆற்றை (டெவில்ஸ் ஃபூல்) உருவாக்கியுள்ளது. மேலும் அந்த ஆற்றின் தூய்மையான நீரானது குளிர்ச்சியாக இருந்தது. அதன் கரைகள் எண்ணற்ற வடிவங்களில் உள்ள பாறைகளால் அமைந்திருந்தன. அக்கரையை சுற்றி அமைந்திருந்த மழைக்காடுகள் அவ்விடத்தை இயற்கையின் புகழிடமாக மாற்றி அமைத்திருந்தது.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த வார்னர் அவனது புதுமனைவி லிண்டாவுடன் தேனிலவைக் கழிக்க அந்த ஊருக்கு வந்திருந்தான். மதிய வேளையில் அவ்வூரில் காடுகளுக்கு இடையே இயற்கையாக அமைந்திருந்த நீச்சல் குளத்தில் இருவரும் குளிக்கச் சென்றனர். ஏற்கனவே அங்கே பல வெள்ளைக்காரர்களும் ஆஸ்திரேலியர்களும் சந்தோஷமாக குளித்துக்கொண்டிருந்தனர்.

‘இங்க ஒரே கூட்டமா இருக்கு லிண்டா. வா நான் உன்ன வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறன்.’ என்றான் வார்னர். அவன் கொஞ்சம் துணிச்சல் மிக்கவன். ஆழமே இல்லாமல் நீண்ட தூரம் செல்லும் அந்த ஆற்றில் இன்னும் கொஞ்சம் தள்ளிச்சென்று குளிக்கலாம் என முடிவெடுத்து தன் மனைவியுடன் காட்டிற்குள் சென்றான். ‘இதுவும் கொஞ்சம் திரிலிங்காத்தான் இருக்கும்’ என நினைத்து லிண்டாவும் அவனுடன் சென்றாள். காட்டில் சிறிது தூரம் கடந்து ஒரு இடத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் இருந்த ஆறும் பாறைகளும் மிகவும் அழகாக மற்றும் கண்ணிற்குக் குளிர்ச்சியாக இருந்தது. இருவரும் மகிழ்ச்சியோடு உள்ளே சென்றனர். அருகில் செல்லும்போதுதான் அங்கே மரங்களுக்கு நடுவே இரும்புக் கம்பியால் வேலி அமைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர்.

அந்த வேலியில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பலகையில் ‘வெளியாட்கள் உள்ளே செல்ல கட்டாயம் அனுமதி கிடையாது. தயவுகூர்ந்து திரும்பிச் செல்லவும்’ என எழுதப்பட்டிருந்தது. அதைப்பார்த்த லிண்டா பதட்டத்தோடு ‘வாங்க இந்த இடத்த விட்டு போய்டலாம்.’ என்க, அதற்கு வார்னர் ‘அதெல்லாம் சும்மா பயமுறுத்த எழுதி இருக்காங்க லிண்டா. இந்தப்பக்கம் ஆறு கொஞ்சம் ஆழமா இருக்கலாம். அதான் நீச்சல் தெரியாத யாரும் வந்து மாட்டிக்கக் கூடாதுன்னு இப்படி எழுதியிருக்காங்க.’ எனக்கூறி அந்த வேலியின் இரு கம்பிகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் புகுந்து உள்ளே சென்றான். பாதிமனதோடு லிண்டாவும் அதனுள் நுழைய வார்னர் அவளுக்கு உதவி செய்தான். பின்பு இருவரும் ஆற்றை நோக்கிச் சென்றனர்.

தங்களது உடைகளை கழட்டி ஒரு பாறையின் மீது வைத்துவிட்டு குளிக்கத் தயாராகினர். லிண்டா பிகினியில் இருக்க, வார்னர் தனது கட்டுமஸ்தான உடலில் ஒரேயொரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்ததான். அவன் முதலில் நீரில் இறங்கினான். நீர் மிகவும் மென்மையாக மற்றும் அங்கிருந்த வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு முற்றிலும் மாறாக குளிர்ச்சியாக இருந்தது. இடுப்புவரை மூழ்கியவனுக்கு இதமாக இருக்க அவளின் கையை பிடித்து உள்ளே இழுத்தான். அங்கு வீசிய காற்றில் மயங்கிய இருவரும் இன்னும் உள்ளே சென்றனர்.

ஆற்றில் நீரோட்டம் மிக மெதுவாக இருந்தது. பின்பு குளித்துக் கொண்டே ஒருவர்மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்து விளையாட ஆரம்பித்தனர். அப்போது அங்கிருந்த ஒரு சிறு பாறையில் அவன் ஏற, அவன் தேகத்தில் இருந்த நீரில் சூரிய ஒளிபட்டு பிரதிபலித்தது. சற்று தொலைவில் ஆற்றில் மூழ்கியிருந்த ஒரு பெண் தனது தலையை இரு கண்கள் மட்டும் தெரிகின்ற அளவிற்கு மேலே தூக்கி வார்னரை ஆசையோடு பார்த்தாள். ‘டைகா…. டைகா’ என அவள் நீரினுள் முணுமுணுத்தாள். பின்னர் மெதுவாக அவர்களை நோக்கி வந்தாள். வார்னர் மீண்டும் உள்ளே குதித்து லிண்டாவை நெருங்கினான். அவன் கண்கள் அவளை ஆசையோடு பார்க்க பதிலுக்கு அவள் கண்கள் தூரத்தில் இருந்து ஏதோவொன்று தங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதைப் பார்த்தது.

‘என்ன பாக்குற லிண்டா?’ ‘அங்க யாரோ நம்மள நோக்கி வர்றாங்க.’ வார்னர் திரும்பி பார்க்க, அந்த தலை நீரின் உள்ளே சென்றது. அங்கே தண்ணீருக்கு நடுவே சிறு சிறு பாறைகள் இருந்தன. ‘அதெல்லாம் பாறைங்க. நீரோடத்துல உனக்கு அதெல்லாம் நகர்ற மாதிரி இருக்கு.’ எனக்கூறி அவளிடம் மீண்டும் விளையாட தொடங்கினான். இருப்பினும் அவள் நீரில் மூழ்கியவாறே அவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தாள். தற்போது அந்த இடத்தின் சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. நீரின் வெப்பம் அதிகமானது. காற்று சற்று பலமாக வீச ஆரம்பித்தது. லிண்டாவிற்கு ஏதோ இந்த இடத்தில் சரியில்லை என்று உள்ளுணர்வு கூறியது. ‘வார்னர் நாம இந்த இடத்துல இருந்து உடனே போய்டலாம். எனக்கு எதுவோ சரியா படல.’ அவனுக்கும் அவ்விடத்தில் ஏதோ அசௌகரிய உணர்வு தோன்றியது. ‘அட இப்பதான வந்தோம். இன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு போலாம்.’ என்று பதிலளிக்க, அக்கணம் அங்கே ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகும் சத்தம் அந்த ஓடும் நீரோசையும் தாண்டி வார்னருக்கு கேட்டது. ஆனால் அவன் சுற்றும் முற்றும் பார்த்தும் அங்கே யாருமில்லை.

‘உனக்கு அது கேக்குதா லிண்டா?’ ‘என்னது?’ ‘ஒரு பொண்ணு அழுகுற குரல்’ ‘இல்லையே.’ தற்போது அந்த அழுகுரல் பயங்கர ஓலமாக மாறியது. அதே சமயம் நீரின் ஓட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. வார்னரால் அந்த அழுகுரலை சகிக்க முடியவில்லை. அது எங்கிருந்து வருகிறது என்றும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. கண்களை இறுக்கி காதை பொத்திக்கொண்டான். ‘என்னாச்சுங்க. இங்க எந்த சத்தமும் வரலியே.’ என சற்று பதட்டத்துடன் கூறி லிண்டா பின்புறம் திரும்பிப் பார்க்க, நொடிப்பொழுதில் வார்னர் முன் நீரில் இருந்து எழுந்த அவள், அவனை அப்படியே நீருக்குள் அமுக்கி மூழ்கவைத்தாள். திரும்பிப் பார்த்த லிண்டா தன் கணவரைக் காணாமல் திடுக்கிட்டாள். ‘வார்னர்…வார்னர்’ எனக்கூறி அவன் இருந்த இடத்தில் கைகளால் தேடினாள்.

அவன் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, லிண்டா நீரில் மூழ்கிப் பார்த்தாள். அவள் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. சில நொடிகளில் அவளுக்கு ஒரு பத்து மீட்டர் தள்ளி வார்னர் நீரில் இருந்து எழுந்தான். அப்போது அவன் முகத்தில் தோன்றிய பய ரேகைகளை லிண்டா கவனிக்கத் தவறவில்லை. ‘வார்னர்….வார்னர்’ என அலறியபடியே லிண்டா அவனை நோக்கி வேகமாக நீந்திக்கொண்டு வந்தாள். வார்னர் லிண்டாவை நோக்கி ஏதோ சத்தமாக கூறினான். ஆனால் அது எதுவும் லிண்டாவின் காதுகளுக்கு கேட்கவில்லை. அதேசமயம் அவன் கைகளால் செய்த சைகையானது ‘நீ இங்க வராதா லிண்டா’ என்பதைப் போல் இருந்தது.

அந்த சைகைகளை கவனித்தும், பொருட்படுத்தாது லிண்டா பதட்டத்துடன் அவனை நோக்கி வந்தாள். பின்பு ஒருவழியாக நீந்தி அவனருகில் சென்று, அவனை பிடித்து இறுக்க கட்டியணைத்தாள். அக்கணம் அவனுக்கு பின்புறம் நீரில் ஒரு பெண்ணின் தலை மட்டும் சிறிதளவு வெளியே தெரிந்தது. அதைகண்டு லிண்டா பயங்கரமாக கத்தினாள். அதன் கண்கள் மிகவும் சிவந்து பயங்கரமாக காட்சியளித்தது. அவள் அலறி வார்னரை சற்று விடுவிக்க, வார்னர் திடுக்கிட்டு திரும்ப, நொடிப்பொழுதில் அவன் காலை யாரோ நீருக்கு அடியில் இருந்து இழுத்ததைப் போல மீண்டும் உள்ளே விழுந்தான். தற்போது அந்த தலையையும் அங்கு காணவில்லை. அதேசமயம் ஆற்றின் நீரோட்டம் வெள்ளம் வந்ததைப் போல அதிகமானது. அந்த ஓட்டத்தில் லிண்டாவும் நிற்க முடியாமல் நீந்திக்கொண்டே மீண்டும் வார்னரைத் தேடினாள். ‘ஆஹ்ஹ்…’ என சத்தம் கேட்க, அவள் பதறிப்போய் அக்குரல் வந்த இடத்தை நோக்கினாள்.

தூரத்தில் வார்னர் அந்த நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் நீரில் செல்லும் விதத்தைப் பார்த்தால், யாரோ அவனது ஒரு காலை பிடித்துகொண்டு தரதரவென இழுத்துச் செல்வதைப் போல் இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் லிண்டா அந்த வெள்ளத்தில் சிக்கி இருந்தாள். பின்பு எப்படியோ சமாளித்து அந்த நீரோட்டத்தின் வாக்கிலேயே நீந்தி முன்னேறிச் சென்றாள். ஆனால் அவள் கண்களுக்கு வார்னர் தெரியவில்லை. தன் கணவரைக் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அந்த வளைந்து வளைந்து செல்லும் ஆற்றில் கவலையுடன் வேகமாக நீந்தினாள்.

இறுதியாக அந்த ஆற்று நீரானது ஒரு முச்சந்திக்கு வந்து சேர்ந்தது. அவ்விடத்தில் காற்று வேகமாக வீசியது. மிகவும் கூரான முனை கொண்ட பல பாறைகள் அதன் கரைகளில் நிரம்பியிருந்தன. வார்னர் வந்த வேகத்திற்கு அந்த பாறைகளில் ஏதாவது ஒன்றில் இடித்திருந்தால் அவன் உடல் வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகள் போன்று மாறியிருக்கும். ஆனால் அவனது உடலில் எந்த சிறு காயமும் ஏற்படவில்லை. ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்த லிண்டா அதன் மையப்பகுதியில் நீர்ச்சுழல் ஒன்று உருவாகி இருப்பதையும், வார்னர் அந்த சுழலில் மாட்டி சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு அரண்டு போனாள். அப்போது அங்கே ஒரு பெண்ணின் சிரிக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டது. அது எங்கே இருந்து வருகிறது எனத் தெரியாமல் அவள் குழம்பினாள். மேற்கொண்டு லிண்டா வேகமாக வார்னரை நோக்கி முன்னேற, திடுக்கென நீரில் இருந்து தோன்றிய அவள் லிண்டாவின் கழுத்தை இருக்கப் பிடித்து தூக்கினாள்.

அவள் ஒரு கறுப்பின பெண் போன்று இருந்தாள். லிண்டா இதற்குமுன் இப்படியொரு கோரமான முகத்தை பார்த்தது இல்லை. அவளது பலம் மிக அதிகமாக இருந்தது. கண்களில் கோபம் மிதமிஞ்சி தெரிந்தது. லிண்டாவின் கால்கள் தரையை விட்டு மேலேறி அந்தரத்தில் தொங்கியது. அவள் கழுத்தை அழுத்திப் பிடித்திருந்ததால் மூச்சு விட சிரமப்பட்டாள். பிதிங்கிக் கொண்டு வந்த கண்கள் வழியே தன் கணவர் நீர்ச்சுழலுக்குள் முழுவதும் செல்வதைப் பார்த்தாள். பின்பு மூர்ச்சையாகிய லிண்டாவை அவள் அப்படியே தூக்கிப் போட, வேகமாக சென்ற அவள் உடலானது அங்கிருந்த ஒரு கூரான பாறையில் மோதி தலையில் பலத்த காயத்துடன் கரையில் விழுந்தாள். பின்பு அந்த மர்மப்பெண்ணும் அந்த சுழலுக்குள் சென்றாள். தற்போது ஆற்றின் நீரோட்டமும் அங்கு நிலவிய சூழ்நிலையும் பழைய நிலைக்கு திரும்பி இயல்பாக மாறியது.

சில மணிநேரங்கள் கழித்து அந்த வழியாக வந்த பழங்குடியைச் சேர்ந்த கானாஹோ என்பவன் கரையில் இரத்தம் பரவி இறந்து கிடந்த லிண்டாவின் உடலைப் பார்த்தான். உடனே அவன் வாய் தானாக குளறியது. கால்கள் மெதுவாக பின்னே செல்ல ஆரம்பித்தது. ‘அது வந்திருச்சி. மறுபடியும் வந்திருச்சி. இனி நிறைய பேர கொல்லப் போகுது. ஊலானா… ஊலானா… ஊலானாஹ்ஹ்ஹ்’ என முனகிக்கொண்டே அங்கிருந்த ஓடினான்.

***

ஐந்து நாட்கள் கழித்து

தொழிலதிபரான வார்னர் அமெரிக்காவில் சற்று வசதி படைத்தவர் என்பதால் உள்ளூர் காவல்துறைக்கு காணமல் போனவரை உடனே கண்டுபிடிக்குமாறு பெரிய அளவில் இருந்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் தேடுதல் வேட்டையை முடிக்கி விட்டிருந்தாலும் அந்த காட்டில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம் வார்னரைத் தேடி அவனது தம்பி ஹாரி டெவில்ஸ் ஃபூலிற்கு வந்திருந்தான். தன் அண்ணனுக்கு என்னதான் நடந்தது என தெரிந்துகொள்ள முடிவெடுத்து ஹாரி அவனே களத்தில் இறங்கினான். அவனுடன் அவனது நண்பனும் மற்றும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருமான ஹூகோவும், உள்ளூர் போலீஸ் டிடேக்டிவ் அதிகாரியான கெவினும் மற்றும் அம்மூவருக்கும் துணையாக லோக்கல் கைடான எரிக் என்பவரும் வந்திருந்தார்.

பின்பு அந்த நால்வரும் சேர்ந்து மதிய வேளையில் அந்த ஆற்றைச் சுற்றியிருந்த காட்டுக்குள் சென்றனர். ஐம்பத்தாறு வயதான எரிக்கிற்கு அந்த காட்டில் அனுபவம் அதிகம். மற்ற மூவருக்கும் வயது முப்பதிற்குள்ளேதான் இருக்க வேண்டும். மரங்கள் சூழ்ந்து மிகவும் அமைதியாக அவ்விடம் விளங்கியது. அவ்விடத்தில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது என அந்த சுழலைப் பார்த்ததும் ஹாரி உணர்ந்து கொண்டான். பின்பு சற்று கோபத்துடன் எரிக்கைப் பார்த்து ‘ஏன் அந்த காட்டுவாசிப்பய வரல. நான்தான் நெறைய பணம் தறேன்னு அவன்கிட்ட சொல்ல சொன்னன்ல.’ ‘அது வந்து…..அது’ ‘நீங்க ஒன்னும் சொல்லவேணா எரிக். எனக்கென்னவோ அந்த காட்டுவாசிங்கதான் பணத்துக்காக எங்க அண்ணன கடத்தி இருக்கலாம்னு தோணுது. அதான் அவன் வரல.’ ‘அப்படியில்ல சார்.’ ‘வேற எப்படி எரிக்’ ‘அந்த இனம் உங்க அண்ணன ஊலானாங்குற பேய்தான் தூக்கிட்டு போய் இருக்கனும்னு நம்புறாங்க சார்.’ ‘என்ன மடத்தனம் இது. அந்த காட்டுப் பயலுகளுக்கு கொஞ்சம் கூட அறிவே கெடையாதா.’ அப்போது கெவின் இடைமறித்து ‘என்னது ஊலானாவா. அதெல்லாம் நாட்டுபுற கட்டுக்கதையாச்சே. இன்னுமா அவங்க அத நம்புறாங்க’ என்க, அதற்கு எரிக் ‘ஆமா சார். அதான் எந்த ஆம்பளையும் உதவிக்கு வர மாட்றானுங்க.’

அப்போது ஹுகோ சற்று ஆர்வத்துடன் தனது கண்ணாடியை சரி செய்துகொண்டு ‘என்னது பேயா. அது என்ன கதை கொஞ்சம் சொல்லுங்களேன்.’ என்றான். நால்வரும் அந்த காட்டிற்குள் நடந்து கொண்டே செல்ல, எரிக் ஊலானாவின் கதையை சொல்ல ஆரம்பித்தார். ‘ஒரு காலத்துல இந்த இடத்துல நிறைய பழங்குடி இனங்கள் இருந்துச்சு. அதுல கொஞ்சம் பெரிய மற்றும் செல்வாக்கான இனம்தான் இடிஞ்சி பழங்குடி. அந்த இனத்துல பிறந்தவதான் அந்த ஊலானாங்குற பொண்ணு. அவ பொறந்ததும் அவளோட அம்மா இறந்து போக, அவ அப்பாதான் அவள வளர்த்தார். அவளுக்கு இந்த காட்டையும் மலையையும் ரொம்ப பிடிக்கும். இந்த காட்டையே தன்னோட அம்மாவா நெனச்சிகிட்டா. சந்தோஷமா காட்டுல சுத்திகிட்டு இருந்த அவ, பருவமடைஞ்சதும் அழகு கூடி ஒரு பேரழகியா மாறுனா. அவ மேல அப்போதைய இடிஞ்சி இனத்தலைவன் வாரூனூவுக்கு ஒரு கண்ணு. ஆனா அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகள் இருந்துச்சு. அதுமட்டுமில்லாம அப்பவே அவனுக்கு அறுபது வயசு.

அவ மேல இருந்த மொகத்துல அவள எனக்கு கட்டிவச்சே ஆகணும்னு அவளோட அப்பாவ நச்சரிக்க ஆரம்பிச்சான். அவனும் ஊர்த்தலைவன மீறி எதுவும் செய்யமுடியாது என நெனச்சு வேற வழி இல்லாம அவனுக்கு கட்டிவச்சான். சந்தோஷமா இருத்த அவளோட வாழ்க்க விருப்பமே இல்லாத ஒரு கிழவன கல்யாணம் பண்ணதுல இருந்து சோகமா மாறிடிச்சு. அப்புறம் சில நாட்கள் கழிச்சு அந்த சம்பவம் நடந்திச்சு.’ அப்போது அவர்களின் குறுக்கே அந்த ஆறு வந்தது. பின்பு அந்த நால்வரும் ஆற்றில் இறங்கி நடந்தனர். ‘அப்புறம் என்ன ஆச்சு. நீங்க எந்த சம்பவத்த சொல்றீங்க’ என்று ஹாரி கேட்டான். ‘அதுக்கப்புறம் ஒருநாள் காட்டுல வேற ஒரு இனத்த சேர்ந்த டைகாங்குற ஒரு அழகான இளைஞன் அவ கண்ணுல பட்டான். அவன பாத்தவுடனே ஊலானாவுக்கு ஒரு தீவிரமான காதல் உண்டாச்சு. கொஞ்ச நாள்ல அவனும் அவள காதலிக்க ஆரம்பிச்சான். இருவரும் ரொம்ப நெருக்கமா பழகுனாங்க.

ஆனாலும் ரெண்டு பேரும் வேற வேற இனத்த சேர்ந்தவங்க. இந்த விசயம் அவங்களோட ரெண்டு குழுவுக்கும் சீக்கிரமாவே தெரிஞ்சிடுச்சு. ஆனா அதுக்குள்ளே அவங்க அந்த இடத்த விட்டே போய்டலாம்னு முடிவு பண்ணி காட்டுக்குள்ள ஓடிட்டாங்க. விஷயம் தெரிஞ்சதும் கோபத்துடன் வாரூனூவும் சில ஆட்களை கூட்டிக்கொண்டு அவங்கள விரட்டிப்பிடிக்க போனான். அதே சமயம் டைகாவோட குழுவும் ஓடிப்போனவன பிடிக்க வந்திருந்தாங்க. கடைசியா ரெண்டு பேரும் காட்டுல ஒரு இடத்துல வசமா மாட்டிக்கிட்டாங்க. ரெண்டு பேரையும் வலுக்கட்டாயமாக பிரிச்சி அவங்கவங்க ஊருக்கு கூட்டிட்டு போனாங்க. ஆனா போற வழியில ஊலானா மட்டும் அவங்ககிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சு வந்தா, ஆனா டைகாவால வர முடியல. அதனால வேறே வழி தெரியாம கவலையோட அவ மலையோட ஒரு விளிம்புல இருந்து ஆத்துல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டா.’ என்று எரிக் அந்த கதைய முடிக்க, ஹாரி சற்று கேலியான சிரிப்புடன் ‘இதுதான் அவளோட கதையா. நான் என்னவோ ஏதோன்னு நெனச்சேன். போயும் போயும் ஒரு கள்ளக் காதல் கதைக்கா இந்த காட்டுவாசிங்க இப்படி பயப்படுறாங்க.’ என்றான்.

அதற்கு கெவின் ‘கதை இன்னும் முடியல ஹாரி. இந்த ஆத்துக்கு நடுவுல பெரிய ஆழமான ஒரு பள்ளம் இருக்கு. அது அவ விழுந்ததால ஏற்பட்டதுன்னு நினைக்குறாங்க. இந்த ஆத்துல அடிக்கடி நீரோட்டத்தோட வேகம் அதிகரிக்கிறதுக்கு அவ அழுவும் போது உருவாகுற கண்ணீர்தான் காரணம்னு நம்புறாங்க.’ என்றான். எரிக் அதற்கு ‘தான் விரும்புன ஆள அடைய முடியாததால அவளோட தீராத ஆசை குறையாம, இந்த இடத்துலயே பேயாக சுத்துறதாகவும். இந்த இடத்துக்கு தனியா வர சில இளம் ஆண்கள அவ ஆத்துக்குள்ள இழுத்துக்குறதாகவும் நம்புறாங்க.’ என்றார். ‘இதெல்லாம் நம்புறதுக்கு நான் முட்டாள் இல்ல. அங்க பாத்தீங்களா, அந்த பாறைகள் எவ்வளவு ஷார்ப்பா இருக்குன்னு. குளிக்க வந்தவங்க அதுல மோதிகூட செத்துருக்கலாம். அதுமட்டுமில்லாம நீங்க சொன்ன அந்த ஆழமான பள்ளத்துல மாட்டி நீந்த முடியாம செத்திருக்கலாம். ஆழமான பகுதிக்கு உடல் போனதால அவங்க டெட்பாடி கிடைக்காம போயிருக்கும்’ என்று எரிச்சலாக கூறினான்.

அதற்கு கெவின் ‘நீ சொல்ற மாதிரி கூட இருக்கலாம். ஆனா 1959-ல இருந்து இதுவரைக்கும் பதினேழு பேர் இங்க மாட்டி செத்து போய் இருக்காங்க. அவங்க எல்லாருமே இளைஞர்கள். ஒரு சிலரத் தவிர மத்த யாரோட பாடியும் கெடைக்கல. அதுதான் சந்தேகமா இருக்கு. ஏற்கனவே இங்க நெறைய இடத்த தட பண்ணியாச்சு. இருந்தும் ஆண்கள் காணாம போறது தொடர்ந்து கிட்டே இருக்கு. இன்னும்கூட ராத்திரி நேரத்துல இங்க ஆத்தோரமா போகும்போது ஒரு பெண் அழுகுற குரல் கேக்குறதா நெறைய பேர் சொல்றாங்க. இதனால உயிருக்கு பயந்து ஆளுங்க வராம, இந்த ஊரோட சுற்றுலா வருமானமே குறைஞ்சு போச்சு. இந்த ஊரு அந்த வருமானத்த நம்பிதான் இருக்கு. பேசாம அந்த பள்ளத்த பாம் வச்சி தகர்த்துறலாம்னு பாத்தோம். ஆனா அதுக்கு அரசாங்கத்துகிட்ட இருந்து அனுமதி கிடைக்கல. ச்சே…’ என்று வருத்ததுடன் கூறினான்.

அதற்கு ஹாரி ‘ஊலானாவும் இல்ல. ஒரு ஊறுகாயும் இல்ல. இதெல்லாம் கட்டுக்கத. ஆனா இங்க வேற ஏதோ மர்மம் இருக்கு. அத என்னன்னு கண்டுபிடிக்கணும். அதுக்குத்தான் இவன் நம்ம கூட வந்திருக்கான். இவன வச்சி இங்க ஊலானான்னு எந்த பேயும் இல்லன்னு நான் ப்ரூஃப் பண்றன்.’ என்று கூறி தன் நண்பன் ஹுகோவின் முதுகில் தட்டினான். அதற்கு ஹூகோ சற்று சிரிக்க, ‘அடுத்து நாம எங்க போகணும்’ என எரிக் கேட்க, ‘ஆத்துல அந்த ஆழமான பள்ளம் இருக்குற இடத்துக்கு போகணும்’ என்று ஹுகோ பதிலளித்தான். பின்பு நால்வரும் அந்த முச்சந்தியை நோக்கிச் சென்றனர்.

***

அந்த வாட்டர் ஹோலுக்கு பக்கத்தில் இருந்த ஒரு பாறையில் தனது முதுகுப் பையில் எடுத்து வந்திருந்த சில கருவிகளை சரியாக பொருத்திக் கொண்டிருந்தான், ஹுகோ. ஹாரி அவனுக்கு உதவி செய்ய, எரிக் அவர்கள் என்ன செய்கிறார்கள் எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த கெவின் ‘என்ன செய்கிறீர்கள்’ எனக் கேட்டான். ஹுகோ ‘தெர்மல் இமேஜிங் சார். இதன் மூலமா இந்த பள்ளத்துல ஏதாவது வித்தியாசமா இருக்கான்னு பாக்க போறோம். அதுக்கு முதல்ல இந்த கம்பிய அந்த பள்ளத்துக்கு நடுவுல நேரா வைக்கணும். நீங்க கொஞ்சம் போட்டுட்டு வாங்க சார்’ எனக்கூறி அந்த கருவியோடு நீண்ட வயரால் பொருத்தப்பட்டிருந்த சற்று கனமான கம்பியை கெவினிடம் நீட்டினான். அவரும் மனதில் அவனை சபித்தவாறே தனது சட்டையையும் பேண்டையும் கழட்டிவைத்தவிட்டு அந்த கம்பியுடன் ஆற்றில் இறங்கினார். அவர் இறங்கிய நொடிப்பொழுதில், அவளின் தலை நொடிப்பொழுதில் வெளியே வந்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றது. கருநிறத்தில் கட்டுமஸ்தாக இருந்த கெவினைப் பார்த்ததும் அவளுக்கு ஆசை பெருக்கெடுத்தது. ‘டைகா…’ என அவனைப்பார்த்து அவள் நீருக்குள் முணுமுணுத்தாள்.

அந்த ஆற்றில் எந்த இடத்தில் இருந்தாலும் தான் விரும்பியவனை தூக்கிக் கொண்டு வந்துவிடும் அவளுக்கு, தற்போது தன் இடத்திலேயே முறுக்கேறிய ஒரு வாலிபன் நீந்துவதைக் கண்டதும் ஆசை பெருக்கெடுத்தது. அந்த நீரின் மையத்தை நோக்கி கெவின் செல்ல செல்ல இன்னொரு மூலையில் இருந்து ஒரு தலை அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பள்ளத்தின் நடுப்பகுதியில் கெவின் அந்த கம்பியை விட்டதும், திரும்பி கரையில் இருந்த மூவரையும் முறைத்துப் பார்த்தான். ‘என்ன…என்ன ஆச்சு’ என எரிக் கேட்டதும், ‘உங்களுக்கு அது கேக்கலையா?’ ‘என்ன. இங்க எதுவும் கேக்கலையே’ ‘ஒரு பொண்ணோட அழுகுற சத்தம்.’ என்று கூறினான். அதைப்பார்த்த ஹாரிக்கும் ஹுகோவிற்கும் ஒன்றும் புரியவில்லை. அச்சமயம் அந்த கருவியில் நீரில் ஒரு உருவம் வேகமாக அங்கும் இங்கும் செல்வதை ஹுகோ கவனித்து திடுக்கிட்டான். பின்பு அவன் கெவினைப் பார்த்து மேலே வருமாறு கத்த ஆரம்பித்தான். ஆனால் கெவினிற்கு அந்த அழுகுரலைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. சத்தம் அதிகமாகி காதுகளை இறுக்க மூடிக்கொண்ட கெவினை நொடிபொழுதில் யாரோ உள்ளே காலைப் பிடித்து இழுக்க, சரக்கென்று நீருக்குள் சென்றான்.

அதைக்கண்ட எரிக் நொடிப்பொழுதில் கெவினை காப்பாற்ற நீரில் குதித்தார். நீந்திக்கொண்டே நடுப்பகுதியை அடைந்த எரிக்கின் தலைக்கு நேராக ஊலானாவின் தலை வந்து நின்றது. அதைகண்டு மரண பீதியில் எரிக் பின்பக்கமாக நீந்த, அவரது தலையைப் பிடித்து உடம்பில் இருந்து தனியாக பிடுங்கி தூக்கியெறிந்தாள்.  தூய்மையான அந்த நீர் முழுவதும் தற்போது எரிக்கின் இரத்தம் கலந்து சிகப்பு நிறமாக மாறி இரத்த ஆறாக ஓடியது. ஹாரியும் ஹுகோவும் பீதியில் அங்கிருந்து உயிருடன் தப்பித்தால் போதுமென வேக வேகமாக ஓடினர். அப்போதுதான் ஊலானா இன்னும் இறக்கவில்லை என்பதை இருவரும் உணர்ந்தனர். வேகமாக கண்ணுமண்ணு தெரியாமல் ஓடியதில் ஒரு கல்லில் கால்பட்டு இடறி ஹாரி கீழே விழ, அவனால் தடுக்கி ஹோகுவும் விழ, இருவரும் பாறைகளில் விழுந்து உருண்டு கொண்டே ஆற்றில் விழுந்தனர். தற்போது இருவருக்கும் ஊலானாவின் அழுகும் குரல் கேட்டது. அழுகை அதிகரிக்க அதிகரிக்க அந்த ஆற்றின் நீரோட்டம் அதிகமானது. அவர்கள் இருவரும் எவ்வளவு வேகமாக நீந்தினாலும் நீரின் வேகத்தை மிஞ்சி கரையை அடையமுடியவில்லை.

அப்போதுதான் அவர்களுக்கு பின்புறம் அந்த பள்ளத்தில் ஒரு பெரிய நீர்ச்சுழல் உருவாகி அங்கிருந்த மொத்த நீரும் உள்ளே செல்வதை இருவரும் கண்டனர். சுழலின் விளிம்பில் சுற்றிக்கொண்டிருந்த இருவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் விழிபிதுங்கி இருக்க, அச்சமயம் அந்த சுழலுக்கு பின்புறம் நின்று கொண்டிருத்த ஊலானாவை ஹுகோ பார்த்தான். மிகவும் கருமை நிறத்தில் அரக்கி போன்று இருந்த ஊலானா, அழுகும் போது ஏற்பட்ட கண்ணீர்த்துளிகள் நேராக நீரில் விழுவதைப் பார்த்தான். அத்துளி நீரில் விழுக விழுக அந்த சுழலின் வேகம் அதிகமாவதை ஹுகோ உணர்ந்தான். சுற்றிகொண்டே இருவரும் அந்த பள்ளத்திற்கு மிக அருகில் செல்லும்போது ‘இனி எல்லாம் முடிந்தது’ என ஹுகோ நினைத்தான். அப்போது சரியாக அந்த இடத்திற்கு எரிக்கிடம் முதலில் வரமுடியாது என்று கூறிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த கானாஹோ வந்தான். சுழலில் சிக்கி இருந்த இருவரையும் கண்டு அதிர்ச்சியடைந்து தன்னிடம் இருந்த கயிற்றை எடுத்து அவர்களை நோக்கி வீசினான்.

அதைக்கவனித்த அவர்கள் கடவுள் தான் தங்களுக்கு உதவுகிறார் என நினைத்து அதைப் பிடிக்க முயன்றனர். முதலில் ஹுகோ கயிற்றைப் பிடித்தான். பின்பு ஹாரி ஹுகோவின் காலைப் பிடித்தான். உடனே கானாஹோ கயிற்றை முழுபலம் கொண்டு இழுத்துக்கொண்டே பின்னால் சென்றான். அவர்கள் தப்பிப்பதைக் கண்ட ஊலானா இன்னும் நன்கு ஆழ ஆரம்பித்தாள். அதனால் அந்த சுழலின் வேகம் மிகவும் அதிகமானது. கானஹோவால் அதற்கு மேல் இழுக்க முடியவில்லை. இதற்குமேல் சமாளிக்க முடியாது என உணர்ந்த ஹுகோ தன் காலை உதறி மிதித்து தன் நண்பனை தள்ளி விட்டான். ‘ஹுகோ…’ என கத்திக் கொண்டே ஹாரி நீரின் உள்ளே முழுக, ஹுகோ கரையை அடைந்தான். சுழல் நின்றது. ஆறு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.

***

திடுக்கென்று கண்விழித்த ஹாரி, தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த இடம் ஒரு குகை போன்று இருந்தது. மேலும் அங்கு வீசிய துர்நாற்றம் சகிக்க முடியாமல் வாந்தி வரும் அளவிற்கு இருந்தது. அங்கிருந்து வெளியே செல்ல எந்த வழியும் இல்லாமல் இருந்தது. மேலும் தரையில் ஒரு இடத்தில் இருந்த பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது. அப்படியென்றால் இதுதான் உள்ளே வெளியே செல்ல வாயிலாக இருக்க வேண்டுமேன அவன் யூகித்தான். அந்த ஆழமான பள்ளத்திற்கு அடியில் உள்ள ஒரு துளை மூலம் சென்றால் பக்கவாட்டில் உள்ள ஓர் மூடப்பட்ட நீர் புகாத குகைக்கு, அதன் அடிப்பகுதி வழியாக செல்லலாம் என்று அங்கிருந்த யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஊலானாவைத் தவிர. தற்போது ஹாரி சற்றுத் திரும்பிப் பார்த்தான். அங்கே பல உடல்களின் எலும்புக் கூடுகள் கிடந்தன. அதற்கு சற்றுத் தள்ளி சில சிதிலமடைந்த உடல்களும் இருந்தன. ஹாரி அதில் வார்னரின் அழுகிய உடல் இருப்பதைக் கண்டு மிரட்சியடைந்தான்.

இதுவரை இந்த ஆற்றில் காணமல் போன அனைத்து இளம் ஆண்களையும் இவள்தான் கடத்தி இங்கு கொண்டு வந்துள்ளாள் என்பதை அவன் உணர்ந்ததும், பயம் அவன் உள்ளத்தில் இருந்து உடம்பு முழுவதும் பரவியது. ஆனால் எதற்கு என்றுதான் அவனுக்கு விடை தெரியவில்லை. அக்கணம் ‘ஆஹ்ஹ்ஹ்ஹ்…’ என்று கெவின் மரண வலியில் கதறும் சத்தம் கேட்டு, அந்த குகையின் சுவற்றில் இருந்த ஒரு பெரிய ஓட்டையை பார்த்தான். அதில் அவன் கண்ட காட்சியால் அவனுக்கு இரத்தம் உறைந்து போனது. அதில் படுத்துக்கொண்டிருந்த கெவினின் மீது ஏறி ஊலானா வெறித்தனமாக புணர்ந்து கொண்டிருந்தாள். இருவரின் உடலிலும் துணி இல்லை. அப்போதுதான் ஹாரி தனது உடலிலும் எந்த துணியும் இல்லை என்பதை உணர்ந்தான். அவன் பயந்து பின்னால் செல்ல, டக்கென ஊலானா தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு திரும்பி ஹாரியைப் பார்த்தாள். பின்பு மெதுவாக அந்த ஓட்டையில் இருந்து வெளியே வந்தாள். நிர்வாணமாக இருந்த ஹாரியைப் பார்த்ததும் அவளுக்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது. ‘டைகா….டைகா’ என்று கூறி அவள் ஹாரியைக் கட்டிப்பிடித்தாள். அதில் அவளது அசுர பலத்தை ஹாரி உணர்ந்தான்.

‘உனக்காகத்தான் நான் இவ்வளவு நாள் காத்திட்டிருந்தன் டைகா. வா நாம இப்பவே ஒன்னு சேருவோம். மத்தவங்க மாதிரி நீயும் சாகமாட்டன்னு நான் நம்புறன் டைகா.’ என்று கூறியதும் ஹாரிக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது. ‘அவ்வளவுதான். நான் சேத்தேன்’ என ஹாரி மரணபீதியில் இருக்க, ஊலானா சில நிமிடங்களுக்கு முன் செத்துப்போன கெவினின் உடம்பை அந்த ஓட்டையில் இருந்து தூக்கி ‘ச்சீய்….நீ என் டைகா இல்ல.’ என்று வெறுப்புடன் கூறி அவள் நின்ற இடத்தில் இருந்தே வார்னரின் பிணம் கிடந்த இடத்திற்கு அருகில் வீசினாள். அப்போதுதான் ஹாரி ஒரு உண்மையை உணர்ந்தான். இன்னும் சில மணி நேரங்கள் கழித்து, பல கொடுமைகளை அனுபவித்து இறந்த பின்னர், தானும் இதே மாதிரி தூக்கி வீசப்படுவோம் என்று.

-முற்றும்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *